100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் தேர்தல்  விழிப்புணர்வு

சென்னை, மார்ச் 26 சட்டமன்றத் தேர்தலை முன் னிட்டு, சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நேற்று (25.3.2026) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தேர்தல் விழிப்புணர்வு

“தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026அய் முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று (25.03.2026) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம், எஸ்.அய்.ஈ.டி. கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு கையெழுத்துப் பலகையில் கையொப்பமிட்டனர். பின்னர், எனது வாக்கு எனது உரிமை என்ற சுய ஒளிப்பட பதாகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி ஒளிப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரையில் Your Vote, Your Future, உங்கள் வாக்கு 100 சதவீதம் என்ற தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்பம் உருவாக்கப்பட்டது. இந்த மணற்சிற்பத்தினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர், பொதுமக்களுடன் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கையில் தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்று பொதுமக்களுக்கு 100 சதவீத வாக்குப்பதிவு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொம்மலாட்ட நிகழ்ச்சி

திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி, வார்டு-64க்குட்பட்ட சீனிவாச நகர் 3-ஆவது பிரதான சாலையில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் மொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், தேர்தல் அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட

தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள்!

சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் வாக்குப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதோ வெளியிடுவதோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மேற்காணும் பொதுத்தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும் பரப்புதலுக்கும் பின்வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126ஏ-ம் பிரிவின் (1)-ம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மேற்சொன்ன பிரிவின், (2)-ம் உட்பிரிவின் விதிமுறைகளின் கீழ் மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம், 09.04.2026 அன்று காலை 7 மணியிலிருந்து 29.04.2026 அன்று மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது (அது எதுவாயினும்) ஆகியவை தடை செய்யப்பட வேண்டிய கால அளவாக இதனால் அறிவிக்கிறது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126(1)(பி)-ம் பிரிவின்கீழ், மேற்காணும் பொது தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *