
மருத்துவர் எஸ்.ஆதம்
மூத்த பிசியோதெரபி மருத்துவர்,
சென்னை
மனித உடலின் எடையைத் தாங்கி, இயக்கத்தின் அடித்தளமாக செயல்படுவது நமது பாதங்கள்தான்.
மனித உடலில் எல்லா திசுக்களும் முக்கியம். அதில் பாதம் முக்கியம். பாதத்தில் பலம் இல்லை என்றால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். நிலைதடுமாறி கீழே விழும் வாய்ப்பு ஏற்பட்டு, எலும்பு முறிவும் ஏற்படும்.
இதைத் தவிர்க்க உட்கார்ந்திருந்த இடத்தில இருந்தே ஒரு நாளைக்கு 2 முறை எழுந்து பயிற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால் கால்கள் பலப்படும்.
காலின் கண்ட தசை முக்கியமானது. அதை இன்னொரு இருதயம் என்றும் அழைக்கலாம். மனித உடலில் மேலே இருந்து கீழே போகும் ரத்தத்தை மேல்நோக்கி அனுப்புகின்ற வேலையைச் செய்கின்றது.
மனிதனின் பாதங்களில் மட்டும் 26 எலும்புகள், 33 மூட்டுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தசை நாளங்கள் மற்றும் தசை நார்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உடலின் சமநிலை மற்றும் நிலைத் தன்மையில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மனித உடலுக்கு பாதமே அடித்தளம். அது சுருங்கி விரியும் தன்மை உடையது. அது சரி இல்லை என்றால் மனித உயிருக்கே ஆபத்தாய் முடியும்.
நமது பாதங்களின் நிலை உடல்நிலைப் பிரச்சினைகளின் அறிகுறிகளை குறிக்கும்.
நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை கால் பிரச்சினைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பாதம் உடல் எடையை முழுவதும் தாங்குவதால் பாத வெடிப்பு மற்றும் தோல் நோய்களைத் தவிர்க்க தினசரி பாதங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
காலணிகளை எந்த நேரத்தில்
தேர்ந்தெடுக்க வேண்டும்
தேர்ந்தெடுக்க வேண்டும்
கால்களுக்கு சரியான அளவில் காலணிகள் அணிவது முக்கியம். அவை மென்மையானவையாக இருப்பது அவசியம். காலணிகளை மதியம் 12 மணி முதல் 3 மணிக்குள் வாங்க வேண்டும். காலையில் தூங்கி எழுந்தவுடன் பாதத்தின் அளவு சுருங்கி இருக்கும். மாலை நேரத்தில் கால்கள் வீக்கமாக இருக்கும். அந்த நேரத்தில் வாங்கினால் நேரம் செல்லச் செல்ல பாதத்தின் வீக்கம் குறைந்துவிடும்.
இதனால்தான் ‘செருப்புக்கடி’ போன்றவை ஏற்படுகிறது. பாதத்தை அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டும். முகத்தை கண்ணாடியில் பார்ப்பதைப் போன்று பாதத்தைப் பார்க்க வேண்டும்.
தொற்று நோய்களைத் தடுக்க கால்விரல் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நகங்களை ஒட்ட வெட்டாமல் சரியான அளவில் வெட்டுவது அவசியம்.
தினமும் கால்களை மென்மையான சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையயே ஈரத்தை நன்றாக ஒற்றி எடுக்க வேண்டும்.
கால்களுக்குப் போதுமான அளவு பயிற்சிகள் தர வேண்டும். முன்னங் கால்களையும், பின்னங் கால்களையும் தூக்குவது, விரல்களை மடக்கி நீட்டுவதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இவை கால் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியமுள்ளவர்கள் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவதில் தவறு இல்லை. சர்க்கரை நோயாளிகள் அவ்வாறு தடவக் கூடாது. ஏனென்றால் எறும்புகள் கடித்து புண்ணாகிவிடும்.
பாதத்தில் உணர்ச்சி இருப்பது முக்கியம். சிமெண்ட் தரையில் நடப்பதாலும், மணலில் நடப்பதற்கும் மலை மீது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதற்கேற்றாற்போல் பாதம் விறைத்து நெளிந்து உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாத நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டால், பாதத்தில் அடிபட்டாலும் தெரியாது. இதற்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான தரையில் வெறும் கால்களால் நடப்பது நல்லது.
நடைப் பயிற்சியின் நன்மைகள்
தசைகளை வலுவாக்குகிறது.
மூட்டுகளை பலப்படுத்துகிறது.
எலும்பு அடர்த்தி அதிகமாகிறது.
செரிமான செயல்பாட்டை அதிகரிக்கிறது.
மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.
தரமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது (Metabolism)/
பதற்றம் குறையும்.
வலியைத் தவிர்க்கிறது.
குருதிச் சர்க்கரை அளவைச் சீரமைக்கிறது.
தேவையற்ற கொழுப்பு குறையும்.
உடல் எடை குறையும்.
குருதிக் கொதிப்பு சீரமையும்.
நுரையீரல் செயல்பாட்டை சீரமைக்கிறது.
மன அழுத்தம் குறையும் (மனநலம்)
நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
மாரடைப்பு நோய் வருவதைத் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.
நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறையும்.
தோலுக்கு நன்மை.
அதிக மருந்துக்கு விடை கொடுக்கிறது.
“கால்களுக்கு வேர்கள் இல்லை. அதனால் நடப்போம்”
அன்றாடம் 10 முதல் 30 நிமிடம் வரை காலில் ஷு போட்டு நடப்பது நல்லது.
நடக்கும்போது பேசிக்கொண்டோ, பாட்டு கேட்டுக் கொண்டோ, நடக்கக் கூடாது. நாயுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பூங்கா, நடைப் பாதைகளில் பாதுகாப்பான இடத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டால் சுகப்பிரசவம் நடைபெறும்.
லோஷன்
குளித்த பிறகு உங்கள் பாதங்களில் அடர்த்தியான ஈரப்பதமூட்டும் லோஷனைத் தடவலாம். கால் விரல்களுக்கு இடையில் லோஷன் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.இது நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
பாதங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.
நீரிழிவு மருத்துவப் பயனாளிகள் பாத ஆரோக்கியத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
சிறிய காயங்கள் கூட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பாத வலி, வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
பிசியோதெரபி (இயன்முறை மருத்துவம்) என்பது மருந்து மாத்திரைகள் இன்றி உடற்பயிற்சிகள், மசாஜ் மற்றும் இயற்பியல் காரணிகள் (வெப்பம், குளிர் மின்சாரம்) மூலம் வலியைப் போக்கி உடல் இயக்கத்தை மேம்படுத்தும் ஒரு சிறப்பு மருத்துவ முறையாகும். இது காயங்கள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலை, நரம்பியல் மற்றும் மூட்டுப் பிரச்சினைகளை சரிசெய்து வாழ்க்கைத் தரத்தை மீட்டெடுக்க உதவுகிறது.
மருத்துவப் பயனாளிகள் தாங்களாகவே தங்கள் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள கற்றுக்கொடுக்கப்படுகிறது.
பக்கவாதம், மூட்டுவலி, முதுகுவலி, கழுத்து வலி, நரம்பு பாதிப்புகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வருபவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வழங்கப்படுகிறது.
