சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக அதன் மாநில நிறுவன பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘‘2021ஆம் ஆண்டு முதல் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் மூலம் பெரும் ஆதரவையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க வேட்பா ளர்களையும் மற்றும் தோழமை கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட ஆதரவு தருகிறோம் அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக ஆதி திராவிடர் மலை ஜாதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உடற்கொடை:
ஓய்வுபெற்ற வங்கி மேலாளருக்கு அரசு மரியாதை
பெரம்பலூர், மார்ச்.26 பெரம்பலூரில் உயிரிழந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி கிளை மேலாளர், தனது உடலை முழுமையாக மருத்துவக் கல்லூரிக்கு கொடை செய்ததையடுத்து, அவருக்கு அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் திருச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பெரம்பலூர் கிளை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமூக அக்கறை கொண்ட இவர், தனது மறைவுக்குப் பிறகு தனது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உடல் கொடை செய்ய முன்னரே முடிவெடுத்திருந்தார்.
கடந்த 23.3.2026ஆம் தேதி காலை கோவிந்தசாமி மறைவுற்றார். அவரது விருப்பப்படியே குடும்பத்தினர் உடல் கொடைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அவரது உயரிய செயலைப் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, நேரில் சென்று மறைந்த கோவிந்தசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப் படைக்கப்பட்டது. உடல் கொடை செய்த ஓய்வுபெற்ற அதிகாரியின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மீனவர்கள் என்றால் இளக்காரமா?
ராமேஸ்வரம் மீனவர்கள்
7 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
ராமேஸ்வரம், மார்ச் 26 தமிழ் நாட்டின் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கதையாகி வரும் நிலையில், நேற்று (25.3.2026) ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறை முகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் பன்னாட்டு கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டிய இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகைக் கைப்பற்றிய துடன், அதிலிருந்த 7 மீனவர்களையும் கைது செய்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர் களும் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். அங்கு வைத்து அவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அடுத்தடுத்து நடக்கும் இந்த கைது நடவடிக்கைகளால் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங் களில் பெரும் சோகமும், பதற்றமும் நிலவி வருகிறது.
