சென்னை, மார்ச் 25– தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது சமையல் எரிவாயு உருளை செலவாகும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று பன்னாட்டுச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளை விலையை மாற்றியமைக்கின்றன.
இந்தச் சூழலில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளதால், வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளைகளின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன..
இப்போது நிலவும் பன்னாட்டு அரசியல் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, வணிக ரீதியான எரிவாயு உருளைகளின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது..
ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்புகள் அல்லது போக்குவரத்து செலவு மாற்றங்கள் அமலுக்கு வரும்போது, அதன் தாக்கம் நேரடியாகச் சமையல் எரிவாயு உருளையின் விலையில் பிரதிபலிக்கும்.
குறிப்பாக உணவகங்கள் மற்றும் சிறு வணிகங்கள் பயன்படுத்தும் 19 கிலோ உருளையின் விலை உயர்ந்தால், அது உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் என்பதால் பொதுமக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்..
வீட்டு உபயோக உருளைகளைப் பொறுத்தவரை, ஒன்றிய அரசு ஏதேனும் சிறப்பு மானியங்களை அறிவிக்குமா என்பது ஏப்ரல் 1ஆம் தேதிதான் அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.
அதேபோல், எரிவாயு உருளை பகிர்மானத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வர உள்ளன. உங்கள் சமையல் எரிவாயு உருளை இணைப்பில் ஆதார் எண், KYC விவரங்கள் சரியாக புதுப்பிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த மார்ச் 31-க்குள் உறுதி செய்து கொள்வது அவசியம்.
ஒருவேளை விவரங்கள் சரியாக இல்லாவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒன்றிய அரசின் மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு வருவதில் சிக்கல் ஏற்படலாம். பல இடங்களில் போலி இணைப்புகளை நீக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால், உண்மையான நுகர்வோர்கள் தங்கள் ஆவணங்களைச் சரிபார்ப்பது நல்லது.
சமையல் எரிவாயு உருளை இணைப்புடன் கைப்பேசி எண்ணை இணைத்திருப்பவர்களுக்கு, இனி சமையல் எரிவாயு உருளை பதிவு செய்தவுடன் அதன் இப்போதைய விலை மற்றும் வழங்கும் நாள் விவரங்கள் இன்னும் துல்லியமாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
ஏப்ரல் 1 முதல் சமையல் எரிவாயு உருளை வழங்குபவர்களுக்குக் கூடுதலாகப் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. விலையில் மாற்றம் வரும்போது, பில்லில் உள்ள சரியான தொகையை மட்டுமே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். ஒருவேளை கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் புகார் எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
