
| ப |
ட்டுக்கோட்டை ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரிசாமியின் சுயமரியாதை இயக்கப் பணி ஒப்புயர்வற்ற பெரும்பணி! சுயமரியாதை மாளிகையை அமைக்கக் கற்பிளந்து – மலை பிளந்து, கடின சித்தத்துடன் போராடி, ஆர்ப்பரித்துக் கிளம்பிய ‘ஆரிய வைதீக’ முரட்டுக்காளைகளின் திமில்களைப் பிடித்து, அந்நாளைய ஜல்லிக்கட்டுச் சாதனையாக அந்த ‘முரட்டுக் காளைகளை’ அடக்கிய மாவீரர்களின் முதல் வரிசையில் முதன்மையானவர்.
அத்தகைய பேரிகைக் கொட்டி முழங்கிய அந்த சிங்கத்தின் கர்ஜனை – எப்படி அடங்கிய குரலாக மாறிப் போனது என்பதை ஈரோடு மாநாட்டில் கண்டோம். தனது இறுதி மரியாதையை, பிரியாவிடையைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் 50 ஆண்டு தொண்டுக்கு தாமே முற்றுப்புள்ளியை வைத்துப் பிரகடனப்படுத்தும் வகையிலும் ஈரோடு தனி மாநாட்டில் அவர் ஆற்றிய சுமார் 10 –15 நிமிடப் பேச்சு கருஞ்சட்டை மாவீரர்களின் குடும்பங்களின் கண்ணீர் வற்றும் வரை அழுது அழுது பிரியா விடை கொடுத்த ஓர் இறுதிப் பேருரை (A Swam’song) ஆகும்.
உண்மையும், உணர்ச்சியும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு உலகத்திற்கு இறுதி சொன்ன ஒருகொள்கை உறுதியாளரின் மரண வாக்குமூலம்!
அதற்குமுன் அவரின் போர் முழக்கப் பீரங்கிப் பேச்சைக் கேட்டு, பெருத்த ஆரவாரம் செய்த காட்சியைக் கண்டிருந்த தலைவர்கள், தொண்டர்கள், தோழர்கள் எல்லோரையும் அந்த ஈரோடு மாநாட்டுப் பேச்சு அங்கேயே கலங்கச் செய்து கண்ணீர் கடலில் தள்ளியது.
அவரது மிக நெருங்கிய தோழர்களில் ஒருவர், திருச்சி ‘நகரதூதன்’ வார ஏட்டின் ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி. முதல் பக்கத்தில் அவர் எழுத்துகளுக்கு இட்ட தலைப்பு ‘பேனா நர்த்தனம்’.
உண்மையிலேயே அதுபோன்ற எழுத்து அவருக்கு மட்டும் உரியது. எதிரிகளையும், மாற்றுக் கருத்து கொள்கையாளர்களையும் கவர்ந்து ஈர்க்கும் காந்த எழுத்துகள் அவை.
இல்லையாயின், ‘கல்கி’ ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி, அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடக விமர்சனக் கட்டுரையில், திருமலைசாமி அவர்களது எழுத்துக் குறித்துக் குறிப்பிடும்போது: ‘‘தாக்கப்பட்டாலும் அவரது எழுத்தில் சிக்கி தாக்கப்படுவது – மோதிரக் கையால் குட்டுப்படுவதுபோல்’’ என்று எழுதுவாரா?
அப்படிப்பட்ட மணவை திருமலைசாமி, அஞ்சா நெஞ்சன் தளபதி அழகிரிசாமி அவர்கள் மறைந்தபோது எழுதிய ஒரு நீண்ட இரங்கல் கட்டுரையில்–(அத்தனையும் கருத்து முத்து–கம்பீரப் பொலிவுடன்கூடிய வரைவோவியம்!)
‘‘ஈரோட்டு மாநாட்டின் இறுதி உரையைக் குறிப்பிடும் பகுதி இதோ:
‘‘அன்பனே அழகிரி
அட அன்பனே, அழகிரி இனி உனை என்று காண்பேனடா? உன் பேச்சிலே காணும் புலியின் பாய்ச்சலையும் உன் பார்வையிலே வீசும் அரிமாவின் ஒளியினையும் உன் சிரிப்பிலே தவழும் கன்னியின் காதலையும் இனி வேறெங்கே காண முடியும்? உடல் மெலிந்து, நரம்புகள் தளர்ந்து, ரத்தப்பசை வறண்டு எலும்புந் தோலுமாய் ஈரோடு மாநாட்டிலே எழுந்து, தலைவர் சொல்லுகிறார். ‘அடுத்த மாநாடு வரை அவர் இருப்பது சந்தேகம்’ என்று! ஆனால் நானோ?
நான் சொல்கிறேன். என் ஜீவியத்திலே இதுவே இறுதி மாநாடாக இருக்குமென்று கடைசியாக உங்கள் எல்லோர் முகத்தையும் ஒருங்கே காணவும், எனது தலைவனுக்குக் கடைசி வணக்கம் செலுத்தவுமே இந்த நலிந்த உடலோடு ஊர்ந்து வந்தேன். விடை பெற்றுக் கொள்கிறேன். இதோ இறுதி வணக்கம்! என்று மூச்சுத் திணற நாக்கு வறள, ஈனசுரத்தில் வெளியிட்டாயாமே! கன்னி வாக்கோ, காளை வாக்கோ என்பார்களே, அதுவாகவே உன் வாக்குப் பலித்து விட்டதடா. இனி யாரையடா என் அன்பிற்குரியவனாய், உரிமையோடு ‘நெடுங்காடி’, என்றழைப்பேன்? தங்குதடையின்றி, அக்கம் பக்கம் நோக்காமல் உன்னை நாய் என்றும், கழுதை என்றும் செல்லமாகச் சொல்வேனே! மேடை வாயாடிப்பயலே என்றழைப்பேனே! அந்த பாத்யதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டாயே சென்ற திங்களோடு! நானொரு பாவி! கடைசி முகங்கூடக் காணாத மாபாவி!
தேற்றுவார் யார்?
‘மலைகலங்கினும் மனங்கலங்காத மன்னனின் மனைவி நான்’ எனப்பூரித்து வாழ்ந்த உன் துணைவி, ‘வீர விளக்கின் பிள்ளைகள்’ நாங்களென்று தலை நிமிர்ந்து பேசிய உனது சேய்கள் விலா எலும்புகள் நெக்குவிட குமுறிக் குமுறி அழுங்குரலைக் கேட்டனையா? அவர்களின் கண்ணீரைத் துடைப்பார் யார்? அழாதீர்கள், அருகிலே நாங்கள் இருக்கின்றோம் என்று தேற்றுவார் எவர்? அனாதை போல ஏங்கித் துடிக்கும் அவர்களுக்குத் திராவிட சமுதாயம் நிழலளிக்கப் போகிறது.
‘சமூக சேவையே எனது ஜீவிய லட்சியம் அதுவே எனது ஜீவனோபாயம், என்னை உணர்ந்து என் பிள்ளைகளைச் சமுதாயம் ஏந்திக் கொண்டால் போகட்டும், இல்லையேல் அவர்களும் மண்ணோடு மண்ணாய் கலக்கட்டும்’ என்று உடலிலே எஞ்சி நின்ற சொட்டு ரத்தத்திலும் சூடேற்றி, ஆத்திரம் கொப்பளிக்க உனது இயல்பான காம்பீர்யப் பார்வையுடன், உயிர்த்தோழன் டேவிட் கேள்வி ஒன்றிற்குப் பினாத்திப் பதில் அளித்தாயாமே? ‘நீ பிறந்த பூமி நன்றியற்ற தமிழ் நாடப்பா! நீ ஜனித்த சமூகமோ, விசுவாசமில்லாத கூட்டமப்பா! மலையத்தனை நன்மைகளே செய்தாலும் தினையளவு தவறு நேர்ந்ததற்காக நிந்தித்து ஒதுக்கும் மந்தையப்பா!
செத்தபின் சித்திர வேலைப் பாடுடன் சமாதி கட்டுவார்கள்; நினைவு நாள் விழா கொண்டாடுவார்கள். இருக்கும் போது எள்ளி நகையாடும் ஜாதியப்பா’ – இது மறந்தனையா?
எப்படி அப்பா மறப்பது?
மறையாதிருந்தால், சுதந்திர திராவிடத்தின் ராணுவ மந்திரியாய் நீ துலங்கியிருப்பாய்! ஆனால் நாடு பிரிவு முன்பே நீ பிரிந்தனையே! எழுச்சியின் ஏந்தலே. வீரச் செம்மலே, பகுத்தறிவின் சுடரே, எப்படி அப்பா மறப்பது உன்னை? மார்பைத் துளைக்கிறதே உன் மரணச் செய்தி! நெஞ்சு குழைகிறதே உனை நினைக்கும் போதே!’’
என்று மணவை திருமலைசாமி தனது நினைவுகளை நெஞ்சுருக விவரித்துள்ளார்.
இன்னும் எவ்வளவோ எழுதலாம்.
திராவிட இயக்கம் பற்றியும், தமிழர் தம் மறுமலர்ச்சி பற்றியும் வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றை, அலைந்து திரிந்து பல தகவல்களை, தரவுகளைத் திரட்டி நூல் எழுதும் பாராட்டிற்குரிய முதுபெரும் எழுத்தாளர் செ. திவான் எம்.ஏ. எம்.பில்., அவர்களின் ‘அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி’ என்ற ஒரு நூல் 2008இல் (அவரது 74ஆவது நூலாக எழுதியது) அழகிரி அவர்களைப்பற்றி பல நூல்களைப் படித்து எடுத்தப் பிழிவு போன்ற அருமையான நூல்!
அதில் எத்தனையோ சுவாரஸ்யமும், அலுக்காத அற்புதத் தகவல்களும் தளபதி அழகிரியின் ஆற்றல், ஆளுமை, பொது வாழ்க்கையில் தான் தலைவனாக ஏற்றுக் கொண்டவரிடம் தனது இறுதி மூச்சடங்கும் வரை, எத்தனை எத்தனை சோதனைக் கட்டங்களும், சோகங்களும் ஏற்பட்ட இறுதி நாட்களில்கூட, இராணுவக் கட்டுப்பாடான தலைமை, கொள்கை, பொது வாழ்வில் ஒருபோதும் மாறாத விசுவாசத்துடனும், கடமை உணர்வுடனும் ஒரு கருஞ்சட்டைக்காரன் வறுமை நிலையில் வாடி வாதங்கினாலும், தடம் புரளாமல், வீழ்ந்து விடாமல் இருந்து, வாழ்ந்துக் காட்டிய வரலாறுதான் அவர்! அந்த கருப்பு மெழுகுவத்தியின் திரிகள் எரிந்து முடிந்தாலும், அவர் மூட்டிய அந்த தீயும், அவரது அறிவு வெளிச்சம் பெரும் காரிருள் போக்கும் கதிரவன் ஒளியாய் அல்லவா என்றும் சுயமரியாதைச் சுடரொளி என்ற ’அணையா ஒளியாய்’, தன் வெளிச்சத்தைப் பாய்ச்சிய வண்ணம், சமூகத்தைப் பரவசப்படுத்தி வருகிறது– இன்றும்கூட!
அஞ்சா நெஞ்சன் அழகிரி போன்றவர்கள் மறையவில்லை; மறைய முடியாது – ஒவ்வொரு சுயமரியாதைத் தோழனின் நெஞ்சிலும் நிறைந்து, ரத்த நாளங்களாக உறைந்தவராக ஆகி விட்டார்!
அவரைத் தாக்கிய வறுமை அவரின் இலட்சிய உறுதிக்கு முன்னால் தோற்று ஓடியது. எலும்புருக்கிநோய் கண்டது என்றால்கூட – அவரின் உறுதிக்கு முன்னால், அவரது உடலை மட்டும் தின்றது; உணர்வோ என்றும், எங்கணும், ஊழித் தீயாய் உலகில் நிலைத்து விட்டது!
(தொடரும்)
