செய்தியும் – சிந்தனையும்

3 Min Read

இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையில்லை!
‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்’ என்று சொன்ன
பா.ஜ.க.வின் 12 ஆண்டு கால ஆட்சியின் லட்சணம் இதுதான்!

 

இந்தியாவில் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களில் சுமாா் 40 சதவீதம் போ் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனா் என்று ‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்து கருநாடகத்தின் பெங்களூரைச் சோ்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில்  அதிா்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாட்டில் 20 முதல் 29 வயதுக்குள்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமார்  1.1 கோடி போ் வேலையில்லாமல் இருக்கின்றனா். குறிப்பாக, 15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது.

நெருக்கடிக்கான காரணங்கள்:  புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. உயா்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும், அவா்களுக்குத் தேவையான அளவுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே இந்நிலைக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த 2004-2005 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் இளைஞா்கள் பட்டதாரிகளாக உருவான நிலையில், அவா்களில் வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்ததாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பாதியிலேயே நிற்கும் கல்வி: குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் இளைஞா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த இந்தப் போக்கு, 2023-இல் 72 சதவீதமாக உயா்ந்துள்ளது. குடும்ப வருமானத்தைப் பெருக்க இளைஞா்கள் உயா்கல்வியைத் தவிா்த்துவிட்டு, குறைவான ஊதியத்தில் முறைசாரா பணிகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

ஊதிய நிலை, மாற்றங்கள்: ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை, கல்வி கற்காதவா்களைவிட பட்டதாரிகளின் தொடக்க கால ஊதியம் இரு மடங்கு அதிகமாகவே உள்ளது. இருப்பினும், அண்மைக் காலமாக இளம் ஆண் பட்டதாரிகளுக்கான ஊதிய உயா்வு வளா்ச்சி வேகம் குறைந்துள்ளது.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமை:

இந்திய ஒன்றிய அரசின் அனைத்துத் துறை களிலும் பட்டதாரி இளைஞர்கள் உருவாகிறார்கள்.  ஆனால், காலிப் பணியிடங்கள் பல்லாண்டு காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த வகையில் காலிப் பணியிடங்கள் கால் பங்கு அளவுகூட  நிரப்பப்படுவதில்லை – பல துறைகளில் பல ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் உருவாவது ஏறுமுகத்தில்தான் உள்ளது. ஆக, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பினாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறையும். புதிய வேலை வாய்ப்புகள் உருவானால் வேலையில்லா படித்த இளைஞர்கள் எல்லோருக்குமே வேலை கிடைக்கும்.

‘‘ஆண்டுக்கு இரண்டு கோடிவேலை கொடுப்போம்’’ என்று வாய் ஜம்பம் பேசிய பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில், 24 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே!

காலிப் பணியிடத்தையும் நிரம்பாமல், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்காமல் மோடியின் பா.ஜ.க. அரசால் சுமார் 24 கோடி படித்த பட்டதாரி இளைஞர்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்றுதானே பொருள்.

இந்திய பட்டதாரிகள் 40% பேர்களுக்கு வேலை கிடைக்காது போனதற்கு வேலை இல்லா நிலை என்பதைவிட வேலை வாய்ப்பை உருவாக்காத திறமையற்ற பிஜேபியின் திறமையற்ற ஆட்சிதான் என்பதே கல்லில் செதுக்கிய உண்மையாகும். இந்த பிஜேபி ஆட்சியை வேரோடு பிடிங்கி எறிவதே நாட்டு மக்கள் ஒவ்வொரு கடமையாகும்!

– க. அன்பழகன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *