திருப்பதி மலைப்பாதையில் நேர்த்திக்கடன் செலுத்தச் சென்ற திருத்தணியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை நரேஷ், மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருத்தணியைச் சேர்ந்த நரேஷ் என்பவருக்கும், அவரது உறவுக்காரான சுவாதி என்ற பெண்ணுக்கும் 15 நாள்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவரது பெற்றோர் திருமணம் நல்ல முறையில் நடந்தால் நடந்தே திருப்பதி வருவதாக வேண்டினராம். இதனை அடுத்து பெற்றோரின் ‘‘வேண்டுதலை’’ நிறைவேற்றுவதற்காக, குடும்பத்துடன் அலிபிரி மலைப்பாதையில் படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்றுள்ளார். 2,350 ஆவது படியை எட்டியபோது, கடும் உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழு வந்து சோதனை செய்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது
போதிய முன்னெச்சரிக்கை இல்லாமலும், உடலின் நிலையை அறியாமலும், ‘‘கடவுள் பார்த்துக்கொள்வார்’’ என்ற குருட்டு நம்பிக்கையிலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தற்கொலைக்குச் சமமானது.
மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் பெற்றோர்களே, அதே மகனை உடல் ரீதியாக வருத்திக் கொள்ளச் சொல்லும் நேர்த்திக்கடன்களை ஊக்குவிப்பது – எவ்வளவு பெரிய அறியாமை! 15 நாட்களுக்கு முன்பு மணக்கோலம் கண்ட இளைஞன், பிணமாகத் திரும்புவதற்கு இந்த மூடநம்பிக்கை முறைகளே காரணமாகின்றன.
மலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அங்கேயே ஓய்வெடுப்பதோ அல்லது கீழே இறங்கு வதோதான் அறிவுடைமை. ஆனால், “நேர்த்திக்கடனை முடிக்காமல் போனால், பாவம் வந்துவிடும்” என்ற அச்சமே மனிதர்களைத் தங்களின் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர்ந்து செயல்படத் தூண்டுகிறது.
கல்லையோ, செம்பையோ கடவுளாக்கி – அவை ‘சர்வ சக்தி வாய்ந்தவை’ என்று அற்புதப் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி நடத்தப்படும் – மன்னிக்கப்படவே முடியாத இந்தச் சுரண்டலை என்னவென்று சொல்லுவது!
நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்சாக இருக்கிறதே – சிந்திக்கத் தூண்டும் தன்மை கொண்டதாக இல்லையே!
‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் ஏழு மலையான்’ என்பதெல்லாம் எவ்வளவுப் பெரிய மோசடிப் பிரச்சாரம்!
திருமணமாகி 15 நாளே ஆன மணமகன், ஏழுமலையான் கோயில் படிக்கட்டுகளை ஏறியதால், மாரடைப்பு ஏற்பட்டு மாண்டானே – இதற்கு யார் பொறுப்பு?
கடவுள் என்ற மூட மய்யப்புள்ளி மானுட சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக சிதறடிக்கிறது.
‘‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்’’ என்று தந்தை பெரியார் சொன்னால், மூக்குமேல் கோபம் வரும். மனிதன் – பரிணாமத்தின் ஆரம்பக் குரங்காகவே இருக்கிறானே, சிந்திப்பீர்!
சிந்தனை ஒன்றுதான், சிறப்பைத் தரும் – இது கல்லின்மேல் எழுத்தே!
