கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு ஊராட்சி சுமார் 10,000 மக்கள் தொகையைக் கொண்டது. அண்ணா கிராம ஒன்றியத்தில் உள்ள மிகப் பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் கடந்த2010ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக பகுதி நேர நூலகம் செயல்பட்டு வருகிறது. அதில் உறுப்பினர்களாக 400க்கும் மேற்பட்டோர் உள்ளனர். புரவலராக 9 பேர் உள்ளனர்.நாள்தோறும் 30க்கும் மேற்பட்டோர்பயனடைந்து வருகின்றனர். இது பகுதி நேர நூலகம் என்பதால் வேலை நாட்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. எனவே இந்த நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்திக் கொடுத்தால் மாணவர்களும், இளைஞர்களும் நன்கு பயனடைவார்கள். எனவே இதை கிளை நூலகமாக தரம் உயர்த்தி வழங்க உதவிடுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
– தமிழன்பன்,
மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், கடலூர்
‘பகத்சிங்’
நினைவு நாள்
23.3.2023 அன்றைய விடுதலை இதழில் பகத்சிங் நினைவு நாளை பெரியார் திடலில் கொண்டாடிய செய்தி வந்துள்ளது. எவ்வளவு பற்றுதல் இருந்தால் அந்த தியாகியை கொண்டாடுவீர்கள். பல பொதுவுடைமை யாளர்களுக்குகூட அவர் நினைவு நாள் மறந்து போய்விட்ட நிலை.
‘விடுதலை’ பத்திரிகையில் பார்த்தவுடன்தான், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தியாகிகளின் நினைவு எனக்கே வந்தது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துமடிந்த தியாகிகளை நினைவுபடுத்த வேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியரையும் திராவிடர் கழகத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
– சண்முகவேல்
ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்