சென்னை, மார்ச் 25- “இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது” என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்துவருகிறது. கூட்டணியில் உள்ள பெரும்பான்மையான கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டை முடித்து ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. இந்நிலையில் கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுவந்த நிலையில், அதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் இரண்டு கட்டங்களாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
“2026 தேர்தலில் ம.நீ.ம. போட்டி இல்லை” – கமல்ஹாசன் எம்.பி. அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து நேற்று (24.3.2026) திமுக – மநீம தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்திருந்தார். இறுதி நிமிடத்தில் “2026 சட்டமன்றத் தேர்தலில் மநீம போட்டியிடவில்லை. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை” என நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது முடிவு குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “அவரது பெருந் தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மநீம தலைவருமான கமல் ஹாசன், இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடி யாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.
தியாகம் அல்ல, கடமை!
“இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
