சேலம், மார்ச் 25- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப் பட்டு அன்றைய நாளே முடிவுகள் அறிவிக்கப் படவுள்ளன.
த.வெ..க. மாவட்ட செயலாளர்
மீது வழக்கு!
இத்தகைய சூழலில் தான் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் காவல் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு (23.03.2026) செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையின் சார்பில் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்வேந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணதானப்பட்டி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது. அதே சமயம் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் ரம்ஜான் விழாவை முன்னிட்டு காலை (21.03.2026) சிறப்புத் தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு வந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக 500 சிறிய தண்ணீர் பாட்டில்கள் வைத்திருந்தனர். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், மற்றும் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அங்கு வந்த பறக்கும்படை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக த.வெ.க. ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி மீது சிறார்களைப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தவெக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
