‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘தன்னம்பிக்கை’, ‘கடவுள் மறுப்பு’ ஆகிய கொள்கைகளையும் நினைவூட்டி
தந்தை பெரியாரும் – திராவிட இயக்கமும் இல்லாவிட்டால் திருக்குறள் இந்த அளவுக்கு பரவி இருக்காது
குரோம்பேட்டை, மார்ச், 23 “வாழ்க்கையில் பெற முடியாத பேறு திருக்குறள்” என்றும், “காலத்தை வென்று நிற்கக் கூடியது; அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய நூல் திருக்குறள்” என்றும், “ஆரியத்திற்கு; ஜாதி தர்மத்திற்கு எதிரானது திருக்குறள்” என்றும், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் 29 ஆண்டுகளாக தொடர்ந்து திருக்குறளின் அருமை பெருமைகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகும், “திருக்குறள் பேரவை – குரோம்பேட்டை” அமைப்பின் நிகழ்ச்சி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் மார்ச் மாதக் கூட்டம் வழமை போல் திருமதி லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 22.03.2026 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முனைவர் எம்.அல்போன்ஸ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்த திருக்குறள் பேரவையின் தலைவர், டாக்டர் புலவர் பாண்டியன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி உரையாற்றினார். திருக்குறள் பேரவையின் நிறுவனத் தலைவர் தெ.பொ.இளங்கோவன், அமைப்பின் பொருளாளர் ரவி இளங்கோவன், உலகத் தமிழ் சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோஷம், காப்பியப் புலவர் வெற்றிவேலன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். தொல்காப்பிய புலவர் வெற்றியழகன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் வே.பாண்டு, மாநில கிராமப் பிரச்சார குழு கழக அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து, மாணவச் செல்வங்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் வகுப்பாசிரியர் திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் தலைப்புகளை சொல்லச் சொல்ல, மாணவர்கள் அந்தந்த அதிகாரத்தில் இருக்கும் 10 திருக்குறள்களை மளமளவென்று ஒப்புவித்தனர். அதைத் தொடர்ந்து, கழகத் தலைவர் ஆசிரியர், மாணவச் செல்வங்களுக்கு நினைவுப் பரிசு, புத்தகங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கி மகிழ்ந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து, ஆசிரியர், திருக்குறள் பேரவையின் நிறுவனத் தலைவர், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். இறுதியாக, கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் தமது உரையில், திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதை நினைவூட்டும் வண்ணம், ‘வாலிபம் என்பது வயதைப் பொருத்தது அல்ல; உணர்வைப் பொருத்தது! என்பதை சுட்டிக்காட்டி விட்டு, வயது முதிர்ந்தவர்களை பெரியார், ‘முன்னாள் வாலிபர்களே!’ என்று அழைக்கும் வழமையைக் குறிப்பிட்டு நகைச்சுவையைக் கூட்டினார். தொடர்ந்து, ஓர் அமைப்பை தொடங்குவது எளிது; நடத்துவது அவ்வளவு எளிதல்ல! ஆனால், 29 ஆண்டுகளாக திருக்குறள் பேரவை நடந்து வருவதை வெகுவாகப் பாராட்டினார். மேலும் அவர், பெரியார் தான்; திராவிடர் இயக்கம் தான்; திருக்குறளை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தது என்ற வரலாற்று உண்மையை சுட்டிக்காட்டி விட்டு, “நான் தந்தை பெரியாரின் ஒலிபெருக்கி’ என்று, தன்னைத்தானே அறிமுகம் செய்து, தத்துவ ரீதியாக திராவிட இயக்கத்தை பிரதிபலிக்கின்ற திருக்குறள்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தி உரையாற்றினார்.
அதாவது சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கிய போது, இந்த இயக்கத்துக்கு வேறொரு பெயர் சொல்ல வேண்டுமானால் :அறிவு விடுதலை இயக்கம்’ என்று சொல்லலாம் என்று பெரியார் சொன்னதை சுட்டிக்காட்டி, அடிமைப்பட்டு கிடக்கும் ‘அறிவு’ விடுதலை ஆனால் என்ன ஆகும் என்பதற்கு, “அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக்கடை” என்ற திருக்குறளைச் சொல்லி, ‘தன் நோய் போல்’ என்பதற்கு ஆங்கிலத்தில் Empathy என்ற சொல் இருப்பது போல் தமிழில் இல்லை என்ற குறையை, ‘ஒத்தது அறிவான்’ என்ற சொல்லின் மூலம், திருவள்ளுவர் போக்கி இருக்கிறார் என்றும் விவரித்து, ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்றும், ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்றும் இரண்டு திருக்குறள்களைச் சொல்லி, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையை பிரதிபலிக்கின்றது திருக்குறள் என்பதை நிறுவினார்.
தொடர்ந்து, பிறரின் நோயை தன்நோய் போல் கருதிச் செய்கிற அந்தத் தொண்டுக்கு, இலக்கணமாக எதைக் கொள்வது? என்றொரு கேள்வியைக் கேட்டு, தந்தை பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் ஒரே வாகனத்தில் பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு வந்த போது, அடிகளார், தந்தை பெரியாரிடம், ‘உங்களுக்குப் பிடித்த திருக்குறள் எது? என்று கேட்டபோது, ‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்’ என்ற குறளை பெரியார் பதிலாகச் சொன்ன, வரலாற்று சம்பவத்தை சுட்டிக்காட்டி, இதைத்தான் தொண்டு செய்வதற்கு இலக்கணமாக கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, திராவிடர் இயக்கத்தின் கொள்கையான சமதர்மத்தை குறிப்பிடுகின்ற, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாத் தலை’ என்ற குறளையும், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’
என்ற குறளையும் சுட்டிக்காட்டி, ‘மூடநம்பிக்கை ஒழிப்பு’, ‘தன்னம்பிக்கை’, ‘கடவுள் மறுப்பு’ ஆகிய கொள்கைகளையும் நினைவூட்டி, “தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இல்லாவிட்டால் திருக்குறள் இந்த அளவுக்கு பரவி இருக்காது என்பதை இன்றைய இளைய சமுதாயத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றும், ‘திருவள்ளுவரில் உள்ள ‘வள்ளுவர்’ என்பதை, ‘ஜாதி’ யாகத் திரித்து விட்டதை வேதனையோடு சுட்டிக்காட்டி, புரட்சி கவிஞர் அவர்கள் இலக்கியத்தில் இருந்து அந்த ‘வள்ளுவர்’ என்ற சொல்லுக்கு ‘ஆறு துறைகளின் தலைவன்’ என்ற அரிய கருத்தை; புதிய கருத்தை தரவுகளோடு எடுத்தாண்டு இருப்பதை சுட்டிக்காட்டியும், மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் எழுதியிருக்கும், ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்தோர் உள்ளுவரோ ஒரு ஜாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்ற பாடலையும் எடுத்தாண்டு, “திருக்குறள் நமது வாழ்க்கையில் பெற முடியாத பேறு” என்றும், “காலத்தை வென்று நிற்கக் கூடியது; அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடியது” என்றும், ‘ஆரியத்தை; ஜாதி தர்மத்தை எதிர்க்கக் கூடியது’ என்றும் பலபடியாக பாராட்டி, திருக்குறள் பேரவையின் நிர்வாகிகளையும், உலகமெல்லாம் திருக்குறள் சிலைகளை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்ற உலக தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களையும் வெகுவாகப் பாராட்டி, தமது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் பெரியார் பெருந்தொண்டர்கள் தங்கமணி – தனலட்சுமி, எழுத்தாளர் வி.சி.வில்வம், சோழிங்கநல்லூர் மாவட்டக் காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், கலைமணி, தாம்பரம் தோழர்கள் உத்ரா, குணசேகரன், அரும்பாக்கம் தாமோதரன், ஒளிப்படக் கலைஞர் தோழர் அருணா, கூடுவாஞ்சேரி ராஜு, உடுமலை வடிவேல், சுரேஷ் மற்றும் திருக்குறள் பேரவையின் வாசகப் பெருமக்கள், பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
