தி.மு.க. கூட்டணியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்ச ருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பது –
‘தமிழ்நாடு அணிக்கும் டில்லி அணிக்குமான தேர்தலே’ என்று திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக பொட்டில் அடித்தது போல் கூறி விட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலிலேயே 39க்கு 39 வெற்றி என்று – ‘இண்டியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தண்ணீர் காட்டியது தமிழ்நாடு.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கென்று நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருரு எடுத்து – தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி மாலையைச் சூட்டுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
பிஜேபியைத் தவிர்த்து அதிமுக தனியே நின்றாலும், சில கட்சிகள் அதனோடு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமாவது இருந்திருக்கும்.
எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வோடு சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக எஸ்.டி.பி.அய். கூட்டணி வைத்துக் கொண்டது.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதால் அந்தக் கட்சியும் (எஸ்டிபிஅய்) அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தி.மு.க. கட்டணிக்கு ஆதரவு தெரிவித்து விட்டது.
பிஜேபி என்றாலே ‘தமிழ்நாடு மண்ணுக்கு ஓர் ஒவ்வாமை’ என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உணர்ந்திருந்த அ.இ.அ.தி.மு.க., பிஜேபியோடு இப்பொழுது கைகோத்த காரணத்தால் பிஜேபியின்மீதுள்ள வெறுப்பு, அதிமுகவின் மீதும் தொற்றிக் கொண்டு விட்ட நிலைதான் இப்பொழுது!
தேர்தல் கூட்டணி என்று சொல்லும் பொழுது கொள்கை எல்லாம் பார்க்கக் கூடாது என்று ஏதோ சமாதானம் சொல்லலாம். பிஜபி என்று வரும் போது – அந்த சமாதானம் எல்லாம் எடுபடாது.
கற்பனைக்காக ஒன்றைச் சொல்லுவோம்! அ.தி.மு.க. தலைமையிலான தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதாக நினைத்துக் கொள்வோம்! பதவியேற்கும் அந்தத் தருணம் முதற்கொண்டே – அ.தி.மு.க. அரசுக்கும் – பிஜேபிக்கும் ‘கைகலப்பு’ ஏற்பட்டு விடுமே!
‘‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதியை ஒதுக்குவோம்’’ என்று சொல்லும் நிலைமை தானே ஏற்படும்.
அதற்கு ஆமாம் சாமி போட்டால், அந்தோ பரிதாபம் அ.இ.அ.தி.மு.க.வின் நிலைமை என்ன? ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா?
எடுத்துக்காட்டுக்காக இது ஒன்றே ஒன்று! முரண்பாடுகளைப் பட்டியலிட்டால், அது நீண்டு… கொண்டே போகும்!!
அதே நேரத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியில் 26 கட்சிகள் இடம் பெற்றாலும் கொள்கைக் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மதச் சார்பின்மை என்றாலும், சமூகநீதி என்றாலும் இந்தக் கூட்டணியில் உள்ள 26 கட்சிகளும் சுருதி பேதமில்லாமல் ஒருமித்த குரலைக் கொடுக்கும்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கண்ட தமிழ் மண் இதில் தெளிவாகவே இருக்கும்.
‘தவளையின் காலில் கட்டிக் கொண்டு தண்ணீரில் குதித்த எலியின் நிலை’தான் அதிமுகவுக்கு ஏற்படும்.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு ஆட்சிப் பொறுப்பில் இடமில்லை, தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க.வுக்குமிடையே தான் போட்டி என்ற ஒரு பரந்துபட்ட மண்ணின் வாசனைக் குணம் உண்டு (Soil Pshchology).
அதிலும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் ஒரு நிலைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆளானது கெட்ட வாய்ப்பே!
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சிப் பதவிப் போராட்டம், பல சில்லுகளாக சிதறுண்டு போய்விட்டது என்ற பொதுவான எண்ணமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நடைபெற்ற அத்தனைப் பொதுத் தேர்தல்களிலும் அ.இ.அ.தி.மு.க. தோல்வியைத் தான் தழுவியது. இதற்கான காரணத்தை இன்றைய அஇஅதிமுக தலைமை நிர்வாகிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
உள்கட்சிப் போராட்டத்திலேயே காலத்தையும், சக்தியையும் செலவழிக்கும் நிலைதான் இக்கட்சிக்கு ஏற்பட்டதே தவிர, உண்மையான வலு உள்ள எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே!
போதும் போதாதற்கு, குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதையாக ஆகிவிட்டதே அ.இ.அ.தி.மு.க.வின் நிலை!
பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் பெரியண்ணனாக நடந்து கொள்வது பிஜேபிதானே! தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி – அ.தி.மு.க. தலைமையில் தேர்தலில் போட்டிப் போடும் என்று சொல்லிக் கொண்டாலும் – தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அலுவலகத்தில் கூட்டணிப் பற்றி பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் அமித்ஷா கனைத்தால் ‘‘இதோ வந்துவிட்டேன் சாமி!’’ என்று டில்லிக்குப் பறந்தோடி சரணம் பாடுவது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு பெரும் இழுக்கல்லவா!
தி.மு.க. கூட்டணி தலைவர் – நடக்க இருப்பது தமிழ்நாட்டுக்கும் – டில்லிக்கும் இடையிலான போராட்டமே என்கிறார். நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் என்பதில் இவ்வளவு பெருங் காரணம் பொதிந்து இருக்கிறது! இது உண்மை – நூற்றுக்கு நூறு உண்மையேயாகும்!
