மதுரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்

மதுரை, மார்ச் 24- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் ‘செல் போன்’ கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கடந்த 2020 ஜூன் 19ஆம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜூன் 22ஆம் தேதி பென்னிக்ஸும், 23ஆம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.

தந்தை – மகன் காவல் மரணம் குறித்து சிபிசிஅய்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஅய் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஅய் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. காவல் ஆய்வாளர் சிறீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவ லர்கள் சாமதுரை, முத்து ராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

100-க்கும் மேற்பட்ட சாட்சிகள்

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் சிறீதர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஅய் ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது. சம்பவம் நடந்த போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று (23.3.2026) தீர்ப் பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: தந்தை, மகன் இருவரையும் கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கொடூர தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இருவரையும் இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தாக்கியுள்ளனர். காவல்துறையினர் இரவு முழுவதும் இடைவெளி விட்டு தன்னை தாக்கிய தாகவும், 200 முறைக்கு மேல் தனது பின்பகுதியில் தாக்கியதாகவும் உறவினர் களிடம் பென்னிக்ஸ் தெரி வித்துள்ளார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிறீதர் உட்பட 9 பேர். தவிர, இருவர் மீதும் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.

காவல்துறையினர் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. சாட்சியங்கள் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் சிறீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்க ளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *