இது ஒரு பழைய பிரச்சினை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்சினையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்சினையும் இதுதான். வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை பிள்ளைப்பேறு எனும்போது மகப்பேறு விடுப்பு தொடங்கி எல்லா விஷயங்களும் கவனிக்கப்படு கின்றன. ஆனால், மாதாமாதம் வரும் மாதவிடாய்க்குப் போதுமான கவனம் தரப்படுவதில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? குறிப்பாக ஸ்டெம் துறையில் இருக்கும் பெண்கள் இதை எப்படிச் சமாளிக்கிறார்கள்?
இன்றும் இது, “த்ரீ டேஸ் ப்ராப்ளம்”, “லேடீஸ் விஷயம்” என்று அடிக்குரலில்தான் பேசப்படுகிறது. ‘பொம்பளைங்க சமாச்சாரம்’ என்பதிலிருந்து இது ஆங்கிலத்துக்கு மாறியிருக்கிறது, அவ்வளவுதான். ஜெர்மனியில் இதற்கு ’ஸ்ட்ராபெரி வாரம்’ என்று பெயராம், இத்தாலியர்கள் இதைச் ‘சிவப்பு பலூன்’ என்கிறார்கள், சீன மரபில் இதற்கு ‘வழக்கமான விடுமுறை’ என்று செல்லப்பெயர். ஜப்பானில் ‘பெண்களுக்கான நாள்’, ரஷ்யாவில் ‘சிவப்பு ராணுவம்’ என்றெல்லாம் பல செல்லப் பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மாதவிடாய்ப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள் ஒழுங்காக நடக்காததற்கு இந்த மூடி மறைத்தலும் ஒரு முக்கியக் காரணம். ஒருபக்கம் ஹாரிபாட்டர் நூலில் வரும் வால்டிமார்ட்டைப் போல ‘பெயர் சொல்லக் கூடாது’ என்று சொல்லி, அது ஏதோ பெரிய விஷயம் என்பதுபோல பயமுறுத்துவார்கள். இன்னொரு பக்கம் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்லி, ‘என்ன! நாங்கள்ளாம் பாக்காததா’ என்றும் அலட்சியப்படுத்துவார்கள். இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் நாப்கின் விளம்பரங்களில் நீல சாயத்துக்குப் பதிலாகச் சிவப்புச் சாயத்தைப் பார்க்கும் அளவுக்கு முன்னேறி யிருக்கிறோம்.
சினி என்கிற ஓர் இந்திய ஆராய்ச்சியாளர், “ஸ்டெம் துறை வளாகங்களில் மாதவிடாய் அறை ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று விழி விரியக் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஸ்டெம் துறையைச் சேர்ந்தவள் என்கிற முறையில் இது ஒரு மலையுச்சிக் கனவு என்பேன் நான். இதன் அடிவாரத்தையே இன்னும் நாம் தொடவில்லை. ஏன் தெரியுமா? பல ஸ்டெம் அமைப்புகளில் மாத விடாய்க்கால பெண்களுக்கான அடிப்படை வசதிகளே இருக்காது.
80களில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த நிகழ்வு இது. பெண்கள் அப்போதுதான் மருத்துவத்துறையில் அதிகமாகப் பங்களிக்கத் தொடங்கியிருந்த காலம். இரவுநேரப் பணி செய்யும் பெண் மருத்துவர்களுக்கான தனி ஓய்வறை வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இப்போது இருக்கும் பொது ஓய்வறையில் என்ன பிரச்சினை என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் பல போதாமைகளை அடுக்கிவிட்டு இறுதியில், “சில நேரங்களில் அறைக்குக் கதவு இருக்காது, கதவு இருந்தால் தாழ்ப்பாள் இருக்காது, தாழ்ப்பாள் இருந்தால் அதைப் போட முடியாது” என்று முடித்திருக்கிறார். அதே நிலைதான் ஸ்டெம் பெண்களுக்கும்.
பல ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மய்யங்களில் சுத்தமான கழிப்பறைகள் இருக்காது, இருந்தால் அவற்றில் எல்லா நேரமும் தண்ணீர் வராது. கைகழுவ வாஷ்பேசின் இருக்காது, வாஷ்பேசின் இருந்தால் சோப் இருக்காது. பயன்படுத்திய நாப்கினைத் தூரப் போடச் சரியான குப்பைத்தொட்டி இருக்காது. குப்பைத் தொட்டியில் நாப்கினை அப்படியே போட்டால் திட்டுவிழும், ஆனால், அதைச் சுற்றிப் போட டிஷ்யூ தாள் இருக்காது. ஆகவே ஒவ்வொரு முறையும் நாமே ஏதாவது ஒரு தாளை எடுத்துச் செல்ல வேண்டும். ஏதோ ஒரு சூழலில் உடையில் கறைபட்டுவிட்டால் உடை மாற்ற ஈரமில்லாத தரை கொண்ட தனி அறைகள் கிடையாது.
முன்னைப் போலல்லாமல் இப்போது பல இடங்களில் நாப்கின் இயந்திரம் வைத்திருக்கிறார்கள். சந்திரமுகி திரைப்படத்தில் வரும் மலைப்பாம்பும் இந்த இயந்திரமும் ஒன்றுதான். இது எதற்காக இருக்கிறது, இதன் வேலை என்ன என்று யாருக்குமே தெரியாது. பெரும்பாலான நேரத்தில் இந்த இயந்திரத்தின் ப்ளக்கைக் கூடச் செருகி அதைத் தயார்நிலையில் வைத்திருக்க மாட்டார்கள். விளக்கு எரிந்தபடி தயார்நிலையில் இயந்திரத்தை எப்போதாவது பார்த்துவிட்டால் உடனே பக்கத்தில் போய்க் கவனிப்பேன். ‘இயந்திரக்கோளாறு’ என்பதுபோல ஏதாவது ஒரு செய்தி அதில் வரும். அப்படி எதுவும் இல்லை என்றால் காசு போட்டுப் பார்ப்பேன். சில நேரம் அந்த இயந்திரம் காசு போட்டதும் அப்படியே அதைத் திருப்பித் தரும். சில நேரம் அந்த நாணயம் (?) கூட இல்லாமல் காசை விழுங்கிவிட்டு நாப்கின் அனுப்பாமல் என்னைப் பார்த்து முறைக்கும். இத்தனை ஆண்டுகளில் பல ஆராய்ச்சி மையங்களில் நான் பார்த்த எந்த நாப்கின் இயந்திரத்திலிருந்தும் எனக்கு ஒரு நாப்கின்கூடக் கிடைத்ததில்லை. இதுதான் நிலை எனும்போது சினியின் ’மாதவிடாய் அறை’ எனக்குப் பெரிய கனவாகத்தான் தெரிகிறது.
நான் படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் கல்லூரி வளாகத்தில் நாய்கள் அதிமாக இருப்பது ஒரு பிரச்சினையாக எழுந்தது. இதற்கு ஒவ்வொருவரும் பல காரணங்கள் சொன்னார்கள். அதில் ஒருவர் சொன்ன காரணம் முக்கியமானது – “லேடீஸ் ஹாஸ்டல் குப்பைத் தொட்டியில இருக்குற சானிட்டரி நாப்கின் ரத்த வாடைக்குத்தான் நாய்ங்க வருது” என்றார். அண்மையில் இந்தியா முழுக்கவே தெருநாய்ப் பிரச்சினை வந்தபோது ஒருவர் இதையே சமூக ஊடகப் பதிவாகவும் எழுதியிருந்தார். அப்போதுதான் இது ஒரு பரவலான கருத்து என்பதே எனக்குப் புரிந்தது. அந்தச் சமூக ஊடகப் பதிவின் இறுதி வரியையும் இங்கே சொல்லிவிடுகிறேன் – “நமது பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் துணி பயன்படுத்தியவரை எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அந்த ‘உன்னதமான’ பதிவு நிறைவடைந்தது! உண்மையில் பெண்கள் அதிகமாக இருக்கும் வளாகங்களில் இந்த நாப்கின் குப்பைகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்ய ஏதாவது வழி இருக்க வேண்டும். மாதவிடாய்க்காலப் பெண்களின் பயன்பாட்டுக்குச் சோப் கூட இல்லாத இடங்களில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?
ஆய்வக வளாகங்களுக்குள் இந்தப் பிரச்சினை என்றால், களப்பணி செய்யும் பெண் ஆராய்ச்சி யாளர்களின் பிரச்சினை…? (அடுத்த வாரம்)
படைப்பாளர்: நாராயணி சுப்ரமணியன்
(herstories.xyz இணையதளத்திலிருந்து…)
