ஜென்மக்குணம் போகுமா?

2 Min Read

23-01-1927- குடிஅரசிலிருந்து…

சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம்.

அது போலவே இப்போது சட்டசபை தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்க பலம் இருக்கிறது என்பதாகக் கருதி இப்போது சட்டசபைக்குப் பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள்.  அதாவது முதலாவதாக, தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது.  தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக்கட்சி விஷயமல்ல.  இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லித் தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற்றுவிட்டு, இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.

இத்தீர்மானம் கொண்டுவந்தது கோவை பிரதிநிதி சிறீமான் சி.வி. வெங்கிட்ட ரமண அய்யங்காரே ஆவார். கோவை ஜில்லாவில் சிறீமான் டி.ஏ.இராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக்கொடுத்திருக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.  சிறீமான் அய்யங்காரை இது யோக்கியமா?  என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன்.  அதாவது, என் பணத்தினால் ஓட்டுச் சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத்தத்தத்தினாலும் ஓட்டுப் பெறவில்லை;  என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலைசெய்தார்கள்?  ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால்  அய்யங்காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான்.  மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  அதாவது, பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்துவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  இந்தக் கமிட்டி இருப்பதால் நாலு, இரண்டு பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளைக் காலேஜில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.  இந்த நாலோ, இரண்டோ பிள்ளைகள் படிப்பதுகூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்குக் கண்ணில் குத்துகிறபடியால், அடியோடு காலேஜுகளைப் பார்ப்பனச் சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள்.  இதெல்லாம் பார்ப்பன ருடைய தப்பிதம் அல்ல, பின்னையாருடையதென்றால் – அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுத் தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம்.  இன்னமும் என்ன என்ன நடக் குமோ பார்ப்போம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *