சென்னை,ஏப்.8- திமுக மேனாள் தலைவரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான முத்தமிழறிஞர் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக் கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். இதில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் பொதுப்பணித்துறை தயாரித்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பரிசீலித்த, தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
‘காவல் உதவி செயலி’ மூலம் சைபர் குற்ற புகார்களையும் பதிவு செய்யலாம்
சென்னை,ஏப்.8- சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளர் தீபா சத்யன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது: பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவசர காலங்களில் காவல் துறையின் உதவியை உடனடியாக பெறும் வகையில், 66 சிறப்பம் சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டது. இதை கடந்த ஆண்டு ஏப்.4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இது தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த காவல் உதவி செயலியை தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2 லட்சத்து 79 ஆயிரத்து 656 பேர் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதில், சென்னையில் 46,174 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி 14 தலைப்புகளின்கீழ் 66 அம்சங்களை கொண்டிருக்கிறது. இது அவசரகால செய லியாகவும், பிற தேவைகளுக்காகவும் வடி வமைக்கப் பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
100, 112 மற்றும் 101 போன்ற அனைத்து கட்டணமில்லா எண்களும் இந்த காவல் உதவி செயலி மூலம் பெறலாம். சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம். 37 மாவட்டங்கள், 9 காவல் ஆணை யர் அலுவலகங்கள் கூகுள் மேப்பில் இணைக்கப்பட் டுள்ளன.
தமிழ்நாடு மக்கள் தொகையில் வெறும் 0.36 சதவீதம் பேர் மட்டுமேஇதை பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, இந்த செயலியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். குறிப் பாக, கல்வி நிலையங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். காவல் உதவி செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து இதன் முழு பலன் களையும் பெற் றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீபா சத்யன் கூறினார்.
புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு
சென்னை, ஏப். 8- புத்தாக்க உருவாக்கல் மற்றும் விவசாயிகளை மய்யப்படுத்திய அணுகுமுறை ஆகியவை காரணமாக, ஆண்டு அய்டிஎல் நிறுவனத்தின் விற்பனை 1,51,160 டிராக்டர்களாக உயர்ந் துள்ளது. இந்த அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் சந்தையில் 14.1% பிடித்து ஒட்டுமொத்தமாக 11% வளர்ச்சியை எட்டியுள்ளது.
கணிக்க முடியாத சந்தை எதிர்பார்ப்புகள்தான் விற்பனை சந்தையைத் தீர்மானிக்கும் காரணிகளாக இந்தியாவில் மட்டுமின்றி உலக டிராக்டர் சந்தையிலும் நிலவுகிறது. பன்முக வேளாண் பயிர் சாகுபடி மற்றும் மண்ணின் பரப்பளவு ஆகியவற்றின் காரணமாக இயந்திரமாக்கலுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் மிகச் சிறப்பான செயல்பாடு குறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில்:- “இத்தகைய சாதனை எட்டப்பட்டதற்கு பல்வேறு முக்கிய முன்னெடுப்புகள் காரணமாகும். குறிப்பாக தயாரிப்பில் புத்தாக்கம், டிராக்டர் விலையை இணையதளத்தில் வெளியிட்டது ஆகியனவும் இதில் அடங்கும். இதன் மூலம் டிராக்டர் விலையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டதோடு வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் வாயிலாக விவசாயிகள் எளிதாகக் கடன் பெற வழி ஏற்படுத்தியது. மேலும் அய்.டி.அய். உள்ளிட்ட கல்வி மய்யங்களில் பயின்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் மூலமாக உடனடி சேவை மற்றும் விற்பனையாளர்களின் புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்று அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்ததும் புதிய இலக்கை எட்டுவதை சாத்தியமாக்கியது” என்று குறிப்பிட்டார்.