‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (3)

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பனகால்அரசரும் அழகிரிசாமியும்

தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் பனகால் அரசர் இராமராயநிங்கார். இவரது பெயரால்தான் சென்னையில் பனகால் பூங்கா உள்ளது. பெரும் பணக்காரர் குடும்பத்தில் பிறந்தவர். டில்லியில் உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 19.11.1923 முதல் 03.11.1926 வரை சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக (First Minister) இருந்தவர்.

சமத்துவமாக உட்கார்ந்துபேசும்
பனகால் அரசர் – அழகிரிசாமி

காலஞ் சென்ற பனகால் அரசரிடம் தோழர் அழகிரிசாமி அடிக்கடி பேசுவதுண்டு. தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் கலந்து பேசுவார். அக்காலக் காங்கிரஸ் நிகழ்ச்சிகளைச் சுயமரியாதைக் கண்களோடு அழகிரிசாமி பனகாலரசரிடம் பேசுவார். பனகால் மகிழ்வார். அக்காலத்தில் பனகால் அரசரோடு சமத்துவமாக உட்கார்ந்து பேசுபவர் பெரியார் ஒருவர்தான். அடுத்தபடியாக அழகிரிசாமிதான் அவ்விதம் பேசுபவர். இது அக்காலத்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். காரணம் அழகிரிசாமி ஒரு சாதாரண ஆள் – பணம், பதவி, படோடோபம் எதுவும் அவரிடம் இல்லாமல் இருக்கும்போதே, அவர் பனகாலிடம் சரி சமமாக உட்கார்ந்து பேசுகிறாரே என்பதுதான். இடிந்து போனதாக இருந்த ஜஸ்டிஸ் காரியாலயத்தின் மாடி மீது பனகால் இருக்கிறார் என்று தெரிந்தால், அவரைப் பார்க்கப் போகிறவர்கள் படிக்கட்டில் சத்தம் உண்டாகாதபடி மெதுவாக நடந்து போவார்கள். இதனால், கட்சியில் ஒரு பயங்கரமான தலைவர் இருந்தாரா என்று எண்ணிவிடாதீர்கள். அவ்வளவு மதிப்புக்குரிய தலைவர் இருந்தார் என்று பொருள். அப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரைப் பின்பற்றி அவருடைய திறமையால் பல நல்ல காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று எண்ணியவர்கள் இன்று போல் அன்று அதிகமாக இல்லை என்பதையே இத்தகைய நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுவனவாகும்.

திருச்சி ‘சிவாஜி’ காரியாலயத்தில், மாகாண சுயமரி யாதை மாநாட்டைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அஞ்சா நெஞ்சன் அழகிரி சாமி. ஒரு நாள் (15.12.1928) மாலை வரவேற்புக் கழகக் கூட்டம் நடந்தது. அப்பொழுதுதான் நமது அரும்பெரும் தலைவர் பனகாலசர் இறந்த செய்தி கிடைத்தது. மாநாட்டுக் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு அழகிரிசாமி சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார்.

‘தோழர்’ பொப்பிலி (அரசர்)

ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுவினர் கூட்டம் ஒன்று, கட்சியின் தலைவர் பொப்பிலி ராஜா தலைமையில், மதுரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அழகிரிசாமி, பொப்பிலி ராஜாவைக் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுதெல்லாம், ‘தோழர் பொப்பிலி’ என்றே குறிப்பிட்டார். இதனால் பொப்பிலியின் முகத்தில் கொஞ்சம் மாறுதல் தோன்ற ஆரம்பித்தது. இதனைக் கண்ட காலம் சென்ற செ.த.நாயகம் அழகிரியின் போக்கை ஜாடை மாடையாக மாற்ற முயன்றார். இருந்தாலும் அழகிரிசாமி ‘தோழர் பொப்பிலி’ என்று குறிப்பிடுவதை மாற்றிக் கொள்ளவில்லை. அழகிரி சாமியின் கோபத்தைத் தான், தன்னுடைய முயற்சிக்கு செ.த. நாயகம் வெகுமதியாகப் பெற்றார். அழகிரிசாமி மனிதன் என்ற ஒன்றுக்குத்தான் மதிப்பளிப்பவரேயன்றி, பணத்துக்கோ, ஒருவர்க்குள்ள பதவிக்கோ, செல்வாக்கிற்கோ மதிப்பளிக்கக் கூடியவரல்ல என்பதற்கு, இந்தச் சம்பவம் ஒன்றே போதுமானதாகும்.

விருதுநகரில் வீரமிகு நிகழ்ச்சி

‘தோழர் அழகிரிசாமி பற்றிய பல குறிப்புகள் இன்னும் உள்ளன. ‘தொடர்ந்து எழுதுவேன்’ என்று ‘திராவிடநாடு’ இதழில் எஸ்.வி. லிங்கம் 17.04.1949-இல் எழுதிய கட்டுரையிலே சொல்லியுள்ள செய்தி இதோ…

‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கி அய்ந்தாறு ஆண்டுகள் வரையில், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையில் கூட்டங்கள் நடைபெறும். அவை அத்தனையிலும் தோழர் அழகிரிசாமியின் பெயர் இருக்கும். முதலிரண்டு ஆண்டுகளில், தஞ்சாவூர், செட்டிநாடு, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலேயே, நமது பிரச்சாரம் மிகப் பலமாக நடைபெற்றது. அக்காலம், எதிர்க்கட்சித் தலைவர்கள் காலஞ் சென்ற எஸ். சீனுவாசய்யங்கார் அவர்கள் காலமாகும். காலஞ் சென்ற கிருஷ்ணசாமிப் பாவலர் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத் தலைவர், ‘தேசபந்து’ என்று ஒரு பத்திரிகை. அது அப் படியே பெரியாரைக் கண்டிப்பதற்காகவே ஏற்படுத் தப்பட்டது. விருதுநகரில் நமது பிரச்சாரம் அடிக்கடி நடைபெற்றதாலும், நாடார் சமுகத்தில் பிரபல தலைவர்கள் பலர் நம்மைப் பெரிதும் ஆதரித்ததாலும், விருதுநகரில் நமது இயக்கத்தின் வலுவை அடக்கப் பாவலர் எண்ணினார்.

பெரியார் கொடும்பாவி எரிப்பு

பெரியார் இராமசாமி அவர்களைப் போல் கொடும்பாவி கட்டி, நகரில் அதை இழுத்துப் பின்னர் தீயிலிட்டார்கள். இச்செய்தி காங்கிரஸ் ஏடுகளில் பெரியதாக வெளிவந்தது.

உடனே விருதுநகருக்குத் தோழர் அழகிரிசாமி வந்தார். தஞ்சாவூரிலேயே விருதுநகர்க் கூட்டத்துக்கு நோட்டீஸ் அடித்துக் கொண்டு புறப்பட்டோம். விருதுநகரில் தைரியமுள்ள இளைஞர்கள் வாயிலாக அப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அன்று மாலை விருதுநகரில் ஒரு பெரிய கூட்டம் நடைபெற்றது. தோழர் அழகிரிசாமி வீரவுரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டமே பின்பு விருதுநகருக்கும் நமக்கும் பிரிக்க முடியாத பிணைப்பை உண்டாக்கி விட்டது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *