பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

15 Min Read

மூன்று மாணவிகளுக்கு, 10 பணியாளர்களை நியமித்துக் கல்லூரி தொடங்கினோம்!
இன்று ஏறத்தாழ 500 இருபால் மாணவர்கள் படிக்கிறார்கள்! அதில் 320 பேர் பெண்கள்! அதுதான் பெண்ணுரிமையின் வெற்றி!!

திருச்சி, மார்ச் 26 மூன்று மாணவிகளுக்கு, 10 பணியாளர்களை நியமித்துக் கல்லூரி தொடங்கினோம்! இன்று ஏறத்தாழ 500 இருபால் மாணவர்கள் படிக்கிறார்கள்! அதில் 320 பேர் பெண்கள்! அதுதான் பெண்ணுரிமையின் வெற்றி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் மருந்தியல் கல்லூரியில்

முப்பெரும் விழா!

கடந்த 9.3.2026  அன்று காலை 9.30 மணிக்கு, திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கத்தில்,  ‘தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 107 ஆம் பிறந்தநாள் விழா!’ ‘உலக மகளிர் நாள் விழா!’ ‘புத்தகங்கள் வெளியீட்டு விழா!’ என முப்பெரும் விழாக்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றன. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’’

என்ற வள்ளுவருடைய குறளை நாம் சொல்லும்போது,  பொருளை மட்டும் ‘டிஸ்ட்ரிபியூட்’ செய்வது என்று நினைக்கிறோம். சமமாக எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

நமக்குக் கிடைத்த சிந்தனை மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும்!

அதையே கொஞ்சம் நீட்டிப் பாருங்கள். அறிவையும் எண்ணிப் பாருங்கள். நமக்குக் கிடைத்த வாய்ப்பு, நமக்குக் கிடைத்த சிந்தனையும் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தாமஸ் ஆல்வா எடிசன், மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.  அவருடைய ஆராய்ச்சிக்காகத்தான் அதனைச் செய்தார்.  ஆனால், அது சமுதாயத்திற்கு எவ்வளவு பயன்பட்டது  என்று சிந்தியுங்கள்!

ஒரு பல்புக்கு  மின்சாரத்தை எப்படி நாம் கணக்கு போடுவோம் என்று சொன்னால், எத்தனை வாட்ஸ் பவர்? என்று கேட்கிறோம். எத்தனை கேண்டில் பவர் என்பதுதான் அடிப்படை யூனிட். ஆகவே, அது உலகம் முழுவதும் வந்தாயிற்று. இப்பொழுது பல்பு சிறியதாகப் போயிற்று.  பல்பு ஒளியை  இப்பொழுது யாரும் நினைப்பதில்லை.  பிறகு, டியூப்லைட் வந்தது. அதற்குப் பிறகு, சீனாக்காரர்களுடைய வேலையால், எங்கே பார்த்தாலும் ஒளிமயமாக இருக்கக்கூடிய அள விற்கு இருக்கிறது. பகலில் ஒரு கடை சாதாரணமாக இருக்கிறது. இரவு நேரத்தில் அந்த கடையைப் பார்த்தீர்களேயானால், ஒளி மயமாக இருக்கிறது. அதே மாதிரி வீடுகளில், ஏதாவது சிறப்பு விழாக்கள் என்று சொன்னால், அந்த வீட்டைச் சுற்றிலும் ஒளி மயமாக இருக்கக்கூடிய நிலை.

ஆகவே, அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்.

‘‘அறிவை விரிவு செய் அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’’

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

நம்முடைய பாட்டன் பூட்டன் எல்லாம் கெட்டிக்காரர்கள்தான்

எனவே, அறிவை விரிவு செய்ய வேண்டும். அறிவை நம்மோடு வைத்துக் கொள்ளக்கூடாது. இந்த மூலிகைகளைப் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றால், நம்முடைய பாட்டன் பூட்டன் எல்லாம் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். அதில் என்ன போட்டு குழைப்பது? எப்படி அதைத் தாளிப்பது? எல்லோருக்கும் தெரிந்திருக்காது.

சித்த வைத்தியத்தில் என்ன ஒரு பெரிய சிறப்பு! பக்க விளைவுகள் கிடையாது என்று  சொல்லுவார்கள்.

ஆனால், அதே சித்த வைத்தியத்தில் என்ன ஒரு கொடுமை என்று சொன்னால், அதைப் பகிரங்கப்படுத்து வதில்லை.

அதே நேரத்தில், அலோபதியில் மருந்து வாங்கினீர்கள் என்றால், என்னென்ன அதில் சேர்ந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். இப்போது அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால்,  கல்லூரி முதல்வரிடம் கொடுத்து, ‘இந்த மருந்தில் என்னென்ன சேர்ந்திருக்கு என்று சொல்லுங்கள்’ என்பேன்.

ஏனென்றால், மருந்து ஆளுநர்கள் நீங்கள்,  அந்த வகையில்  உங்களுடைய படிப்பு – அதை இணைத்து, சேர்த்து, கூட்டிச் சிறப்பாகக் கொடுக்கிறீர்கள். இந்தக் குளோரோபில் என்ற பச்சை நிறமி  இருக்கிறதே, அதை எடுத்து அந்தக் காலத்தில் பயன்படுத்தினார்கள். ஆனால், எதைப் பயன்படுத்துகிறோம் என்பதை  அந்தக் காலத்தில் சொன்னதில்லை.  ரகசியமாக வைத்துவிட்டு, அவருக்கு 90 வயதாகும்போது, கடைசி நேரத்தில்,  சிலரை அழைத்துச் சொல்வார். அந்தச் செடியைப் பிடுங்குவதா? இந்தச் செடியைப் பிடுங்குவதா? என்று புரியாமல் இருப்பதினால்தான், நாம்  உலகளாவிய அளவுக்கு வளரவில்லை. மற்றவர்கள் அதைக் கண்டு பிடித்தவுடன், உலகளாவிய அளவிற்குக் கொண்டு போனார்கள். அதற்கும் மேலே மேலே போய்விட்டார்கள்.

‘அறிவுக்கு  எல்லை இல்லை’ என்றார்
தந்தை பெரியார்!

அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘அறி வுக்கு  எல்லை இல்லை’ என்று.  எப்படி மானிடத்துக்கு எல்லை இல்லையோ, அதுபோல அறிவுக்கு எல்லை கட்டக்கூடாது. அதை சுதந்திரமாக விடவேண்டும். இன்றைய புரட்சி செயல்கள் வருங்காலத்தில் சாதாரண செய்தியாக இருக்கும். ஆகவே, சாதாரணமாக எழுதிய செய்தியை மருந்தியல் சம்பந்தப்பட்ட அளவிற்கு, நீங்கள் அதையெல்லாம் சலிச்சு,  புடைச்சு இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எனக்கு இப்போதுதான் தெரிகிறது,  ‘ஓகோ நம்மா லும்கூட இப்படி எழுத முடியும் போல இருக்கு?’  என்று.

புலவர் இராமநாதன் எழுதிய

 ‘‘கவிஞரும் காதலும்!’’

புரட்சிக்கவிஞர் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். புரட்சிக்கவிஞர் அவர்களுடைய கவிதைகளைப் பற்றி புலவர் இராமநாதன் அய்யா அவர்கள், ‘‘கவிஞரும் காதலும்’’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார்.  அந்தப் புத்தகத்தில் கவிஞருடைய பாட்டை பற்றி விளக்கி எழுதியிருந்தார்.

ஒரு முறை புரட்சிக்கவிஞரிடம் பேசிக் கொண்டி ருக்கிற போது, புரட்சிக்கவிஞர் பேசுவதுபோலவே சொல்கிறேன், ‘‘ஏம்ப்பா, நம்ம ராமநாதன் இருக்கானே, பெரிய ஆள்!’’ அப்படின்னு சொல்லுவார்.

‘‘என்ன அய்யா?’’ நான் கேட்டேன்.

‘‘என்னப்பா, நான் எழுதிதைப் பற்றி எழுதி இருக் கின்றானே, (மாணவர் தானே அதனால் ‘இன்னன்னா’ போட்டுதான் சொல்லுவார், அதனால் நான் அப்படியே சொல்கிறேன்) என்ன எழுதி இருக்கிறான்; எனக்கே இப்போதுதான் ‘ஓகோ’ நான் இப்படி எழுதி இருக்கேனோ? என்று நினைத்தேன்’’ என்று சொன்னார்.

ஆகவே, ஒருவர் எழுதுவதைவிட, மற்றவர்கள் அதைப் பயன்படுத்துவதைப், பார்க்கும் போது தான், ‘‘ஓகோ நமக்கும் இந்த ஆற்றல் இருக்கிறது போல’’ என்பதைத் தெரிந்து கொள்வோம். அந்த ஆற்றலை நீங்கள் எனக்கு இன்றைக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக தலைதாழ்ந்த நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரி இவ்வளவு வளர்ந்தது மட்டுமல்ல, இது ஒரு தொண்டு! சாதாரணத் தொண்டு அல்ல. அதைவிட எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இந்தப் புத்தகத்தை அவர்கள் தொகுத்ததை என்னிடம் சொல்லவில்லை. இதைப் பார்த்தவுடன் எனக்குப் பெரிய அதிசயமாகத்தான் இருந்தது.

இந்த மாதிரி ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது. இந்த விழாவிற்கு நான் வருகிற மாதிரி இல்லை. நேற்றிரவு கூட்டம் முடிந்து இரவு 12 மணிக்கு மேலதான் வந்தேன். காலையில் 9.30 மணிக்கு நிகழ்ச்சி என்று  சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எந்தப் புத்தகத்தையும் நான் படிக்காமல் பேச வருவ தில்லை மேடைக்கு. ஆகவேதான், ‘‘நான்  அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், பெரியார் மாளிகையில் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுங்கள்’’ என்று சொன்னேன்.

அதே மாதிரி, நான் இரவு 12.30 மணிக்கு  வந்தேன். அப்போது, தங்காத்தா என்னிடம், ‘‘அண்ணா இந்தப் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார்கள், உங்களிடம் கொடுக்கச் சொல்லி’’ என்றார்.

என்னுடைய வாழ்விணையர்  தூங்குகிறார்கள் என்று, அவருக்குத் தொந்தரவு இல்லாமல், நான் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்கத் தொடங்கினேன். புத்தகம் எது கிடைத்தாலும் எனக்கு உடனே தூக்கம் வராது. இந்தப் புத்தகத்தை முழுக்க முழுக்கப் புரட்டி பார்த்தேன்.

இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றைப் படித்தேன். நான் எழுதியது என்பது சாதராணம்தான். ஆனால்,  மருந்தியல் துறையில் யார் யார் தலை சிறந்த பொறுப்பாளர்களோ, அவர்களிடம் அனுப்பி, இதுகுறித்த கருத்துகளைக்  கேட்டு, அதனைப் பதிவு செய்திருக்கிறீர்களே, அது மாணவர்களுக்கும், கல்விக்கும் பயன்படுகிறது என்று சொன்னால், அதற்காக உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லையற்ற மகிழ்ச்சியை
நான் அடைகிறேன்

‘‘இவர்கள் எல்லாம்  ஏதேதோ  பேசுவாங்க; இவர்கள் எல்லாம் பெரியார் ஆட்கள், ஏதோ  செய்வாங்க’’ என்று நினைத்தார்களே தவிர,  இதுபோன்ற ஒரு கல்லூரியில், இந்தக் கல்லூரியினுடைய வரலாறு என்ன? இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது முப்பெரும் விழா! இந்தக் கல்லூரியை நிறுவியவன் என்று நினைக்கிற நேரத்தில், எல்லையற்ற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.

இந்தப் புத்தகத்திற்கு என்ன தலைப்பு கொடுத்தி ருக்கிறார்கள் என்றால், ‘‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’’ ஆக்கப்பூர்வமாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள். இந்தப் புத்தகத்தை நீங்கள் வெளியிட்டது என்னுடைய 93 ஆவது ஆண்டுக்காக! ஆனால், இந்தப் புத்தகத்தை வாங்கி, நான் பார்த்து மகிழும்போது, இந்தப் புத்தகத்தை பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்லும்போது என்னு டைய வயது 39. அதுதான் இந்தப் புத்தகத்துக்குச் சிறப்பு.

93 அய் கடந்து பல நூறு தொடரும் என்று எழுதி யிருக்கிறார்கள்.  93 அய் கடந்து அல்ல; 93அய் குறைத்து என்பதுதான் மிக முக்கியம். 93 கடந்துவிட்டால் எழுத முடியாது.

கிரேக்கக் கதை!

ஒரு மனிதன் ஆயுளைக் கூட்டிக் கொண்டு போனால், என்ன ஆவது? கிரேக்கத்தில்  ஒரு கதை உண்டு – என்ன அந்தக் கதை என்று சொன்னால், இம்மார்ட்டாலிட்டி – உங்களுக்குத் தெரியும். ஒரு காதலன் – காதலி. கிரேக்கத்தில், காடஸ், வீனஸ் என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் வாரியாகக் கடவுளை வைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு வேலையைச் செய்வதற்காக! அந்த கடவுள்களிடம்  வேண்டிக் கொள்கிறார்கள். (கற்பனை) கடவுள் மகிழ்ச்சி அடைந்து ‘‘என்ன வேண்டும்?’’ என்று  கேட்கிறது.

‘‘என்னுடைய காதலருக்கு மரணம் வரக்கூடாது. எப்போதும் என்னிடத்திலே இருக்க வேண்டும். நாங்கள் இரண்டு பேருமே மரணம் இல்லாமல் இருக்க வேண்டும்’’ என்று கேட்டார்.

அதேபோன்று, ‘கடவுளும் அந்த வரத்தைக் கொடுத்து விட்டார்’, கதைப்படி!

முதுமையால், கொஞ்சம் கொஞ்சமாகக் கிழடு தட்டுகிறது!

நாள் ஆக, ஆக, இறப்பு வரவில்லை.  ஆனால், வயது வளர்ந்துகொண்டே இருக்கிறது. மரணம் கிடையாது, ஆனால் முதுமை வந்துவிட்டது. முதுமையால், தள்ளாடுகிறார், நடக்க முடியவில்லை. அப்புறம் சுவை தெரியவில்லை. சாப்பிட முடியவில்லை. அப்புறம் செரிமானம் ஆகவில்லை. முதுமையால், கொஞ்சம் கொஞ்சமாகக் கிழடு தட்டுகிறது. வயதாகி ‘கிழவன்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்கள் வருகிறார்கள்.

இப்போது என்ன செய்வது? ஏனென்றால், இம்மார்ட்டாலிட்டியை, ஆயுள் நீடித்திருக்கவேண்டும், மரணம் வரக்கூடாது என்று மட்டும்தான் கேட்டார்களே தவிர, இளமை என்னிடத்தில் இருக்கவேண்டும் என்று கேட்கவில்லை.

எனவே, இளமை போய் விட்டது. மறுபடியும் இன்னொரு ‘கடவுள்’ வரமாட்டாரா?  பழைய மாதிரி எங்களை ஆக்கிவிடுங்கள். இவ்வளவு தூரம் வாழ வேண்டிய அவசியமே இல்லை என்று  அவர்கள் ஏங்கினார்கள் என்று கதை. அதை நினைவூட்டக் கூடிய அளவிற்கு, உங்கள் முதல்வர் செந்தாமரை இதை எடுத்துக் காட்டு கிறார்.

இந்தப் புத்தகத்தில், பல  கட்டுரைகள் 90 அய் கடந்து தான் என்று எழுதியிருக்கிறேன். 90 அய் கடந்தா? அது வயதைக் கடக்கலாம்; ஆனால் எழுதுகின்ற ஆற்றல்?  இதுவரையில்  எல்லாமே சரியாக இருக்கிறது.  இன்னும் கொஞ்ச நாள்கள் சரியாக இருக்கும். ஆனால், ஆற்றல் குறைந்துகொண்டே இருக்கும். ஆகவேதான்,  அது குறைத்தால்தான், இதையெல்லாம் எழுத முடியும். நிச்சயம் நீங்கள் குறைத்திருக்கிறீர்கள். அதற்காக இந்த விழா பயன்பட்டிருக்கிறது. அதற்காக நான் என்னுடைய அருமையான, அன்பான நன்றியை, உங்கள் அனைவருக்கும், மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

லலிதா காமேசுவரன்

இந்தக் கல்லூரியை நினைக்கும்போது, எனக்கு ஒரு பெரிய  மகிழ்ச்சி என்னவென்றால், முதல் முதலில், புதிய மாணவர்களுக்குச் சொல்லுகிறேன், ஏனென்றால், இந்த வரலாறு அவர்களுக்குத் தெரியாது. பெண்களுக்காகவே பாலிடெக்னிக் கல்லூரியை, தஞ்சை வல்லத்தில் நாங்கள் தொடங்கினோம். அதேபோன்று இங்கே மருந்தியல் கல்லூரியைத் தொடங்கினோம்.

கல்லூரி தொடங்கவேண்டும் என்ற சிந்தனை எழுந்தபோது, மருத்துவக் கல்லூரி பேராசிரியராக இருந்த லலிதா காமேசுவரன் (சோமசுந்தர பாரதியாரின் மகள் அவர்.  பின்னாளில் அவர்தான் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார்) அவர்களிடம் கேட்டேன், ‘‘அம்மா, பெண்க ளுக்காகவே ஒரு மருந்தியல் கல்லூரியைத் தொடங்க வேண்டும்’’ என்றேன். பாலிடெக்னிக் அதுவும் சேர்ந்து இருந்தது அந்தக் காலகட்டத்தில். அந்தத் துறையில் அனுமதி கிடைக்கவில்லை.

‘‘நீங்கள் தனியாக ஒரு கல்லூரியைத் தொடங்குங்கள்’’ என்று சொன்னார்.

ஒரு பெண் படித்தால்,
நான்கு பேர் படித்ததற்குச் சமம்!

அன்றைய காலகட்டத்தில் 1980 ஆம் ஆண்டில் முயற்சி செய்து, 1982 ஆம் ஆண்டில் அந்த முயற்சி வெற்றி பெற்றது.  விளம்பரம் கொடுத்தோம். நான் சொன்னேன், பெண்களுக்காகத்தான் இந்தக் கல்லூரி,  ஏனென்றால், ஆண்களுக்கு நிறைய  கல்லூரிகள் இருக்கின்றன. ஆகவே, பெரியார் கொள்கைப்படி, மகளிர் படிக்கவேண்டும். ஒரு பெண் படித்தால், நான்கு பேர் படித்ததற்குச் சமம் என்கிற காரணத்தினால், மகளி ருக்காகவே கல்லூரியைத் தொடங்கவேண்டும் என்று நினைத்தோம்.

அதற்காக விளம்பரம் கொடுத்தபொழுது, மகளிர் யாரும் போதுமான அளவிற்கு வரவில்லை. ஆண்க ளுக்கு அட்மிஷன் கிடையாது. மூன்று மகளிர் மட்டும் வந்து, மூன்று அப்ளிகேஷன் மட்டும்தான் வந்தது.

கல்லூரி நிர்வாகத்திற்குப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்; குறைந்தது பத்துப் பணியாளர்களை நியமிக்கவேண்டும். நாம் லாபத்திற்காக கல்லூரியைத் தொடங்கவில்லை; தொண்டு செய்வதற்காகத்தான் தொடங்கியிருக்கிறோம். ஆகவே, மூன்று மாணவி களுக்காக பத்து பணியாளர்களை நியமித்துத் தொடங்கப்பட்ட கல்லூரிதான், இன்றைக்கு, இவ்வ ளவு சிறப்பாக வளர்ந்திருக்கக்கூடிய அளவுக்கு, இந்த 44 ஆண்டுகளாகச் சிறப்பாக நடைபெற்று கொண்டி ருக்கிறது.

மெஜாரிட்டி மகளிர்தான்!

இப்பொழுது பார்த்தீர்கள் என்றால், உலக மகளிர் நாள்! அதை எப்படி நாம் செயல்படுத்துகிறோம் என்றால், இந்தக் கல்லூரியில்  ஸ்டாப் மெம்பர்ஸ், ‘டீச்சிங் ஸ்டாப்’, ‘நான் டீச்சிங் ஸ்டாப்’ இரண்டையும் எடுத்துக்கொண்டால், மைனாரிட்டினா யார் என்றால், ஆண்கள்தான் மைனாரிட்டி. மொத்தம் 50 பேர். இங்கே பணியாற்றக்கூடிய ஆண் பணியாளர்கள், பேராசிரியர்கள், மற்றவர்கள் வெறும் ஒன்பது பேர். மகளிர் பணியாளர்கள்  41 பேர்.  அதேபோன்று, மாணவி கள் 320 பேர்;  மாணவர்கள் 185 பேர். இதில் யார் மெஜாரிட்டி என்றால், மகளிரான நீங்கள்தான்.

பெண்கள் தினத்திற்கு இதைவிட  ஓர் அங்கீகாரம் வேறு இருக்க முடியாது.

அண்ணாமலை அரசர் இல்லை என்றால், நமக்கெல்லாம் படிப்பு கிடையாது!

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தேன்.  அண்ணாமலை அரசர் இல்லை என்றால், நமக்கெல்லாம் படிப்பு கிடையாது. அவர் கொடை வள்ளல். அதே மாதிரி நம்முடைய பேராசிரியர் முருகேஸ்வரி அவர்கள் , காரைக்குடியைச் சார்ந்தவர். ‘கோடி கொடுத்து குடியிருக்க வீடும் கொடுத்த வள்ளல்’  அழகப்பர் அவர்கள். அந்த அழகப்பா கல்லூரி இல்லை என்றால், பெண்கள் படித்திருக்க முடியாது.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நான் சேரும்போது, மகளிர் மிகவும் குறைவாக இருப்பார்கள். ஆண்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள். நான் படித்த ஆனர்ஸ் படிப்பில்,  ஒரே ஒரு பெண்தான். இன்டர்மீடியட்டில், நான்கு பெண்கள்தான். இன்றைக்குத் தாராளமாக ஆண்கள் – பெண்கள்   எல்லாம் சாதாரணமாகப் பழகுறீர்கள்.  நான் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில், அய்ந்து ஆண்டுகள் ஆனர்ஸ் உள்பட படித்து, அடுத்த ஆண்டு,  அங்கேயே நான் ‘ஸ்டாப் லெக்சரராக’ இருந்தேன். நான் ஒரு நாள் கூட எந்த பெண்ணிடத்திலும் பேசிய பழக்கமே கிடையாது.

ஆனால், இன்றைக்குச் சாதாரணமாக மாணவர்கள், மாணவியிடம் பேசுவார்கள். அது தவறில்லை. என்னு டைய போஸ்ட் கிராஜுவேட்ல ஒரு பெண் வந்து சேர்ந்தாங்க. பி.ஏ. முடித்து  எம்.ஏ. படிப்பிற்காக! என் வகுப்பில் நான் முதல் மாணவன். எல்லாவற்றிலும்  ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன்.  நான் நோட்ஸ் எழுதுவேன், அந்த பெண்  நன்றாகப் படிக்கின்ற பெண், அடுத்தபடியாக அவர் என்ன செய்வார் என்றால், என்னுடைய நோட்சை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், நேரடியாக என்னிடம் வந்து  கேட்கமாட்டார்.  எங்கள் கல்லூரி அட்ெடண்டரிடம், ‘‘அய்யா, வீரமணிகிட்ட அவருடைய நோட்ஸ் கொடுக்கச் சொல்லுங்கள். நான் எழுதிவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’’ என்று சொல்வார். வகுப்பறையில்கூட பெண்கள் தனியாகத்தான் அமர்ந்திருப்பார்கள். அந்தக் கடைசியில் அவர் மட்டும் அமர்ந்திருப்பார். இந்தக் கடைசியில் நாங்கள் அமர்ந்திருப்போம்.

கடைசியா ஃபேர்வெல் அன்றைக்கு, ஊருக்குப் போய்விட்டு வருகிறோம் என்ற சொல்லி, ‘ஆட்டோகிராப்’ வாங்கினார்கள், அன்றைக்குத்தான் பேசினோம்.

அப்படி இருந்த காலத்திற்குப் பிறகு, இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சிக் காலம். பெரியாருடைய சிந்தனை, பெண்கள் புரட்சிப் பெண்களாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. அதனால்தான் இங்கே மாணவிகள் 320 பேர் படிக்கிறார்கள். அது மட்டுமல்ல, மாணவிகள் வாங்குகின்ற பரிசு, சாதார ணமானதல்ல.

ஆனாலும், இது எப்படிப்பட்ட ஒரு சமுதாயம்.  நேற்றைய ‘விடுதலை’யை நீங்கள் பார்த்தீர்களேயானால், இதுவரையிலே பலர் அறியாத ஒரு செய்தியை, எழுதி இருக்கிறோம். பிரஞ்சுப் புரட்சியைப்பற்றி சொன்னால்,  உங்களுக்குத் தெரியும்.

அம்பேத்கர் அவர்கள் கூட, அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில், ‘‘சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம்’’ (‘‘Liberty, Equality and Fraternity’’) என்று  எழுதியிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒலிம்பே டி கோஜஸ்

1789 இல் ‘பிரெஞ்சுப் புரட்சி’ தொடங்கியது. அப்போது மனித உரிமை பற்றி பலர் பேசினார்கள். அக்காலத்தில் வெளியான ‘Declaration of the Rights of Man and of the Citizen’ என்ற ஆவணம், ஆண்களின் உரிமைகளை மட்டும் பேசுகிறது. பெண்களுக்கு அதில் சம உரிமை இல்லை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்தான் ஒலிம்பே டி கோஜஸ்.

அந்த அம்மையாரைப்பற்றி  ‘விடுதலை’யில் எழுதியிருக்கிறோம். அந்த அம்மையார் பெயர்  வரலாற்றில் கூட தெளிவாகப் பதியப்படவில்லை.

1791 ஆம் ஆண்டு அவர் எழுதிய, ‘Declaration of the Rights of Women and of the Female Citizen’ என்ற புத்தகம் பெண்ணுரிமைச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மக்கள் பழசை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு எல்லாரும் வந்த பிறகும்கூட, ஆண்களுக்குத்தான் அது பயன்பட்டதே தவிர, அந்த நாட்டில், பெண்களுக்கு அந்த அளவுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

எழுதும்போது கூட, ‘மேன் கைண்ட்’ (Mankind) என்று எழுதுவார்கள். ‘சேர்மன்’ (Chairman) என்று எழுதுவார்கள். ‘பிரஸ் மேன்’ (Pressman) என்று எழுதுவார்கள். இப்பொழுது அதுபோன்று எழுதவிடமாட்டார்கள்.  ‘பிரஸ் பர்சன்’, ‘சேர் பர்சன்’ இப்படித்தான் எழுதுகிறார்கள். பொதுமை அது.

இன்றைக்கும் வேலைவாய்ப்பு எல்லாவற்றிலும், இன்னமும் ஆணாதிக்கம் உள்ள சமுதாயமாகத்தான் இருக்கிறது. ஆணும் – பெண்ணும் இரண்டு பேரும் வேலைக்குப் போகும்போது, ஆண் கொஞ்சம் தாமதமாக வீட்டிற்கு வந்தால், ‘ஏன், நீங்கள் தாமதமாக வருகிறீர்கள்?’ என்று பெண் கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும், அந்த ஆண் ஒப்புக்கொள்ளமாட்டார். ஆனால், அந்தப் பெண் பணி முடிந்து, கொஞ்சம் தாமதமாக வீட்டிற்குப் போனால், ‘‘ஏன், இவ்வளவு தாமதம்?’’ என்று அந்த ஆண் கேட்டால், அதற்குரிய பதிலை அந்தப் பெண் சொல்லுகின்ற நிலைதான் இன்றைக்கும்!

பெண்களுக்குப் படிப்பைக் கொடுத்தோம், பெருமை கொடுத்திருக்கிறோம். ஆனால், இரட்டிப்பு வேலை.  என்ன அந்த இரட்டிப்பு வேலை என்றால், சாதாரணமான வேலை அல்ல.

இதுதான் பெண்கள் தினத்தினுடைய வெற்றி!

இன்னொரு நிகழ்ச்சி இருக்கின்ற காரணத்தால், ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்திருக்கிறார்கள். நியாயம்தான். இதுவரையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், உங்களில் பல பேருக்கு நாங்கள் அட்மிஷன் கொடுத்திருக்கிறோம். நாங்கள் அட்மிஷன்  கொடுத்ததினால்தான், நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள்.  இதுவரையில் நாங்கள் சீட்டு (அட்மிஷன்) கொடுத்தோம்; உங்களுக்குச் சீட்டு கொடுத்த எனக்கு, நீங்கள் இப்போது எனக்கு சீட்டு கொடுக்கிறீர்கள். இந்தத் துணிவைப் பாராட்டுகிறேன்! இதுதான் பெண்கள் தினத்தினுடைய வெற்றி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *