இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானதாகவும், சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் கருதப்படுவது நீதித்துறை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியலமைப்பின் அடிப்படைப் பண்பு. ஆனால், சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விவாதங்களைப் பெரிதும் கிளறியுள்ளன.
வீட்டுப் பணியாளர்களும்,
தொழிற்சங்க உரிமையும்!
வீட்டு வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கு எனத் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரியபோது, “வீட்டு ஜன்னலுக்குள் தொழிற்சங்கங்கள் எட்டிப்பார்ப்பதை நிறுத்த வேண்டும்” என்றும், “தொழில் வளர்ச்சியின் பின்னடைவிற்குத் தொழிற்சங்கங்களே காரணம்” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைப்புசாரா தொழிலாளர்களின் உரிமைகளை விட, தனிநபர் சுதந்திரம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
மாதவிடாய் விடுமுறை:
பாதுகாப்பா அல்லது பாரபட்சமா?
மாதவிடாய் விடுமுறையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் உலக அளவில் கவனிக்கப்பட்டுள்ளன.
“கட்டாய விடுமுறை அளித்தால் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கும், இது பெண்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் மற்றும் அவர்களை ஆண்களுக்குச் சமமானவர்கள் அல்ல என்று நினைக்கத் தூண்டும்.” என்று கூறியது.
மாதவிடாய் கால வலியை ஒரு உடல்நலப் பிரச்சினையாகப் பார்க்காமல், அதை ஒரு ‘தடை’யாக நீதிமன்றம் சித்தரிப்பது சமூகத்தில் நிலவும் பழைய பிம்பங்களையே மீண்டும் உறுதிப்படுத்துவதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சமத்துவத்தின் இரட்டை நிலைகள்
அசாம் மாநில முதலமைச்சரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகள் தொடர்பான வழக்கில், எதிர்தரப்பினைப் பார்த்து “நீங்கள் ஒரு பக்கம் மட்டும் ஏன் பார்க்கிறீர்கள்?” என்று கேட்ட நீதிமன்றம், பெண்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் என்று வரும்போது, நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி உரிமைகளைத் தள்ளி வைப்பது விமர்சனத்திற்குள்ளாகிறது.
நீதித்துறை எனும் கடைசிப் புகலிடம்!
இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில், அதிகாரம் படைத்தவர்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சாமானிய மக்கள் செல்லும் கடைசி இடம் நீதிமன்றம் மட்டுமே. அங்கு வழங்கப்படும் தீர்ப்புகள் வெறும் சட்ட விதிகளாக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்திற்கான கருவிகளாக இருக்க வேண்டும்.
பெண்களின் பணிச் சூழல் கண்ணியமானதாகவும், அவர்களின் உடல்நலத்தைப் பேணுவதாகவும் இருப்பதே உண்மையான பாலின சமத்துவம். “பெண்கள் பலவீனமானவர்கள்” என்ற பிம்பத்தை உடைக்க முயலும் நீதிமன்றம், அவர்களின் இயற்கையான உடல் தேவைகளை அங்கீகரிக்கத் தவறுவது முரணானது. நீதித்துறை தனது கதவுகளைச் சாமானியர்களுக்காகத் திறந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், கால மாற்றத்திற்கு ஏற்ப முற்போக்கான பார்வைகளையும் உள்வாங்கிக் கொள்வதே ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும்.
