‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (7)

3 Min Read

தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைச் சமத்துவத்தை முழங்கினார். பிறகு அவரது கல்லறையும்கூட, ஜாதி ஒழிப்பு முழக்கத்தை முழங்க வைத்துத் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக்கான ஆயுதமாயிற்று என்பது இயக்க வரலாற்றுச் சிறப்புகளில் மகுடம் என்பதல்லவா?

இதோ தந்தை பெரியார் 1955இல் விடுத்த அறிக்கை பாரீர்!

 

அவமானச் சின்னத்தை அகற்றுக!

பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை

28.3.1955ஆம் தேதி அழகிரி நினைவு நாள் ஆதலாலும், நானும் அத்தேதியில் தஞ்சையில் இருக்க நேர்ந்ததாலும் அன்று நான் தஞ்சையில் உள்ள திரு. அழகிரியின் நினைவுச் சின்னத்திற்குச் சென்று மாலையிட்டு வரலாம் என்று கருதிச் சென்று வந்தேன். அதுசமயம் அந்தச் சுடுகாட்டில் ‘பார்ப்பனர்’ – ‘சூத்திரர்’ என்று இடம் பிரித்து “சூத்திரர்கள் இடம்” என்பதாகச் செதுக்கப்பட்ட கல் ஒன்று அங்கு நட்டு வைத்து இருப்பதைப் பார்த்தேன். இதைப் பார்த்தவுடன் என் மனம் சங்கடப்பட்டது. இக் கல்வெட்டுக்குச் சம்பந்தப்பட்ட இடத்தில்தான் திரு. அழகிரியையும், நெடும்பலம் திரு.சாமியப்ப முதலியார் அவர்களையும் அடக்கம் செய்யப்பட்டிருந்ததுடன், அவ்விருவர்களுக்கும் ஸ்தூபிகளும் கட்டப்பட்டிருந்தன. நான் அங்கிருந்து திரும்பி வரும்போது இக் கல்லைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்திவிடும்படி தஞ்சை முனிசிபல் கவுன்சிலுக்குச் சென்னை சென்றவுடன் ஒரு வேண்டுகோள் விடுவதென்று எண்ணிக் கொண்டு வந்தேன்.

தஞ்சையைவிட்டு நேரே சென்னைக்கு வராமல் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு வரவேண்டி இருந்தபடியால், அதை உடனே தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இப்போது இந்த வேண்டுகோளை தஞ்சை முனிசிபல் கவுன்சிலுக்குச் (நகராட்சி மன்றத்திற்கு) செய்து கொள்ளுகிறேன்.

அதாவது,

  1. தஞ்சை நகர புதைக்காடு – சுடுகாடு என்பதாக இருக்கும் இடத்தில் பின்புறம் கோடியில் ‘சூத்திரர்கள் இடம் என்பதாக, கல்லில் அடித்து (மைல் கல் போல்) நட்டு இருக்கும் அந்தக் கல்லானது, தஞ்சை நகர ஆட்சிக்கு சேர்ந்ததாயிருப்பதால், தஞ்சை நகர ஆட்சி மன்றத்தார் அருள் கூர்ந்து அக் கல்லை அப்புறப்படுத்திவிட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறேன்.

ஏனெனில்,

அந்தக் கல் திராவிட மக்கள் இனத்தையே இழிவுபடுத்தும் அறிகுறியாகக் காட்சி அளிக்கிறது. இன்று மக்களுக்குள்ள உணர்ச்சியைப் பொறுத்தும், மனிதத் தன்மையைப் பொறுத்தும் திராவிட நாட்டில் எந்த இடத்திலானாலும் இப்படிப்பட்ட பேதச் சின்னமும் இழிவுச் சின்னமும், பேத நடைமுறையும் இருந்து வருவது சிறிதும் ஏற்கக்கூடியதும் பொறுக்கக்கூடியதும் அல்ல என்றே கருதுகின்றேன்.

  1. மேலும் இப்படியாகவும் மற்றும் இதுபோன்ற தன்மையாகவும் இருந்து வரும் பேதச் சின்னமும், இழிவுச் சின்னமும் நடைமுறையும் தமிழ்நாட்டில் இன்று தஞ்சையில் மாத்திரமல்லாமல் மற்றும் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும், அந்த இடத்தில் உள்ள திராவிடத் தோழர்கள் அருள்கூர்ந்து அரசாங்கத்திற்கும் அந்தந்த இடத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அதை நீக்கிவிடும்படி வேண்டுகோள் செய்து கொள்ளுவதோடு, அருள் கூர்ந்து நமக்கும் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் பொதுமக்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

– ஈ.வெ.ரா.

(‘விடுதலை’ அறிக்கை 5.4.1955)

 

சுடுகாட்டிலும் ஜாதி வெறி!

“ஜாதியம் (Casteism) ஒழிய வேண்டும்” என்று பண்டிதர் நேரு அடிக்கடி கூறுகிறார். அவரைப் பார்த்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் கிராமஃபோன் மாதிரித் திருப்பிப் பாடுகிறார்கள்!

“பிராமண் – ஈயம்” என்று ஒரு சிலர் பித்தலாட்டப் பேச்சுப் பேசுவது போல், இவர்கள் “ஜாதி – ஈயம்” என்று பரப்புகிறார்கள். ஈயமாவது, இரும்பாவது? ஜாதி ஒழிய வேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும்; கொசு ஒழிய வேண்டும் என்றெல்லாம் பச்சையாகக் கூறக்கூடாதா?

தஞ்சை நகரசபைக்குச் சொந்தமான சுடுகாட்டில் “சூத்திரர்கள் இடம்” என்று பொறிக்கப்பட்ட கல் நடப்பட்டிருப்பதைப் பெரியார் அவர்கள் நேரில் கண்டு, வேதனைப்பட்டிருக்கிறார். அவரது அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறோம். அதன்படி நகரசபையினர் உடனே அந்தக் கல்லை அப்புறப்படுத்த வேண்டும். சுடுகாட்டில் ஆரியனுக்குத் தனியிடம் இருக்கக் கூடாது. தஞ்சையில் மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான  ஊர்களில் இந்த முறை இருந்து  வருகிறது. ஆச்சாரியார் ஆட்சியின்கீழ்  இவ் வேற்றுமையிருக்கலாம்; ஆனால், ஜாதி ஒழிப்பு உணர்ச்சி கொண்ட திரு. காமராசர் அவர்களது ஆட்சியின்கீழ் இந்த அவமானச் சின்னம் இருக்கக்கூடாது. இந்த வேற்றுமையும் இருக்கக்கூடாது.

உடனடியாக இந்த வேற்றுமை ஒழிக்கப்படாவிடில், இதற்காக ஒரு நாள் குறிப்பிட்டுக் கிளர்ச்சி செய்யுமாறு ஏற்பட நேரிடலாம் என்று நகரசபைகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தஞ்சை நகரசபை நல்வழி காட்டுமாக!

(‘விடுதலை’ துணைத் தலையங்கம் 5.4.1955)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *