சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவு

சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வந்தது.

கடந்த 17ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நேர்காணல் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

கட்சியில் மாவட்டங்கள் வாரியாக 18ஆம் தேதி தென்மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டங்க ளுக்கும், 19ஆம் தேதி கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும், 20ஆம் தேதி ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட 41 மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.

நேற்று 5ஆவது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. காலையில் கடலூர் கிழக்கு, விழுப்பு ரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.

மாலையில் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெற்றது.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தவர்களை தொகுதி வாரியாக அழைத்து மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக வேட்பாளர் நேர்காணல் நேற்று (23.3.2026) நிறைவு பெற்றது. நேற்று காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கும், மாலை 4 மணி புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்துக்கான நேர்காணலும் நடைபெற்றது.

 

தி.மு.க. கூட்டணியில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு
5 தொகுதிகள் ஒதுக்கீடு – உடன்பாடு

சென்னை, மார்ச் 24- தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியான நேற்று (23.3.2026) அறிக்கையில், ‘நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுச் செயலாளர் பெ.சண்முகமும் 23.3.2026 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 (அய்ந்து) சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனவே இம்முறை அதனை விட கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என அக்கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.

ஆனால், திமுக தரப்பில் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

இறுதியில் இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்குவதற்கான உடன்பாடு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சண்முகமும் கையெழுத்திட்டனர்.

 

தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு புதிய இணையதளம்

வாரிய மறுசீரமைப்பின்
முக்கிய நடவடிக்கை!

சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் உற்பத்தி கழகத்திற்கென தனிப்பட்ட புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது: மின் பகிர்மான கழகம் (TANGEDCO) மின் உற்பத்தி கழகம் (TNPGCL) பசுமை எரிசக்தி கழகம் (TNGECL).

ஏற்கெனவே மின் பகிர்மான கழகம் மற்றும் பசுமை எரிசக்தி கழகம் ஆகியவற்றிற்குத் தனித்தனி இணையதளங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், தற்போது மின் உற்பத்தி கழகத்திற்காக www.tnpgcl.org என்ற புதிய இணையதளம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தனித்துவமான இணையதளம் மூலம் மின் உற்பத்தி தொடர்பான தரவுகள், திட்டங்கள் மற்றும் நிர்வாகத் தகவல்களைப் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *