எடப்பாடி, மார்ச் 22- எடப்பாடி, சின்னமணலி பெரியார் படிப்பகத்தில் 16.3.2026 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாள் மாணவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட ப.க. தலைவர் கோவி.அன்புமதி தலைமையேற்க, நகர கழகச் செயலாளர் சி.கமல்ஞான அருள் வரவேற்க, மெ.காமராஜ் முன்னிலை வகிக்க, மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில், “தந்தை பெரியார் அவர்களை, 95 ஆண்டு காலம் வாழ வைத்த தியாகத் தாய் அன்னை மணியம்மையார். தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகு, 1974ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நெஞ்சுரத்துடனும், பேராளுமையு டனும் கழகத்தை வழி நடத்திய பெருமைக்குரியவர் அன்னை மணியம்மையார்.
மணியம்மை கல்வி அறப் பணிக் கழகம் என்று ஒரு கல்வி அறக்கட்டளையை நிறுவி, சமத்துவக் கல்விப் பணி யைச் செய்தவர் அன்னை மணியம் மையார்.
அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு, வடநாட்டில் “இராமலீலா” நடத்தக் கூடாதென்றும், “அது தென்னாட்டவராகிய எங்களை இழிவுபடுத்துவதாகவும் நாங்கள் கருதுகின்றோம். எனவே, இராமலீலாவை கொண்டாடக்கூடாது. உடனே நிறுத்துங்கள்” என்று எச்சரிக்கை விடுத்தவர் அன்னை மணியம்மையார்.
வழக்கம் போல், இராமலீலா கொண்டாடப்பட்டது. அதில் பிரதமரும், குடியரசுத் தலைவரும் கலந்து கொண்டார்கள்.
வீறுகொண்டெழுந்த சிங்கமாக டிசம்பர் 25ஆம் தேதி “இராவண லீலா” அன்னை மணியம்மையார் தலைமையில் பல்லாயிரம் தொண்டர்கள் புடைசூழ நடைபெற்றது. புராணக் கதாநாயகன் இராமன் சிலை உருவம், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
இந்தியாவே, தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கின்ற ஒரு நிலையை உருவாக்கிக் காட்டிய வீரமங்கை அன்னை மணியம்மையார் ஆவார்கள். தன் வாழ்க்கை முழுவதையும் போராட்டக் களமாக அமைத்துக் கொண்ட அன்னை மணியம்மையார் 1978ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 16ஆம் நாள் காலமானார்.
இன்றைக்கு அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளில், அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் துணிவோடு செயல்பட்டு வெற்றி வாகை சூட வேண்டுமாய் – உறுதியேற்க வேண்டுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்” என உரையாற்றினார்.
மேலும், மாணவர்களிடம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகிய தலைவர் களைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களுடைய சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டன. மாணவர் ர.தாரணி நன்றி கூற இனிதே கூட்டம் நிறைவேறியது.
