தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர்களுடன் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் 22.03.2026 அன்று அண்ணா அறிவாலயம் முரசொலிமாறன் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குத் தி.மு.க. அமைப்புச் செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் சமூக வலைத் தளங்களின் தாக்கம் குறித்து ஆராயப்பட்டது. பழம்பெருமைப் பேசுபவர்களும், அறிவியலுக்கு எதிராக இருப்பவர்களுமே இந்தத் தொலைத்தொடர்பை அதிகம் பயன்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
தி.மு.க. ஆட்சியின் செயல் திட்டங்களை, சாதனைகளை ஆதாரத்துடன் எடுத்து வைப்பது ஒருபுறம் என்றாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் பொய்ப் பிரச்சாரங்களும்,
100 விழுக்காடு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உண்மையை எடுத்துரைப்பதை விட, பொய்ப் பிரச்சாரத்திற்குப் பதில் சொல்வதற்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. எனினும், எந்த ஒன்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமோ அதனை மட்டும் செய்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் நிறுவிட, உறக்கத்தையும் பொருட்படுத்தாது நாம் உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல முற்போக்காளர்களின் பதிவுகளை மக்களுக்கு அதிகம் கொண்டு சேர்க்காமலும், பாசிசத்திற்கு எதிராக எதை எழுதினாலும், தானாகவே தடையை ஏற்படுத்தும் நுட்பத்தைக் களைவதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருமித்தக் கருத்து களுக்கு ஏற்ப தொண்டர்களும் செயல்பட வேண்டும். தங்களின் சொந்த விருப்பு, வெறுப்பு களையோ, எண்ணங்களையோ பிரதிபலிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதேபோல தேர்தல் நேரத்தில் புதிது, புதிதாகக் கட்சிகள் வருவதும், அதற்குள் “பொய்” காற்றை நிரப்பி பலூனைப் பெரிதாய் காட்டுவதும் இயல்பே. அவற்றை எதிர்கொள்ள ‘பகுத்தறிவு’ எனும் குண்டூசி முனையே போதுமானது எனவும் எடுத்துரைக்கப்பட்டது.
தேவையற்ற விவாதங்களில் நேரத்தைச் செலவிடாமலும், எதிரிகளின் இலக்கிற்கு இரையாகிவிடாமலும் கவனமாகச் செயல்பட வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் நமக்கு முன் உள்ள பொறுப்பே தவிர, பிறருக்குப் பதில் அளிக்கிறோம் என நினைத்து, அவர்கள் குறித்தே பேசி, அவர்கள் பிரச்சாரத்திற்குப் பயனாய் இருந்து விடக்கூடாது எனவும் உணர்த்தப்பட்டது.
நிகழ்வில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், காங்கிரஸ் கட்சியின் சார்பில் நபில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சஜின், திராவிடர் கழகத்தின் சார்பில் வி.சி.வில்வம், உடுமலை வடிவேல், தே.மு.தி.க. கட்சியின் சார்பில் செந்தில், சி.பி.எம். சார்பில் சிந்தன், ‘தீக்கதிர்’ கண்ணன், சி.பி.அய். சார்பில் மூர்த்தி, மணிமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் சல்மான், ம.தி.மு.க. சார்பில் துரை மோகன்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அல்தாப் அகமது, முகமது கபீர், மக்கள் நீதி மய்யம் சார்பில் இலட்சுமணன், சவுரப், செந்தில்குமார், எஸ்.டி.பி.அய். சார்பில் கரீம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இப்ராஹிம் தாரிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் சமூக வலைதளப் பொறுப் பாளர்களைச் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
