திருநர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்! திருநர் பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசே திரும்பப் பெறுக! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் இருக்கும் மக்களின் நீதிக்கான போராட்டமே சமூகநீதிக்கான போராட்டமாகும்! சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தரப்பு மக்களும் சம உரிமையுடன் வாழ்வ தற்காகவே திராவிடர் இயக்கம் நூறாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறது. திராவிட இயக்கக் கொள்கை அறிக்கையில் (Dravidian Manifesto)
‘பாலின சமத்துவம்’ என்ற பொதுவான சிந்தனையிலும், குறிப்பாக திருநர் உள்ளிட்ட பால்புதுமையினருக்கான உரிமைகள் என்றும் நமது கொள்கையாகவே அறி வித்துள்ளது
திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட பால்புது மையினர் அல்லது மாற்றுப் பாலினத்தவருக்குரிய உரிமைகளை முதலில் வழங்குவதற்கான அரசு ரீதியான நடவடிக்கைகளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் எடுத்துத் தொடங்கி வைத்தார். அது இன்று வளர்ந்து சமூகத்தில் சம உரிமை படைத்தோர் என்ற நிலையை நோக்கி இட்டுச் செல்லுகிறது.
திராவிட இயக்கம் தான்
உருவாக்கியது!
திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்து தி.மு.க.வின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கொண்டு வந்த தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றையும் திராவிட இயக்கம் தான் உருவாக்கியது.
திருநர் உரிமைகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) Vs இந்திய யூனியன் (2014) தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க மிக முக்கியமான ஒன்றாகும்.
‘திருநர் பாதுகாப்புச் சட்டம்!’
பின்னர் 2019 ஆம் ஆண்டு ‘திருநர் பாதுகாப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.
ஆனால், அதனைத் திருத்துவதற்கான மசோதாவைக் கடந்த மார்ச் 13 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அம் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், முன்பே நடைமுறையில் உள்ள சட்டத்தை முழுமையாகச் செயலாக்கம் செய்ய வேண்டும் என்றும் தொடந்து வேண்டுகோள்கள், வலியுறுத்தல்கள் இருந்தாலும், வலுக்கட்டாயமாக அந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
கூடுதல் பாதிப்பையும், அநீதியையும் ஏற்படுத்தும் என்று திருநர் சமூகத்தினர் எதிர்ப்பு!
திருநர் சமூகத்தினர் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமையை இந்தச் சட்டம் நீக்குகிறது. அதற்குப் பதிலாக, அந்த அதிகாரத்தை அரசு நியமிக்கும் மருத்துவக் குழுக்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்குகிறது. இதனால், திருநர் மக்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க மருத்து வப் பரிசோதனைக்குள்ளாகி, நிர்வாக அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இது அவர்களின் தனியுரிமையையும், சுயமரியாதையையும், சமத்துவத்தையும் மீறுகிறது. ஏற்கெனவே புறக்க ணிக்கப்பட்டிருக்கும் திருநர் சமூகத்திற்கு இது கூடுதல் பாதிப்பையும், அநீதியையும் ஏற்படுத்தும் என்று திருநர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதை விடக் கொடுமையாக, திருநர் சமூகத்தினர், மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி திருநர்கள் ஆக்கு கிறார்கள் என்ற பழைய அவதூறை, வெறுப்புப் பிரச்சாரத்தை சட்ட வார்த்தைகளுடன் இச்சட்டம் முன்வைக்கிறது. இது எவரையும் பழிவாங்குவதற்கான வாய்ப்பை உண்டாக்கும் என்பது எளிதில் எவரும் புரிந்துகொள்ளக் கூடியதாகும். திருநர் குடும்ப கட்ட மைப்புகள், செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தி, பழிவாங்கும் முயற்சிக்கு வழிவகுக்கும்.
ஏற்கெனவே, காவல்துறையினராலும், சமூகநீதி உணர்வற்ற பொதுச் சமூகத்தாலும் ஒடுக்கப்படும் சமூகத்தையும், அதன் ஆதரவாளர்களையும் மேலும் ஒடுக்கவே இந்தச் சட்டம் பயன்படும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.
தமிழ்நாடு மாநில திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!
திருநர் சமூகத்தவரின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கிடைமட்ட இடஒதுக்கீடு (Horizontal Reservation), வயது தளர்வு மற்றும் மதிப்பெண் தளர்வு, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளுக்கான அணுகல் எளிமையாக்கல், வீட்டு வசதித் திட்டங்கள், பொதுப் போக்குவரத்து, தரமான மற்றும் அணுகக்கூடிய சுகாதாரச் சேவைகள், ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் முதிய திருநருக்கான ஆதரவு போன்ற நெடுநாள் கோரிக்கைகளை இந்தச் சட்டம் கண்டு கொள்ளவில்லை என்றும் தமிழ்நாடு மாநில திருநங்கைகள் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் கூட்டறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர்.
சொந்தச் சமூகத்தையே குற்றவாளியாகத் திரிக்க நினைக்கும் சட்டமாக உருவாகியுள்ளது!
சமூகத்தின் முக்கியமான ஒரு பகுதியினரைக் குறித்த சட்டங்களை, திட்டங்களை நிறைவேற்றும்போது, அச் சமூகத்தின் பிரதிநிதிகளை, அதற்காகப் போராடு பவர்களை அழைத்து, அவர்களின் கருத்துகளை அறிந்து அதன்படி தேவையானவற்றைச் செய்வது தானே ஓர் அரசின் கடமை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. அரசு எதையும் திணிப்பதையே வழக்கமாகக் கொண்டது. அப்படித் தான் இந்தச் சட்டமும் திருநர் சமூகத்திற்கு, எந்த விதமான ஆதரவும் வழங்காமல், சொந்தச் சமூகத்தையே குற்றவாளியாகத் திரிக்க நினைக்கும் சட்டமாக உருவாகியுள்ளது.
திருநர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்!
எதிர்க்கட்சிகள், சமூகநீதிச் சிந்தனையாளர்கள், திருநர் உரிமைப் போராளிகளின் கருத்தை ஏற்று, இச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். திருநர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
சமூகத்தின் கடைக்கோடியில் இருப்போருக்கும் கடைத்தேற்றம் கிடைக்க வேண்டும்! சட்டம் அதன் கடையாணியைக் கழற்றக் கூடாது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.3.2026
