அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள தொகுதி அளவு ‘‘எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்’’ எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்!

சமூக வலைதளப் பதிவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை, மார்ச் 25– “அடுத்த 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்! என்று சமூக வலைதளப்பதிவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் அவர்களின் சமூகவலைதளப் பதிவு வருமாறு:–

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்

2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128 ஆவது அரசியலமைப்புச்திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றச் சிறப்புக்
கூட்டத் தொடரினை கூட்டுக!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள தாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *