எங்கள் படைவீரர்கள்
‘‘எமது படையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து ஆகிய மதச்சார்பினரும், இந்துக்களில் பார்ப்பனரல்லாத எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும், ஆதித்திராவிடர்கள் உட்பட அங்கம் பெற்றிருக்கிறார்கள். மலையாள நாட்டினரும், தெலுங்கு தேசத்தினரும்கூட இதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள்.
நாங்கள் ஆகஸ்டு 1-ஆம் தேதி புறப்பட்டோம். இன்றோடு 42 நாட்களாகின்றன. இந்த 42 நாட்களில் 234 கிராமங்களைக் கடந்து 60 முக்கிய ஊர்களில் தங்கி ஆங்காங்கே எங்கள் நோக்கங்களை எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றோம். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்த 87 பொதுக்கூட்டங்களில் எங்கள் கருத்தை மணிக்கணக்கில் மிக விளக்கமாக எடுத்துப் பேசி இருக்கிறோம்.
42 நாட்களில் 577 மைல்கள்
இந்த 42 நாட்களில் ஓய்வுக்காக ஒருபொழுது அரைப்பொழுதாகத் தங்கிய வகையில் 9 முழு நாட்கள் அலுப்பாறினோம். அதுபோக 33 நாட்கள் நடந்து வந்திருக்கிறோம். எங்கள் நடையில் 577 மைல்கள் போயிருக்கின்றன. ஊர்விட்டு ஊர் போவதற்காக நடந்த மைல்கள் 409. ஆயினும் ஊர்வலமாகச் சுற்றிய சுற்று வேறு 168 கற்களுக்கு மேற்பட்டு விட்டன.
நதிகளைக் கடந்தோம்
தஞ்சை மாவட்டத்தையும் தென்னார்க்காடு மாவட்டத்தையும் பிரிக்கின்ற முக்கால் (¾) மைல் அகலமுள்ள கொள்ளிடம் நதியைத் தோணி மூலம் கடந்தோம். பண்ருட்டிக்கும் சோலியனூருக்கும் இடையிலிருக்கும் அரை (½) கல் அகலமுள்ள பெண்ணையாற்றில் வயிற்றளவு தண்ணீர் ஓடியதால் அதை நீந்திக் கடந்தோம். பூதூருக்கும் திருக்கழுக்குன்றத்திற்கும் நடுவிலிருக்கும் பாலாற்றைச் சுள்ளு வெயில் நேரத்தில் 3 மணிக்கு நடந்து கடந்தோம்.
மழையில் நனைந்தோம்
இது மாரிக்காலத் தொடக்கம் என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியதில்லை. இக்காலத்தில் அடிக்கடி மழை பொழியும் என்பதை நீங்கள் அறிந்தது போலவே நாங்களும் அறிவோம். இது சமயம் நடந்து செல்வது எனும் ஏற்பாட்டுடன் புறப்பட்டால் இடையில் மழை எங்களைத் துன்புறுத்தும் என்பதையும் நாங்கள் அறிவோம். அப்படியிருந்தும் எங்கள் தலைமீது சுமந்துள்ள கடமை எவ்வகை இடையூறுகளையும் கவனிக்காது போரைத் தொடர்ந்து நடத்தும்படி தூண்டிற்று.
திரும்பத் திரும்ப மழைதான்
திருச்சி நகரை விட்டுப் புறப்பட்டு காவிரி நதியைக் கடக்கும் போதே மழையும் எங்களைத் தொடர்ந்து பொழிந்தது. சுமார் ஒன்றரை (1½) கல் தொலைவுக்குமேல் மழையிலேயே நடந்து சென்றோம். அதேபோல், சாத்தனூருக்கருகில் செல்லும்போது தொடங்கிய மழை 2 கல் நடந்து சாத்தனூர் சத்திரத்திற்குள் நுழைந்துங்கூட இரவு 11 மணி வரை ஓயவில்லை. திருவையாற்றைவிட்டு தஞ்சைக்குப் போக அடி எடுத்து வைத்ததும் தொடங்கிய மழை எங்கள் மீது அரை (½) கல் தொலைவு பொழிந்து கொண்டே வந்தது. பசுபதி கோயிலை விட்டுப் பாபநாசம் போகும்போது சக்கராப் பள்ளியில் பிடித்த மழை பாபநாசத்தில் ஊரைச்சுற்றி ‘உஸ்’ என்று குந்தும் வரை 2 மணி நேரம் விடவில்லை.
மழைக்கு மத்தியில் 27 கல்
பூண்டியாங்குப்பத்தில் இரவு தங்கியிருந்தோம். அங்கு இரவு 10 மணிக்குப் பிடித்த மழை காலை 3 மணிக்குத்தான் விட்டது. எங்கள் இராத் தங்கல் இடத்தின் மேற்கூரை ஓட்டைகள் நிரம்பியிருந்தமையால் இரவு முழுதும் உட்கார்ந்து கொண்டே இருந்தோம். நெல்லிக்குப்பத்திலிருந்து பண்ருட்டி 9 கல். நெல்லிக்குப்பம் விட்டதும் 2 கல்லில் பிடித்த மழை பண்ருட்டி போய்ச் சேரும் வரை விடவே இல்லை. காஞ்சிபுரத்தில் இரண்டாம் நாள் பொதுக் கூட்டத்திலிருந்து புறப்பட்டபோது பிடித்த மழை சகிக்க முடியாதது. இரண்டரை (2½) கல் அந்த கடுமழையைப் பிளந்து சென்றோம். கடைசியாகக் கோடம்பாக்கத்தை அடைந்ததும் அந்தப் பாடாவதி நெடுஞ்சாலையில் 2 கல் தொலைவு விழுந்தும் எழுந்தும் நடக்க வேண்டியதாயிற்று. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் எங்களோடு மழையில் துன்புற்றனர். எல்லா இடங்களிலும் மழையோடு மழையாய் நடந்து சென்றோமே தவிர எங்கும் ஒண்டி நிற்கவில்லை. அநேக இடங்களில் கையில் கொண்டு வந்த மாற்று உடுப்புகளும் நனைந்து போனதால் வேறு உடுப்புகளின்றி நனைந்தவை உலரும் வரை வெடவெடத்துக் கொண்டு இருந்திருக்கிறோம். மொத்தம் 27 கல் நனைந்த உடுப்புகளோடு குடை இல்லாமல் மழையிலேயே ஊடுருவிப் பாய்ந்து வந்திருக்கிறோம்.
நோய்வாய்ப்பட்டோம்,
மனம் நொந்தோமில்லை
குறித்த தேதியில் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டுமென்ற கருத்தோடு, இப்படி மழையில் நனைந்தும் காற்றில் உலர்ந்தும் நடையை நிறுத்தாமல் படை போய்க் கொண்டிருந்தாலும், கோரக் குளிரிலும் நெஞ்சையும் சில்லிடச் செய்யும் நச்சுக் காற்றிலும் படை சென்றதாலும் கல் போன்ற உடலும் கரையத் தலைப்படுமன்றோ? எங்களைப் பகைவராய் எண்ணிப் பழி தூற்றும் அன்பர்களைப் போல நாங்களும் மனிதர்கள் தானே? எங்களுக்கும் நோய் வரத்தானே செய்யும்? இதனால் எமது படை வீரர்களில் சிலர் ஜூரத்தாலும் ஜலதோஷத்தாலும் சீதபேதியாலும் இருமலாலும் கஷ்டப்பட நேர்ந்தது. இப்படி நோய்வாய்ப்பட்டோரில் பலர் மருந்து சாப்பிட்டுக் கொண்டே படையுடன் தொடர்ந்து வந்தனர். சிலரைச் சில இடங்களில் விட்டு வைத்து மருந்து சாப்பிட ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம். அவர்களெல்லாம் திரும்பி வந்து விட்டனர்.
பச்சைப் புண் உடம்போடு படைத்தலைவர் அழகிரிசாமி
எமது தமிழர் பெரும்படையின் சேனாதிபதி அன்பர் கே.வி அழகிரிசாமி அவர்கள் உடல் நலிவுள்ளவர். அவர் சிகிச்சை முறையிலிருந்து மீண்ட சொற்பதினத்தில் படையெடுக்க வேண்டியதாய் இருந்ததால், பச்சைப் புண் உடம்போடு படையை நடத்த முற்பட்டார். அதோடு மணிக்கணக்கில் ஒவ்வோர் ஊரிலும் பேசி வந்தார்.
படை எடுப்பு நடந்த வகை
திருச்சி மாவட்டத்தில் 3 ஊர்களும், தஞ்சை மாவட்டத்தில் 17 ஊர்களும், தென்னார்க்காடு மாவட்டத்தில் 22 ஊர்களும் எங்களுக்குத் தங்கிப் புறப்படும் ஊர்களாக இருந்திருக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் 16 கல்லும், தஞ்சை மாவட்டத்தில் 103 கல்லும், தென்னார்க்காடு மாவட்டத்தில் 136-ம், செங்கற்பட்டு மாவட்டத்தில் 154 கல்லும் ஆக ஊர்விட்டு ஊர் போவதற்காக மட்டும் 409 கல் நடந்திருக்கிறோம்.
வாழ்த்தினார்கள், வரவேற்றார்கள்,
எதிர்ப்பும் உண்டு
நாங்கள் போகும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புகள் கணக்கில் அடங்கா. ஆயிரம் பதினாயிரக் கணக்கிலேயே கூட்டங்களில் எல்லாம் மக்கள் இருந்தனர். இரண்டோரிடங்களில் எதிர்ப்பும் இருந்தது என்பதைக் கண்ணியமாக ஒப்புக் கொள்ளுகிறேன். சுமார் 4 லட்சம் மக்களுக்கு எங்கள் நோக்கங்களை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதே மூச்சில் இன்றும் சுமார் ஒன்றரை (1½) லட்சம் பேருக்கு முன் நாங்கள் நிற்கிறோம்.
எங்கள் தலைவர் வாழ்க!
என்ன எண்ணத்தோடு தமிழர் பெரும்படை புறப்பட்டதோ அது பூரண வெற்றி கண்டுவிட்டது என்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். திருச்சியில் ஆசி கூறி வழியனுப்பிய எங்கள் ஒப்புயர்வற்ற பெருந்தலைவரான அதே ஈவெரா. அவர்கள் இன்று எங்களை வரவேற்று வாழ்த்தி மகிழ்விக்க எங்கள் முன் உங்களிடை வந்திருக்கின்றார். அவர் வாழ்க!
இணையற்ற படை இது
தமிழர் படையைப் போன்ற பெரும்படை இவ்வளவு தூரம் சுமார் 60 கல் நடந்தது இதுவரை எதுவுமே இல்லை. காந்தியின் தண்டி ஜாதாவும், தோழர் இராச கோபாலாச்சாரியின் வேதாரண்ய உப்பளப் படையும் தமிழர் பெரும் படையின் நாலில் ஒரு பங்கு அளவில்கூட நடக்கவில்லை. ஆகவே இது இந்திய வரலாற்று உலகில் ஒப்பற்ற பெரும்படை என்ற உயர்வை அடைந்துவிட்டது என்பது மிகையாகாது.
படையைக் கலைக்கின்றேன்
தொடக்கத்திலேயே குறிப்பிட்ட வண்ணம், படை இன்றோடு இந்தக் கடற்கரைக் கூட்டத்தோடு முற்றுப் பெறுகின்றது. உத்தியோகத் தோரணையில் இன்று மாலையோடு படையைக் கலைக்கின்றேன் என்பதை இதன் மூலம் லட்சக்கணக்கான உங்கள் முன்னிலையில் தெரிவிக்கிறேன்!
எல்லோருக்கும் எமது வணக்கம்.
(ெதாடரும்)
