சென்னை, மார்ச் 27 பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்களில் உள்ள நச்சு ரசாயனங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.சுபத்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
சானிட்டரி நாப்கின்
சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் என்னென்ன என்பதைத் தயாரிப்பு நிறுவனங்கள் முழுமையாக வெளியிட வேண்டும். இதற்கான விதிமுறைகளை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும்.: டில்லியைச் சேர்ந்த ‘டாக்ஸிக்ஸ் லிங்க்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் சானிட்டரி நாப்கின்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், முற்றிலும் நச்சுத்தன்மையற்ற பொருட்களைக் கொண்டு சானிட்டரி பேட்களைத் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் ஜவுளித் துறை ஆகிய அமைச்சகங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதற்காக நான்கு வார கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
மாதிரி வாக்குப்பதிவு குறித்து
தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!
திண்டுக்கல், மார்ச் 27 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை எவ்வித முறைகேடுகளுமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு நாளன்று பின்பற்றப்பட வேண்டிய ‘மாதிரி வாக்குப்பதிவு’ குறித்த முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சரியாக 90 நிமிடங்களுக்கு முன்பாக, அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாதிரி வாக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறைப்படி:
அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் குறைந்தது 50 மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும், விவிபேட் இயந்திரத்தில் அச்சான ரசீதுகளின் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கையை முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின், அந்த ரசீதுகளை தனி உறையிலிட்டு சீல் வைக்க வேண்டும்.
இவை அனைத்தும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நவீன தேர்தல் நடைமுறைகளை ஆசிய நாடுகள் உட்பட சுமார் 16 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கற்றுச் செல்கின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை அவர்கள் தங்கள் நாடுகளிலும் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் நடைமுறைகளை எளிமைப் படுத்தி, எவ்வித புகார்களுக்கும் இடமின்றி தேர்தலை நடத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற சோகத்தையும் தாங்கிக் கொண்டு
பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு வந்து தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மாணவர்
சிவகங்கை, மார்ச்.27– சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு திடல் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தர்ஷன். இவர் காரைக்குடியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று (26.3.2026) இறுதித்தேர்வு நடந்தது. இந்ததேர்வுக்காக தர்ஷன் தயாராகி வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் (25.3.2026) இரவு மாணவரின் தந்தை செல்வக்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தர்ஷன்
இறப்பதற்கு முன்பு மகன் தர்ஷனிடம், “பெரிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை” என கூறியுள்ளார். இதனால் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற நன்றாக படித்துபெரிய ஆளாக வருவேன் என சபதம் எடுத்த தர்ஷன், சோகத்தையும் தாங்கிக்கொண்டு நேற்று (26.3.2026) காலை பொதுத் தேர்வு எழுத முடிவு செய்து தேர்வு எழுதச் சென்றார்.
தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து கதறி அழுதபடி தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். இந்த துயரச் சம்பவம் காண்போரின் கண்களை குளமாக்கி விட்டது.
