கடவுள் வேடமிட்டாலும் கருணையில்லையா?
பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை
‘இந்து அமைப்பினர்’ உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
பீகாரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேடமிட்டுப் பிச்சை எடுத்து வந்த முதியவர் ஒருவரை, ‘பங்களாதேசி’ எனச் சந்தேகித்து அண்மையில் இந்து அமைப்பினர் கடுமையாகத் தாக்கி பள்ளத்தில் தள்ளிவிட்ட காணொலி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர், சிவன் வேடமணிந்து பீகாரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில இந்து அமைப்பினர், அவரது பெயரைக் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். அவர் பதிலளித்த பின்னரும் திருப்தியடையாத அவர்கள், “நீ இந்து என்றால் காயத்ரி மந்திரம் சொல்” எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு அந்த முதியவர், “நான் படிக்காதவன், சிறுவயதிலிருந்தே ராமர், சிவன், அனுமன் என வேடமிட்டுப் பிழைப்பு நடத்தி வருகிறேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். எனினும், விடாத அந்தக் கும்பல் ஆதார் அட்டையைக் கேட்டுள்ளது. தனது ஆதார் அட்டை ஊரில் இருப்பதாக அவர் கூறியதையடுத்து, “நீ பங்களாதேசியா?” எனக் கூச்சலிட்டு அவரைத் தாக்கத் தொடங்கினர்.
தாக்குதலின் போது அவரிடமிருந்த சூலாயுதம் மற்றும் அன்றைய தினம் பிச்சையாகக் கிடைத்த சில்லறை காசுகளை அந்தக் கும்பல் பறித்துக்கொண்டது. ‘‘வேடத்தைக் கலைத்த பிறகுதான் இந்தச் சில்லறையை வைத்து நான் உணவு உண்ண வேண்டும், பணத்தைக் கொடுத்துவிடுங்கள்’’ என அவர் கெஞ்சியும், அவர்கள் ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பலரும் இக்கொடூரத்தை வேடிக்கைப் பார்த்தார்களே தவிர, யாரும் தடுக்க முன்வரவில்லை இந்த நிலையில் அவரை அங்கிருந்து விரட்ட மிகவும் உயரமான பகுதியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
கீழேவிழுந்த அவருக்குப் பின்னால் கூட்டமாக இளைஞர்கள் ஓடும் காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
இது நாடா – மதவெறி காவி ஓநாய்கள் உலவும் காடா?
மக்களுக்கு அரசு ரீதியாக எந்த நலத் திட்டங்களையும் செய்திடாத பி.ஜே.பி. அரசு – இதுபோன்ற மதவெறி கா(லி)விகளை வளர்த்துவிட்டு, மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இத்தகைய வன்முறைகளைக் கைதட்டி ரசிக்கும் ஒரு வகை மனநோயையும் வளர்த்து விட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுபோன்ற கேவலங்களை அரங்கேற்ற முடியுமா?
ஒருவரை யாரேனும் பொதுவாகத் தாக்கினாலும்கூட, அதனைக் கண்டவர்கள், யாரோ யாரையோ தாக்குகி றார்கள், நமக்கு ஏன் ஊர் வம்பு என்று ஒதுங்கிச் செல்ல மாட்டார்கள்.
அதில் தலையிட்டு, சண்டையை விலக்கி விடுவார்கள்.
காரணம், இது தந்தை பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட சுயமரியாதை மண் – பகுத்தறிவு மண் – சமூக அமைதியைப் பேணும் மண்!
இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்.
பிச்சை எடுக்கத்தான் சிவனா?
காவிகள், காலிகளா? அல்லது காலிகள், காவிகளா? சிந்திப்பீர்!
