முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி எச்சரிக்கை!

4 Min Read

பா.ஜ.க.வினர் முன்வைத்து வரும் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்ற அரசியல் முழக்கத்தில் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.

“Double engine cute slogan, a serious federal question”  எனும் தலைப்பில் எஸ்.ஒய்.குரேஷி எழுதியுள்ள கட்டுரையை ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில், நினைவில் நிற்கும் முழக்கங்கள் தேர்தல் நேரத்தில் உருவாகும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவை மறைந்துவிடும். ஆனால், அரசு நிர்வாகம் குறித்த சில முழக்கங்கள் மக்களின் மனதில் நிலைத்து நின்றுவிடும் என்றும், அத்தகைய ஒரு முழக்கம்தான் ‘இரட்டை எஞ்சின் அரசு’ என்றும் சுட்டிக்காட்டி உள்ள அவர், அழகாகத் தோன்றும் இந்த வார்த்தைக்குப் பின் இந்தியாவின் கூட்டாட்சிமுறை குறித்த ஓர் ஆழமான அரசியலமைப்புச் சட்டக் கேள்வி அடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

‘ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால், வளர்ச்சி வேகமாக நடைபெறும்’ என்ற வாதத்தை, மேலோட்டமாகப் பார்த்தால் குறையேதுமில்லை எனத் தெரிவித்துள்ள எஸ்.ஒய்.குரேஷி, ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சிக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கம் – ‘இரட்டை எஞ்சின் ஆட்சி’ என்ற முழக்கத்தில் மறைந்துள்ளது என்று எச்சரித்துள்ளார்.

ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சியை, மாநிலத்திலும் தேர்வு செய்யாவிட்டால் மாநிலத்திற்கான நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என, மக்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மாநில அரசுகள், ஒன்றிய ஆளும் கட்சியின் நன்மதிப்பையோ, தயவையோ நம்பி இருக்கும் நிலை இந்திய அரசியலமைப்பில் இல்லை என்றும் மாறாக, ஒன்றியமும், மாநிலங்களும் தங்களின் அதிகார வரம்புகளுக்குள் இணைந்து செயல்படும் ஒரு கூட்டாட்சி அமைப்பையே அரசியல் அமைப்பு உருவாக்கி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கட்சியால் ஆளப்படும் மாநிலங்களை மட்டுமின்றி, ஒட்டுமொத்தக் குடியரசையும்தான் ஒன்றிய அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், அவர் தெரிவித்துள்ளார். ‘‘தேசிய வரிவிதிப்பின் மூலம் திரட்டப்படும் நிதி ஒன்றியத்தை ஆளும் கட்சிக்கானதல்ல, அது இந்திய ஒன்றிய அரசுக்கே சொந்தமானது. மக்கள் எப்படி வாக்களித்திருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குடியரசின் பெயராலேயே அவர்களிடம் வரிகள் வசூலிக்கப்படுகின்றன’’ என்று சுட்டிக் காட்டி உள்ள எஸ்.ஒய்.குரேஷி, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு ஒரு மாநிலத்தை எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்பதன் அடிப்படையில் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

‘‘மக்கள் தொகை அடிப்படையிலான நிதிப் பகிர்வு, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குப் பாதகமாக அமையக்கூடும் என்பதால், இதுகுறித்து நிதி ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ‘‘வளர்ச்சி என்பது அரசியல் சார்புடையதாக இருக்கக் கூடாது; மாறாக, அனைத்து மாநிலங்களையும் ஒவ்வொரு குடிமகனையும் சமமான நியாயத்துடன் நடத்தும் விதிகளின் அடிப்படையிலேயே அது அமைந்திருக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ள முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, ‘‘ஒரே ரயிலை எத்தனை என்ஜின்கள் இழுத்துச் செல்கின்றன என்பதைவிட, இந்தியாவின் கூட்டாட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஒற்றை என்ஜின்தான் மிகமுக்கியம்’’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் குரேஷி போன்றவர்களும் தலைவராக இருந்திருக்கிறார்கள்.

அவர் கூறியிருக்கும் மேற்கண்ட கருத்துகள் அறிவுப் பூர்வமானவை – சட்டப் பூர்வமானவை!

ஜனநாயகக் கடமையாற்றுவதில் தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

பிஜேபி ஆட்சியில் – பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள இந்திய ஒன்றிய அரசு ஜனநாயகக் கப்பலை மதவாதக் கடலில் மூழ்கடிக்கும் வேலையில் மூர்க்கத்தனமாகவே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

நேர்மையான முறையில் தேர்தல் என்பது பிஜேபி ஆட்சியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் தென்படவே இல்லை – தென்படவும் தென்படாது!

மூவர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் பிஜேபியைச் சேர்ந்த இருவர் இருக்கும்படியான தந்திரத்தைச் சட்டப்படி செய்து கொண்டு விட்டனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற முழக்கத்தில் அடங்கி இருப்பது – ஒற்றை ஆட்சி முறையான அதிபர் ஆட்சி முறையாகும்.

ஆமாம், பிரதமர் என்ற நிலையிலிருந்து அதிபராவதற்கான நோக்கில் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

தேர்தல் ஆணையத்தில் முன்னாள் தலைவர் எஸ்.ஒய். குரேஷி அவர்களின் கூற்றுப்படி,  பிஜேபி சொல்லும் ‘‘டபுள் என்ஜின் அரசு’’ என்பது – மறைமுகமாக நாட்டில் ஒரே கட்சி ஆட்சி (மாநிலங்களிலும்!) என்பதன் உள்ளடக்கமாகும்.

மாநிலத்தில் (பிஜேயினர் தவிர்த்து) வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தால், பாரபட்சமாக ஒன்றிய அரசு நடந்து கொள்ளத்தான் வழி வகுக்கும் என்பதை இதைவிடத் தெளிவாக யார்தான் கூற முடியும்?

‘கிறித்தவர்களுக்கென்றும் முஸ்லிம்களுக்கென்றும் நாடுகள் இருக்கும்போது – இந்துக்களுக்கு என்று ஒரு நாடு ஏன் இருக்கக் கூடாது?’ என்று கேட்பது உள்ளுக்குள் நஞ்சை வைத்து ேமலாகத் தேனைத் தடவி வைத்திருக்கும் யுக்தியாகும்.

எப்போதுமே அவர்கள் விருப்பும் ‘ஒரே இந்து நாடு’ என்பது– பிறப்பால் உயர்வு – தாழ்வு கற்பிக்கும் ஸநாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஸநாதனம் என்பது வருணாசிரமதர்மம் என்பதே மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தும் விளக்கமும் ஆகும். (‘தெய்வத்தின் குரல்’ 1ஆம் பாகம் பக்கம் 282).

மிகவும் எச்சரிக்கை இருக்க வேண்டிய தருணம் இது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *