மனிதனின் உடலில் குருதிச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டியதைவிடக் குறைவாக இருந்தால், குருதிச் சோகை ஏற்படுகிறது. பொதுவாக உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்பவை இந்தச் சிவப்பணுக்கள்தான். இவற்றில் இருக்கும் ஹுமோகுளோபின் இந்தப் பணியைச் செய்கின்றன.
ஆகவே, குருதியில் சிவப்பணுக்கள் குறைந்தால் ஹுமோகுளோபின் அளவும் குறைந்து உடலில் பல உறுப்புகள் பாதிப்படையும் நிலை ஏற்படும். ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகளுக்கு 11 – 14 gm/dl வரை ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். சராசரி அளவைவிடக் குறைவாக இருப்பதையே ரத்தசோகை என்கிறோம். அது 7 gm/dlக்கும் குறைவாக இருந்தால் தீவிர ரத்தசோகை.
ரத்த சோகை வகைகள்:
இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகை (Iron deficiency anaemia): மிகவும்பொதுவான வகை. உடலுக் குத் தேவையான இரும்புச் சத்து இல்லாததால் ஹீமோகுளோபின் உற்பத்தி குறையும். குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிக அவசியம்.
இது ரத்த உருவாக்கம், மூளை, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முக்கிய நோய் இரும்புச்சத்து குறைபாடு குருதிச் சோகை ஆகும். குறிப்பாக, பெண்களுக்கு மாத விடாயின்போது அதிக குருதிப்போக்கு ஏற்படுவதும் முக்கியக் காரணம்.
விட்டமின் குறைபாடு குருதிச் சோகை (Vitamin deficiency anaemia): விட்டமின் B12 அல்லது ஃபோலேட் குறை பாட்டால் ஏற்படுகிறது. இது அசாதாரணமான பெரிய குருதிச் சிவப்பணுக்களை உருவாக்குகிறது. இதை ‘மெகலோபிளாஸ்டிக் அனிமியா’ என்கிறோம்.
அரிவாள் செல் குருதிச் சோகை (Sickle cell anaemia): மரபணு குறைபாட்டால் ஏற்படும் ஒருவகை ரத்த சோகை. ரத்தச் சிவப்பணுக்கள் பிறை வடிவத்தில் மாறி, குருதி நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன.
தலசீமியா (Thalassemia): மரபணுக்களில் ஏற்படும் மற்றொரு குறைபாடு. ஹீமோகுளோபின் உற்பத்தி பாதிக்கப்பட்டு குருதிச் சிவப்பணுக்கள் அழிந்து விடும்.
