சென்னை, மார்ச் 22- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை மார்ச் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் படிப் பதால் மாணவ- மாணவிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை குறித்து பெற்றோரிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்களும் அரசுப் பள்ளிகள் அருகேயும், முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 20.3.2026 அன்று நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இதுவரை 44,396 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக தொடக்கக் கல்வித் துறை 20.3.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 20.3.2026 அன்று காலை 11 மணி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வி ஆண்டுக்கு ஒன்றாம் வகுப்பில் 41,439 மாணவர்களும், 2 முதல் 8ஆம் வகுப்புகள் வரை 660 பேரும் மழலையர் வகுப்புகளில் 2,297 பேர் என மொத்தம் 44,396 பேர் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
ஏப்.1 முதல் 16 வரை
முழு ஆண்டுத் தேர்வு
முழு ஆண்டுத் தேர்வு
சென்னை, மார்ச் 22–- தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்.1 முதல் 16ஆம் தேதிவரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதிப் பருவத் தேர்வுகள் ஏப்.10 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான தேர்வுக்கால அட்டவணை நேற்று முன்தினம் (20.3.2026) வெளியிடப்பட்டது.
அதன்படி, 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் 16ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. 4, 5ஆம் வகுப்புகளுக்கு ஏப்.6இல் தொடங்கி 16ஆம் தேதி வரையும், 1, 2, 3ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வுகள் ஏப்.8 முதல் 16ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.
இந்த கால அட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களோடு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்துவித பள்ளிகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்.17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். எனினும், பள்ளி இறுதி வேலை நாள் வரை ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரீமியம் பெட்ரோல் விலை
லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 22- பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான போர் 22ஆவது நாளாக நீடித்து வருகிறது. ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதன் காரணமாக பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தற்போதும் ஏற்ற இறக்கங்களுடன் கச்சா எண்ணெய் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில், விலை உயர்வுக்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. எனினும், சாதாரண பெட்ரோலின் விலையில் மாற்றம் எதையும் அது செய்யவில்லை.
இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அவற்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?
வாகனத்தின் என்ஜினின் செயல் திறன் சிறப்பாக இருப்பதற்காகவும், மேம்பட்ட மைலேஜுக்காகவும் பயன்படுத்தப்படுவது பிரீமியம் பெட்ரோல் எனப்படுகிறது.
குறிப்பாக, சொகுசு வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் வாகனங்கள், உயர் செயல்திறன் கொண்ட கார்கள் ஆகியவற்றில் இத்தகைய எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆக்டேன் எரிபொருள் அல்லது பவர் பெட்ரோல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் இந்த விலை உயர்வு, வசதி படைத்த வாடிக்கையாளர்களையே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை. கூடுதல் சரக்குகள் ஏற்கெனவே வந்து கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் இந்தியாவின் விநியோக நிலை மேலும் வலுப்படும். வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை நம்புங்கள்’’ என தெரிவித்திருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழிவகுக்கும் முயற்சிகளில் முன்னணி அய்ரோப்பிய நாடுகளும் ஐப்பானும் இணைய முன்வந்ததால், பேரலுக்கு 110 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை 105 டாலராக குறைந்தது கவனிக்கத்தக்கது.
