நாமக்கல், மார்ச் 25- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் நோக்கில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் புதுமையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
மாவட்டத்தின் அடையாளமான முட்டை மற்றும் கோழியை மய்யமாக வைத்து இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கவனத்தை ஈர்க்கும் “வேட்டி அணிந்த கோழி” இலச்சினை
நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தியில் உலகப்புகழ் பெற்றது. இதனைப் பிரதிபலிக்கும் வகையில், கோழி ஒன்று மனித உருவத்தில் வேட்டி மற்றும் பனியன் அணிந்து, கையில் முட்டையை ஏந்தியிருப்பது போன்ற ஒரு சுவையான இலச்சினை (Logo) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முட்டையில் தேர்தல் நாளான ஏப்ரல் 23 என்பது தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.
நாமக்கல் குளக்கரை திடலில் நேற்று (24.3.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி இந்த புதிய விழிப்புணர்வு இலச்சினையை வெளியிட்டார்.
பின்னர், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தனது விரலை உயர்த்திக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வில், மாவட்டத்தின் முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் அடையாளத் தைப் பயன்படுத்தி மக்களிடையே நெருக் கத்தை ஏற்படுத்து வதன் மூலம், தேர்தல் குறித்த விழிப்புணர்வை கிராமப்புறம் வரை கொண்டு செல்வதே மாவட்ட நிர்வாகத்தின் திட்டமாகும்.
இந்த நூதன முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
