மதம் மாறிய புலையர்களை ஏற்கெனவே மதம் மாறியிருந்த நாடார்களும் (சாணார்களும்), ஈழவர்களும் “புதுக் கிறிஸ்தவர்கள்” என்று கேலி செய்தனர். புலையர்கள் படிக்கத் தெரியாத நிலையில் இருந்தாலும், பாதிரியார்கள் அவர்கள் கைகளிலும் பைபிள்களைக் கொடுத்து விடுவர். அவர்களை மற்ற ஜாதியினர் “மடப்புலையன்”, “மடப்புலையி” என்று கேலி செய்தனர். இதை யெல்லாம் அய்யன்காளி தன் மக்களிடம் எடுத்துக் கூறி மத மாற்றத்திற்கு எதிரான பரப்புகளை மேற்கொண்டார்.
சாது ஜன பரிபாலன சங்கம் தன் முதல் குறிக்கோளாக தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியறிவு கொடுப்பதை எடுத்துக் கொண்டது. திருவாங்கூர் அரசிற்கு அதற்காக பல மனுக்களை அனுப்பினது. 1909 சி.பி.இராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர் திவானாகப் பொறுப்பேற்றார். அய்யன்காளியும், மற்ற சங்க உறுப்பினர்களும் திவானை நேரில் சந்தித்து, கல்வி உரிமை வேண்டி மனு கொடுத்தனர். 1907களிலேயே அரசு அதற்கான ஆணை பிறப்பித்ததாக திவான் அவர்களிடம் தெரிவித்தார். அதை ஆராயத் துவங்கிய அய்யன்காளி மேல் ஜாதிப் பார்ப்பனர்கள் அந்த ஆணையை வெளியே விடாமல் மறைத்து வைத்ததைத் தெரிந்து கொண்டார். புலையர், பறையர், குறவர் இனக் குழந்தைகள் மேல் ஜாதிக் குழந்தைகளைத் தொட்டால் அவர்கள் அசுத்தமாகி விடுவார்கள் என்று காரணம் கூறி, பார்ப்பனர்கள் அந்த அரசு ஆணையையே மறைத்து ‘சதி’ செய்துவிட்டனர். பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்களாக இருந்ததால் இந்தக் சதிக்கு அவர்களும் உடந்தையாயிருந்தனர். தீண்டத்தகாத ஜாதிப் பிள்ளைகள் நம்பூதிரிப் பார்ப்பனப் பிள்ளைகளைத் தொட்டு விட்டால் எவ்வளவு கெடுதல்! தீண்டத்தகாத குழந்தைகள் கல்வியறிவு பெற்று முன்னேறிவிட்டால், எதிர்காலத்தில் அடிமை ஊழியம் பார்ப்பது யார்? என்பதே மேல்ஜாதியினர் கேள்விகள்.
அதனால் கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் அரசாணையைப் பொருட்படுத்தவேயில்லை. அந்த கீழ் ஜாதிக்காரன் இரத்தத்தை வியர்வையாக்கி விளைவிக்கும் உணவுப் பொருள்களை ஜன்மிகள் (நிழக்கிழார்கள்) உண்ணலாம். அதற்கு தீட்டு இல்லை. ஆனால் அந்த உழைப்பாளிகளின் பிள்ளைகளுக்குப் படிக்கும் இடத்தில் மட்டும் தீட்டா? என்று அய்யன்காளி வினா தொடுத்தார். “ எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களில் அனுமதி இல்லையென்றால் நாங்களும் வயல்களில் வேலை செய்ய மாட்டோம்” என்று அய்யன்காளி சூளுரைத்தார். ஜன்மிகள் (நிலக்கிழார்கள்) கடும் கோபம் கொண்டனர்.
விவசாயக் கூலிகள் அய்யன்காளியின் பின்னால் அணிதிரண்டனர். ஜன்மிகள் அதைப் பொருட் படுத்தவில்லை. அவர்கள் எல்லாம் செல்வந்தர்கள். ஆனால், விவசாயக் கூலிகளோ ஏழைகள். பல இடங்களில் போராட்டக்காரர்களைக் கடுமையாக ஜன்மிகள் தண்டித்தனர். அதிகாரிகளும் (அனைவரும் மேல் ஜாதிக் காரர்கள்) ஜன்மிகளுக்குத் துணை போயினர். அய்யன்காளி மேலும் சில கோரிக்கைகளை வைத்தார். “ஆறு நாட்கள் வேலை, ஞாயிறுன்று ஓய்வு, விவசாயிகள் செய்யும் சிறிய குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அவர்களை அடிமையாகக் கருதும் நடைமுறையை நிறுத்த வேண்டும். பொது வழிகளில் நடக்கும் உரிமை வேண்டும் என்பவையே அவை! தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நிலக்கிழார்களுக்கு எந்த ஒத்துழைப்பும் தரமாட்டோம் என்றார்” அய்யன்காளி.
அய்யன்காளி ஒவ்வொரு இடமாக நடந்தே போய் அடிமைத் தீயில் பொசுங்கிக் கிடந்த மக்களிடையே பிரச்சாரம் செய்தார். ஒன்றுபட்டு, மனம் தளராமல் நின்றால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று அழுத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் அவர். ஜன்மிகளும் அந்த எதிர்ப்பை எதிர்கொள்ளத் தயாரானார்கள். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தனர். சிலர் சில அற்ப சலுகைகளை அடிமைகளுக்கு வழங்கி, அவர்களை பணிக்கு வரத் தூண்டினர். அவர்களில் சிலர் பணிக்கும் செல்லத் துவங்கினர். அய்யன் காளியின் படை அவர்களைக் கடுமையாக எதிர்த்தது. அவர்களும் பணிக்குச் செல்லாமல் பின் வாங்கினர்.
ஏழ்மையின் பிடியில் இருக்கும் அடிமைத் தொழிலாளிகள் எத்தனை நாள் தாக்கும் பிடிப்பார்கள். ஜன்மிகளோ இந்த ‘பஞ்சப் பராரிகள்’ எப்படியும் மீண்டும் நம்மிடம்தானே வயிற்றுப் பாட்டிற்கு வந்து நிற்க வேண்டும் என்ற அகந்தையோடு இருந்தனர். வறுமையில் வாடும் கூலிகளுக்கு அய்யன்காளி ஆறுதல் கூறினார். “விழிஞ்ஞம்’ கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களோடு தொடர்பு கொண்டார். வேலை இல்லாத தொழிலாளர்களை தங்களோடு இணைத்துக் கொண்டு மீன் பிடிக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தனர். விவசாய வேலை தவிர மற்ற வேலைகளில், அந்த அடிமைத் தொழிலாளிகள் செய்யக்கூடிய வாய்ப்பை அய்யன்காளி ஏற்காடு செய்தார். இந்த செயல்பாடுகளால் விவசாயக் கூலிகள் நிலங்களில் இறங்கவில்லை. இது ஜன்மிகளுக்குப் பேரிடியாக மாறியது. வேறு வழியின்றி ஜன்மிகள் இறங்கி வரத் துவங்கினார். திவான் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
தெருக்களில் நடக்கும் உரிமை, பள்ளிக் கூடங்களில் சேர அனுமதி, வார விடுமுறை, கூலிகளில் உயர்வு போன்றவற்றிற்கு முடிவாக ஜன்மிகள் இறங்கி வரும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், தென் திருவாங்கூரின் சில பகுதிகளில் செல்வந்தர்களான சில நாயர் ஜன்மிகள் ஏழைத் தொழிலாளர்களை எதிர்த்துக் கலவரம் செய்து கொண்டுதான் இருந்தனர்.
அப்பொழுது கல்வி அதிகாரியாக ஆங்கிலேயர்
திரு.மிச்சேல் திருவாங் கூருக்கு வந்தார். அய்யன் காளி அவரிடம் மனு கொடுத்தார். திவான் ராஜகோபாலாச்சாரியோடு கலந்து பேசிய கல்வி அதிகாரி மிச்சேல் 1.3.1910 அன்று ஓர் ஆணை பிறப்பித்தார். புலைய மாணவர்களை, ஈழவ மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அந்த ஆணை கூறியது. ஆனால், ‘பள்ளியில் சேர்க்கும் அதிகாரத்தை’ தலைமையாசிரியரிடம் இருந்து நீக்கவில்லை. இதனால் மீண்டும் பள்ளிகளில் இடமில்லை என்று கூறி தலைமையாசிரியர்கள் புலையக் குழந்தைகளுக்கு இடமளிக்க மறுத்தனர்.
சிறீ மூலம் மக்கள் சபை உறுப்பினரான
பி.கே.கோவிந்த பிள்ளை புலையர்களுக்கு ஆதரவாக சபையில் வாதிட்டார். அந்தக் குழந்தைகளுக்குத் தனியாகப் பள்ளிக் கூடங்கள் துவக்க வேண்டும் என்று கோரிக்கையை சபையில் வைத்தார். புலையர்கள் படும் இன்னல்களை சபையில் எடுத்து விளக்கமாகப் பேசினார். அவர்களின் பிரச்சினைகளின் ஆழத்தை உணர்த்தும் வகையில் பேச அந்த ஜாதியில் இருந்தே சபை உறுப்பினராக்க வேண்டும் என்று கோவிந்தப் பிள்ளை வாதாடினார்.
அவர் வாதத்திற்கு சபையில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. திவான் ராஜகோபாலாச்சாரி செய்தியை மன்னருக்குத் தெரிவித்தார். மன்னரும் ஒப்புதல் தெரிவித்தார். பத்மாநாபப் பிள்ளை, அய்யன் காளியின் பெயரை சிறீமூலம் மக்கள் சபை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்தார். திவானும் அதை ஏற்றுக் கொண்டு 5.12.1911 அன்று அரசு கெசட்டில் அய்யன்காளியை சிறிமூலம் மக்கள் சபையின் உறுப்பினராக்கி நியமித்த உத்தரவை வெளியிட்டார். இந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தாழ்த்தப்பட்டவர், “தீண்டல்”, “தொடீல்” என்ற சமூகக் கொடுமைகளுக்கு ஆளானவர், நல்ல உடைகளையோ, அணிகலன்களையோ அணிய உரிமையற்றவர், கல்விச் சாலைகளை நெருங்க முடியாதவர், தெருக்களில் நடக்கக் கூட உரிமை இல்லாதவர் அரசின் அங்கமான சிறீ மூலம் மக்கள் சபையில் முதன்முதலாக நுழைந்து, மற்ற மேல்ஜாதி, ஆதிக்கவாதிகள் முன் தன் சிம்மக் குரலை எழுப்பும் வாய்ப்பைப் பெற்றார் என்பது எப்பேர்ப்பட்ட “புரட்சி”! அந்தப் புரட்சியின் நாயகன் அய்யன் காளியானாலும், காரணமானவர்கள் பத்மநாபப் பிள்ளையும், திவான் ராஜகோபாலாச்சாரியும் அல்லவா?
27.2.1912 அன்று, சிறீ மூலம் மக்கள் சபையின் எட்டாவது கூட்டம் விக்டோரியா ஜூபிலி ஹாலில் நடந்தது. வழமையாக மக்கள் சபைக் கூட்டத்திற்கு திவான் மட்டும் சாரட் வண்டியில் வருவார். அய்யன்காளி தன் சமூகத்தின் ‘அந்தஸ்தை’ உயர்த்திக் காட்டுவதற்கென்றே தன்னுடைய அலங்கரிக்கப்பட்ட வில்வண்டியில், மேல்ஜாதி பார்ப்பனர்கள் போல் நீளமான கருப்புக் கோட்டும், தலைப் பாகையும், சந்தனப் பொட்டும், மேல் துண்டும், சிகப்புக் கல் கடுக்கனும் அணிந்து ஓர் அரசனைப் போல் அந்தக் கூட்டத்திற்குக் கம்பீரமாக வந்தார். அவர் உடல்வாகும், கம்பீரமும் எந்த வகையிலும் ஒரு மேல்ஜாதிக்காரரின் தோற்றத்திற்குக் குறைவாக இல்லை. (அய்யன் காளியின் வில்வண்டிப் போராட்டத்தைப் பாராட்டி ஜான் ஹென்றி என்ற அய்ரோப்பியர் பரிசளித்த கருப்புக் கோட்டைத்தான் அய்யன்காளி அணிந்து வந்தார்.)
(சான்று: “சிறீ மூலம் மக்கள் சபையில் அய்யன் காளி!” – கல்லட சசி.)
(தொடருவேன்…)
