‘காசே தான் கடவுளப்பா!’

மகாராட்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள  ஜோதிபா கோவிலில் வரிசையில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சாமியைப் பார்க்க வைக்கும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளது. இப்படி சென்ற இருவர் ‘ஜி-பே’  (G-pay) மூலம் அனுப்பிய பணம் நெட்வொர்க் இல்லாததால் பணம் செல்லத் தாமதமானது. இதனை அடுத்து ‘‘கையில் பணமாகக் கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ‘‘ஜி–பே’யில் அனுப்பி விட்டோம்’’ என்று கூறி பணம் கொடுக்க மறுத்ததால், 15 முதல் 20 அர்ச்சகர்கள் ஒன்று சேர்ந்து பணம் கொடுக்காதவர்களை, மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இது காணொலியாக தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

நாசிக்கைச் சேர்ந்த இரண்டுபேரை அணுகி அர்ச்சகப் பார்ப்பனர்கள், ‘‘இருவரும் இருபதாயிரம் கொடுத்தால் வரிசையில் நிற்காமல் நேராக சாமியைப் பார்த்து விட்டுச் செல்லலாம்’’ என்று கூறியுள்ளனர்.   அவர்களும் தாங்கள் செல்லவேண்டிய ரயில் புறப்படும் நேரம் நெருங்கி விட்டதால் ‘‘இருவரும் பணம் கொண்டுவரவில்லை. கைப்பேசி மூலம் அனுப்புகிறோம்’’ என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஓர் எண்ணைக் கொடுத்து அதில் பணம் அனுப்பக் கூறியுள்ளனர்.

அதில் அவர்கள் அனுப்பிய பிறகு, இருவரையும் சாமிக்கு அருகில் அழைத்துச் சென்று உள்ளனர். இந்த நிலையில், பணம் குறிப்பிட்ட எண்ணிற்குச் செல்லவில்லை என்று அர்ச்சகர்களுக்குத் தெரியவர, அவர்கள் அந்த இருவரையும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ‘‘நெட்வொர்க் சரியில்லாத காரணமாக இருக்கும், கொஞ்ச நேரம் கழித்து வந்துவிடும்’’ என்று கூறியுள்ளனர். மேலும் தாங்கள்  நாசிக் செல்லும் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்று கூறி செல்ல முயன்றுள்ளனர். இதனை ஏற்க மறுத்த அர்ச்சகப் பார்ப்பனர்கள், அந்த இருவரையும் ‘‘பணம் கொடுத்துவிட்டு இங்கிருந்து செல்லுங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த அர்ச்சகப் பார்பபனர்கள் ஒன்று சேர்ந்து அந்த இருவரையும் சரமாரியாகக் கைகளால் தாக்கியும், கால்களால் உதைத்தும் உள்ளனர். ஓர் அர்ச்சகப் பார்ப்பனர் செங்கல்லை எடுத்து அவர்களைத் தாக்கியுள்ளார்.  அங்கிருந்த மற்ற பக்தர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். அங்கு காவல் பணியில் நின்ற காவலர்கள் கூட அவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை!

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைப்பேசியில் படம்பிடித்துள்ளார். தற்போது இந்த காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி வருகிறது.

இது தொடர்பாக, கோலப்பூர் காவல்துறைச் கண்காணிப் பாளர் கூறும் போது ‘‘அந்த இருவரும் இது குறித்து காவல் துறையினரிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை’’ என்றும், ‘‘அவர்கள் எழுத்துமூலம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்றும், இந்த காட்சிப் பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றும் கூறியுள்ளார்.

எப்படி இருக்கிறது கோயிலும், பக்தியும் என்பதைப் பார்த்தீர்களா?

இரண்டு முழம் கல்லை அல்லது உலோகத்தாலான உருவத்தை சாமி என்றும், கடவுளென்றும் சொல்லி, காசு பறிக்கும் இந்தப் பார்ப்பனத்தனத்தை என்னவென்று சொல்ல!

‘ஆகமம் தெரிந்த அர்ச்சகர்கள்தான் கருவறைக்குள்  போக முடியும்’ என்று வசதியாக ஏற்பாடு செய்து கொண்டு, மக்களுக்கு இருக்கும் பக்தியை இலாவகமாகப் பயன்படுத்தி, பணம் சுரண்டும் இடமாகக் கோயில்களை ஆக்கியுள்ளனர் என்பதற்கு – இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

அர்ச்சகர்களா, அடியாட்களா என்ற கேள்வி எழவில்லையா? இப்படி அர்ச்சகப் பார்ப்பனர்கள் ரவுடியிசம் செய்வதை காவல்துறையினரும், சகப் பக்தர்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என்றால் இந்தக் கொடுமையை என்ன என்று சொல்வது!

இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடிய திருமதி நிர்மலா சீதாராமன் ‘‘பக்தர்கள் பணத்தை உண்டியலில் போட வேண்டாம் – அர்ச்சகர்களின் தட்டில் போடுங்கள்’’ என்று சொல்கிறார் என்றால் அதன் தன்மை என்ன?

எந்த இடத்தில் இருந்தாலும் பார்ப்பனர்கள் பார்ப் பனர்களே! எதை விட்டுக் கொடுத்தாலும் தங்களின் கோயில் இருப்பை மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’ என்பது  நிரந்தரமாகி விட்டால் இந்த அர்ச்சகப் பார்ப்பனர்களின் கொட்டம் அடக்கப்பட்டு விடும்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *