‘‘வாழ்வியல் சிந்தனை’’களை, நான் யாருக்காக எழுதினேன்?
வாசகர்களுக்காக எழுதவில்லை; எனக்காக எழுதினேன், எனக்குப் பயன்பட வேண்டும் என்று எழுதினேன்!
திருச்சி, மார்ச் 25 ‘‘வாழ்வியல் சிந்தனையை, நான் யாருக்காக எழுதினேன்? என்ற ஒரு கேள்வியை முதலில் பல பேர் கேட்டார்கள். நிறைய பேர் நினைத்திருப்பீர்கள், வாசகர்களுக்காக எழுதினேன் என்று. நான் எழுதத் தொடங்கியபோது, வாசகர்களுக்காக எழுதவில்லை; அதைக் கேட்டால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். எனக்காக எழுதினேன். எனக்காகப் பயன்பட வேண்டும் என்று எழுதினேன்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில்
முப்பெரும் விழா!
கடந்த 9.3.2026 அன்று காலை 9.30 மணிக்கு, திருச்சி, கலைஞர் கருணாநிதி நகரில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கத்தில், பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில், ‘தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 107 ஆம் பிறந்தநாள் விழா!’ ‘உலக மகளிர் நாள் விழா!’ ‘புத்தகங்கள் வெளியீட்டு விழா!’ என முப்பெரும் விழாக்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
திட்டமிட்டு கிடைக்கிற இன்பத்தை விட, எதிர்பாராமல் கிடைக்கின்ற மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!
சிறப்பு வாய்ந்த கல்லூரி – பெரியார் மருந்தியல் கல்லூரி என்ற வரலாறு படைக்கக்கூடிய – 40 ஆண்டுகளாக, அதற்கும் மேற்பட்டு மிகப்பெரிய அளவிலே தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளிலே பெருமைக்குரிய ஒரு கல்லூரி பெரியார் மருந்தியல் கல்லூரி என்ற சிறப்பை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிற கல்லூரியாகிய நம்முடைய கல்லூரிக்கு நான் இன்றைக்கு அதுவும் உலக மகளிர் நாள் என்ற பெருமையோடு இருக்கக்கூடிய நாள் நேற்றைய நாள் என்றாலும், அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இந்தக் கல்லூரிக்கு, இப்போது எதிர்பாராத ஏதோ ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் திட்டமிட்டு கிடைக்கிற இன்பத்தை விட, எதிர்பாராமல் கிடைக்கின்ற மகிழ்ச்சி இருக்கிறதே அது எப்போதும் இரட்டிப்புப்படும். அதற்கு மதிப்பு உண்டு. அந்த வகையிலே நான் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில இருக்கக்கூடிய நிலையிலே, திருச்சியில் ஒரு நாள் ஓய்வெடுக்கலாம் என்று வந்தேன். ஆனால், ஓய்வு என்று சொல்லி சாய்வில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துப்படி ‘‘ஒரு பணியில் இருந்து, இன்னொரு பணி செய்தாலே அது ஓய்வுதான்.’’
நம் கல்லூரி மாணவர்கள்,
மிகச் சிறப்பாக முத்திரை பதித்து
வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள்!
ஒரு சாராரிடம் பழகுவதில் இருந்து, அவர்கள் இன்னொரு சாராரிடத்தில், இன்னொரு பகுதி மக்களைப் பார்ப்பதே அவர்களுக்குச் சிறப்பு என்பதாலே, அந்த வாய்ப்பை நமக்கு அளித்திருக்கிற இந்த மருந்தியல் கல்லூரியினுடைய ஆற்றல்மிகு முதல்வர், ஒவ்வொரு நாளும் இங்கே ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது, நீண்ட நாள்களாக; நான் கவனித்து கொண்டிருக்கிறேன், நீங்கள் கவனித்தீர்களா, என்று தெரியாது. அது என்னவென்று சொன்னால், இந்தக் கல்லூரியில் இருந்து நம்முடைய பிள்ளைகளை போட்டியில் பங்கேற்க வெளியில் அனுப்புகிறார்கள். அது விளையாட்டாக இருந்தாலும் சரி, பேச்சு போட்டியாக இருந்தாலும் சரி, கட்டுரை போட்டி, எழுத்துப் போட்டியாக இருந்தாலும் சரி அல்லது அறிவுசார் போட்டிகள் எதுவாக இருந்தாலும், கல்லூரியில் படிக்கக்கூடிய நம்முடைய பிள்ளைகள், மிகச் சிறப்பாக முத்திரை பதித்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள்.
அந்தச் செய்தியை நான் ‘விடுதலை’யிலே பார்த்தேன். அதேபோல முதல்வர் அவர்கள் அனுப்புகின்ற மின்னஞ்சலில் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன், பெருமிதம் அடைந்தேன்.
விருதுகளை வாங்கிக் கொண்டே இருக்கிறார் நம் கல்லூரி முதல்வர்!
இந்த வகையில், உங்களிடம் போட்டி போடக்கூடிய அளவிற்கு, இங்கே பணியாற்றக்கூடிய முதல்வரும் இருக்கிறார், மற்றவர்களும் இருக்கிறார்கள். அது என்னவென்றால், அடிக்கடி முதல்வர் ‘அந்த விருது, இந்த விருது’ என்று விருதுகளை வாங்கிக் கொண்டே இருக்கிறார்.
மக்களுக்காகத்தான் அறிவு; மக்களுக்காகத்தான் சமுதாயத்திலே வாழுகிறோம்!
அவருடைய தொண்டுக்கு, அவருடைய ஆற்றலுக்கு, அவருடைய ஆளுமைக்கு, அதே போல நம்முடைய பணித்தோழர்கள் – இருபால் தோழர்களாக இருந்தாலும், வேறு எப்படி இருந்தாலும் அது ஒரு பெருமைக்குரியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட இந்தக் கல்லூரி யினுடைய முப்பெரும் விழாவிற்கு இங்கே வந்து, நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, மூன்று முக்கிய நூல்கள் சிறப்பாக பெரியார் மருத்துவ குழுமத்தினுடைய பணி என்ன? எவ்வளவு சிறப்பாக நடக்கிறது? தொண்டறம் என்பதை வாழ்க்கையிலே தாண்டிய சிறந்த அறமாக ஆக்கிக்கொண்டு ‘‘நாம் படிப்பு மட்டும் படித்தோம், கல்லூரிக்குள்ளே போனோம், கற்று கொடுத்தோம், உடனே திரும்பி விட்டோம்’’ என்று இல்லாமல், ‘‘மக்களுக்காகத்தான் அறிவு; மக்களுக்காகத்தான் சமுதாயத்திலே வாழுகிறோம்; அந்த சமுதாயத்திற்கு நாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் உண்டு’’ என்ற அளவிலே, மிக சிறப்பான வகையிலே நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்யக்கூடிய தொண்டூழியம் எப்படிப்பட்டது? என்பதை இந்த ஆவணம் சிறப்பாக உலகுக்குப் பறைசாற்றுகிறது.
‘அது பக்தி; இது புத்தி!’
அதேபோல நண்பர்களே, நம்முடைய நாட்டிலே, தழைக்கின்ற ‘ப்ளோரான் பானா’ என்றெல்லாம் சொல்வார்கள், அவருடைய பாட புத்தக மொழிகளிலே. மூலிகைகள், செடிகள், கொடிகள் எல்லாம் எப்படி நமக்கு வாழ்வாதாரத்துக்குப் பயன்படுகின்றன என்பது. ஆனால், இன்றைக்கு அதைப் பெரிய அளவிலே மக்கள் மத்தியிலே கொண்டு போகவில்லை. ஆனால், இந்த நாட்டில் உள்ளவர்களை விட, வெளியே இருந்து வந்தவர்கள், அந்தச் சூட்சமத்தையும், ரகசியத்தையும் புரிந்து கொண்டு, அவர்கள் அதை மிகப்பெரிய அளவிற்கு முதலீடாகப் போட்டு, பெரிய அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம்முடைய நாட்டிலே நாம், அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை. வேண்டுமானால், ‘துளசி மாடம்’ வைத்துக் கொண்டு, அதற்கு விளக்கு வைத்து சுற்றிக் கொண்டிருப்பாரே தவிர, இருமலுக்கு அந்தத் துளசியினால் ஏற்படுகிற மருந்து கண்டுபிடித்து, அதற்காக மிக முக்கியமாக வாய்ப்பு கொடுத்தார்களா? எனவே, வணங்குவதை விட, மருத்துவக் குணத்தோடு அதைப் பார்ப்பது என்பது இருக்கிறதே, ‘அது பக்தி; இது புத்தி’ – இதுதான் ரொம்ப வித்தியாசமில்லாத ஒரு மிக முக்கியமான அடிப்படை.
ஆகவே, அந்த அடிப்படையிலே, அவையெல்லாம் எப்படிப்பட்டவை என்பதை, இந்த நூல் சிறப்பாகச் சொல்லுகிறது.
மூன்றாவது நூலைப்பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இது எனக்கு ஒரு விசித்திரமான ஒன்றாகவே பயன்பட்டது. அப்படி பயன்பட்டது மட்டு மல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய அளவிற்கு, ஓர் அற்புதமான பணியை, நம்முடைய மருந்தியல் கல்லூரியின் முதல்வர் நம்முடைய பேராசிரியர் முனைவர் செந்தாமரை அவர்களும், மருந்தியல் கல்லூரியினுடைய ஒட்டுமொத்தத் தோழர்களும், துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் எல்லோரும் ஒரு வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த வாழ்வியல் சிந்தனையை, நான் யாருக்காக எழுதினேன்? என்ற ஒரு கேள்வியை முதலில் பல பேர் கேட்டார்கள். நிறைய பேர் நினைத்திருப்பீர்கள், வாசகர்களுக்காக எழுதினேன் என்று. நான் எழுதத் தொடங்கியபோது, வாசகர்களுக்காக எழுதவில்லை; அதைக் கேட்டால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். எனக்காக எழுதினேன். எனக்காகப் பயன்பட வேண்டும் என்று. என்னிடத்திலே இருக்கிற வாய்ப்புகள் என்ன? அதையே நாம் ஒருமுறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்வோம் என்று படிக்கிறோம், அந்தப் புத்தகத்தைப் படித்து மகிழ்கிறோம். ஆனால், படித்ததை எந்த அளவிற்கு அதை நாம் நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். வாழ்க்கையிலே அதை எந்த அளவிற்கு அதனால் நாம் பயனடைந்திருக்கிறோம். படித்துவிட்டு, தூக்கிப் போட்டு விட்டோமா? என்று இல்லாமல், மிகப்பெரிய அளவில் ஒரு கேள்வி கேட்டு, விளையாட்டுப் போக்கில், ‘Light Reading’ என்று சொல்வார்கள் ஆங்கிலத்தில்.
தொடர்ந்து எழுதுவதற்கு
ஊக்கச் செயலியாகப் பயன்பட்டது
கனமான விஷயங்களை சொல்லாமல், போகும்போதே சொன்னால் போன்று அது வர வேண்டும். அதுமாதிரிதான் இந்த வாழ்வியல் சிந்தனையை எழுத ஆரம்பித்தேன். முதலில், சாதாரணமாக புத்தகம் எழுத வேண்டும் என்று தொடங்கி, தொடர்ந்து எழுத வேண்டும் ‘விடுதலை’யில் என்று நினைத்தேன். கடுமையான கொள்கைப் பிரச்சாரம் எல்லாம் இருக்கின்ற நேரத்தில், ஒரு இரண்டு பத்தி, மிகச் சுருக்கமான அளவிற்கு, அதை நாம் எழுத ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தோம். அதற்கு வாசகர்கள் மத்தியிலே மிகப்பெரிய அளவிற்குக் கிடைத்த வரவேற்பு இருக்கிறதே, அது என்னை திகைக்க வைத்தது. அது மட்டுமல்ல, தொடர்ந்து எழுதுவதற்கு அதுதான் ஊக்கச் செயலியாகப் பயன்பட்டது.
ஒருவர் பெரிய நீச்சல் வீரராக இருந்தார். நீச்சலை மிக அற்புதமாக அடிக்கிறார் என்று மிகப்பெரிய அளவுக்குச் சொன்னார்கள். அவரைப் பார்த்து ஒருவர், ‘‘என்னங்க இவ்வளவு பெரிய கெட்டிக்கார நீச்சல் வீரராக இருக்கிறீர்களே’’ என்று கேட்டார்.
‘‘ஆமாங்க, என்னை இந்தத் தண்ணீரில் தள்ளிவிட்டவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்’’ என்று சொன்னார்.
அதுபோல, யார் என்னை அந்தத் தண்ணீரில் தள்ளிவிட்டது என்று, அவரை இன்னமும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். வாசகர்களாகிய நீங்கள்தான், ‘‘என்னைத் தள்ளிவிட்டவர்கள், என்னை உற்சாகப்படுத்துகிறவர்கள்’’ என்று மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்பு இருந்தது. ஆகவேதான், நிறைய புத்தகங்களைப் படிப்பேன், பல செய்திகளை அதிலிருந்து அறிந்துகொள்வேன்.. எனக்கு ஒரு பெரிய ‘ரிலாக்சேஷன்’ – ஏனென்றால், அந்த வார்த்தைக்குச் சரியான சொல்லை, தமிழில் கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சி எடுத்தேன்.
ஒருவரிடம், ‘‘ஏங்க, எங்கே போனீங்க?’’ என்று கேட்டால், ‘‘ஊருக்கு, கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ செய்வ தற்காகப் போனேன்’’ என்று சொல்வார்கள்.
அதைக் கொஞ்சம் நல்ல தமிழில் சொல்லலாமே என்றால், ஓய்வு எடுக்க என்றால், அது ரிலாக்சேஷன் அல்ல. ரெஸ்ட் எடுக்கப் போனேன் என்றால்தான், ஓய்வு எடுக்க என்று அர்த்தம். ஆகவே, என்ன செய்யலாம் என்று தேடும்போது, புலவர் நன்னன், அய்யா இராமநாதன் போன்றவர்கள் எல்லாம் சிறந்த தமிழ் அறிஞர்கள். அவர்களிடத்தில் கூட கேட்டேன்.
‘‘அது யோசிக்க வேண்டியதுதான்; சரியான ஒரே சொல்லாக இருக்க வேண்டும். யோசனை செய்து சொல்லுகிறோம்’’ என்று சொன்னார்கள்.
அப்போது நானே சொன்னேன், வடலூர் வள்ளலார் நமக்குக் கை கொடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் எழுதின பாட்டில் மிக அழகாகச் சொன்னார்,
‘‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந் தருளே.’’
‘ரிலாக்சேஷன்’ என்பதற்குத்
தமிழில் ‘இளைப்பாறுதல்!’ என்பதுதான் அற்புதமான சொல்!
ஆகவே, ‘ரிலாக்சேஷன்’ என்ற வார்த்தைக்கு தமிழில் ‘இளைப்பாறுதல்’ என்பதுதான் அற்புத மான சொல். அப்படி ஒரு நல்ல அளவிற்கு வாய்ப்பாக இருக்கக்கூடிய ஒரு சூழல்தான் இங்கே வந்திருக்கிறது என்று அதற்காக எழுத ஆரம்பித்ததுதான். அதற்குப் பிறகு வாச கர்கள் மத்தியிலே தொடர்ந்து எழுதினேன். இன்னுங்கேட்டால், நாம் பல புத்தகங்களை படிக்கிறோம், நாம் படித்த அந்தப் புத்தகத்தை – அந்த இன்பத்தை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்ற ஒரு குறளைப்பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். ஈத்துவக்கும் என்றால், பணத்தை கொடுப்பது அல்லது தர்மம் செய்வது அல்லது மற்றவர்களுக்குக் கொடையாக கொடுப்பது என்று சொல்லும்போது, கொடை என்றால், பொருளை மட்டும்தான் நினைக்கிறார்கள். ஆனால், அதைக் கொஞ்சம் விரிவுபடுத்திப் பார்க்கலாம்.
நல்ல புத்தகங்களை நாம் படிக்கிறோம்; நல்ல கருத்துகளை நாம் கேட்கிறோம். அதை நாம் அனுபவித்தால் மட்டும் போதாது; நம்முடைய குடும்பத்தி னரோடு பகிர்ந்து கொள்ளலாம்; நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கும் கிடைக்கும். எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆகவேதான், நாம் படித்ததை அவர்களிடம் சொன்னவுடன், அவர்களுக்கு ஒரு புது செய்தியாக இருக்கும். அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் சொல்வதுபோன்று, ‘மல்டிபிளேயர் எபெக்ட்’ என்பது போன்று பல பேருக்கு அதைப் பகிரும்போது, கிடைக்க முடியாத ஓர் இன்பம் நமக்குக் கிடைக்கிறது. நம்மோடு மட்டும் அதை வைத்துக் கொள்ளவில்லை. அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறோம்.
(தொடரும்)
