மோசடி செய்வோரின் முகமூடி ஆன்மிகம்! (2)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

ஆணுறுப்பு அறுபட்ட கேரள சாமியார்!

கேரள மாநிலம் கோலாஞ்சேரியைச் சேர்ந்த சிறீஹரி என்பவன் அவ்வூரில் டீ கடை நடத்திவந்தான். கொல்லம் நகரில் உள்ள ஒரு சாமியாரின் சமாதிக்குச் சென்று சாமியார் வேடம் பூண்டு காவி கட்டிக்கொண்டான்.

காவியைக் கண்டால் கவிழும் மக்கள் அல்லவா! அவனிடமும் கவிழ்ந்தார்கள். பிறகு கொல்லம் பன்மனை ஆசிரமத்தின் கிளையில் தங்கினான். தன் பெயரை கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சாமி என்று மாற்றிக்கொண்டான். அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்று பூஜைகள் செய்து அவர்களின் குறை தீர்ப்பதாய் நடித்தான். அப்படிச் சென்ற வீடுகளில் ஒன்று சட்டக்கல்லூரி மாணவியின் வீடு.

அந்த மாணவியின் தந்தை பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்க, அவரது மனைவியை தன்வயப்படுத்தினான். செயலற்ற கணவன் என்பதால் அப்பெண் இச்சாமியாரிடம் எளிதில் இணங்கினாள். சாமியாரிடம் நெருக்கம் அதிகமானதால், அப்போது 16 வயதுடையவளாய் இருந்த அச்சட்டக் கல்லூரி மாணவியையும் அனுபவிக்க எண்ணி, அவளின் தாயின் துணையுடன் அதை நிறைவேற்றினான்.

இந்த இளம் பெண்ணை 16 வயது முதல் வன்புணர்வு செய்து 7 ஆண்டுகள் கொடுமைப்படுத்தினான்.

அச்சாமியாரின் கொடுமை தாங்க முடியாத அப்பெண் அவனது ஆணுறுப்பையே அறுத்து எறிந்துவிட்டாள்.

நித்தியானந்தா:

சிறப்புக் கட்டுரை

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்னும் ஓர் இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூட்டிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில் அதிகம் கல்லா கட்டும் தொழில் ஆயிற்றே! கல்லாப் பெட்டி நிரம்பியது.

காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததை யெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். ‘கதவைத் திற! காற்று வரும்’ என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது. ஆசிரமம் வளர்ந்து விரிந்தது.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி.டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. ‘நக்கீரன்’ பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.

நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ, இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார்.

சி.டி. புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதினத்தின் 293ஆவது தலைவராக  நியமிக்கப்பட்டார். நியமித்தது  292ஆவது நடப்பு மதுரை  ஆதீனம். இந்த அறிவிப்பை யடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292ஆவது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.

ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை, மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ஜெயேந்திரர் கூறியதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த நித்யானந்தா, “என் மீது எந்தக் கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது. குற்றப் பின்னணி உள்ள அவர் என்னைப் பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சிப் பெரியவரைக் கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.’’ என்று கூற சாமியார்கள் சண்டை சந்தி சிரித்தது.

ஜக்கி வாசுதேவ்:

கேடியாகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று கோடிகளில் புரளும் ஜக்கி வாசுதேவ்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள “ப்ரூக்பாண்ட் ரோடு’’ மேம்பாலத்தின் கீழ்ப்புரம் குதிரை வண்டிகள் நிறுத்தும் இடத்தில் சமூக விரோதிகளுக்கு கள்ளத்தனமாகக் கஞ்சா விற்பனை செய்த ஒரு கயவாளிதான் இந்த ஜக்கி வாசுதேவ். இந்த ஆளுக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டு.

இந்தக் கேடிக்கு ரிச்சர்டு என்கிற ரவுடி நெருங்கிய நண்பன். அவன் எல்லா வகையிலும் இந்த ஆளுக்கு உதவியாய் இருந்தான். இந்த நிலையில் ரிச்சர்டுக்கும் ஜக்கிக்கும் நடந்த வியாபார மோதலில் அந்தப் பெண் மாயமாக, ரிச்சர்டு கொலை செய்யப்பட்டான்.

அது மட்டுமல்லாது ஜக்கி தனது மனைவியையும் கொலை செய்ததால். அது சார்ந்த வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்தியப் புலனாய்வுத் துறையால் தேடப்படும் குற்றவாளியாகவும் இந்த ஜக்கி அறிவிக்கப்பட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

சட்டவிரோதமான ஈஷா மய்யம்

சிறப்புக் கட்டுரை

இப்படிப்பட்ட கிரிமினல் பேர்வழியான ஜக்கி வாசுதேவால், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இக்கரை பொல்லுவபட்டி என்னும் ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உருவாக்கப் பட்டதுதான் ஈஷா மய்யம்!.

ஆர்.எஸ்.எஸ். பின்னணி: இந்து மதத்தையும், சமஸ்கிருதத்தையும் பரப்புவதற்காக, இந்த ஜக்கி என்கிற கிரிமினல் குற்றவாளியுடன் ஆர்.எஸ்.எஸ்.ஸும், இந்து மதவெறி அமைப்புகளும் கைகோத்துச் செயல்படுகின்றன. அதனால்தான் இவ்வளவு பெரிய கிரிமினல் வேலைகளை இந்த ஜக்கி செய்தும், அந்த ஆள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆள் மீது பல பொதுநல வழக்குகள், கொலை, மோசடி வழக்குகள் இருந்தும், எந்த நடவடிக்கையும் இல்லாததற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும், பி.ஜே.பி. மத்திய அரசுமே காரணம்.

எல்.அய்.சி. ஊழியர் ‘கல்கி’ சாமியார்:

அண்மையில் பரபரப்பாகப் பத்திரிகைகளில் பேசப்படும் மோசடி சாமியார் இவர். இவர் தொடக்ககால வாழ்க்கையைத் தோண்டித் துருவினால் சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை எவரும் எளிதில் அறியலாம். குறிப்பாக குற்றவாளிகளே சாமியார்களாகிறார்கள் என்பதை இவர் சாமியாரான வரலாறு உறுதி செய்யும்.

கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். ஆரம்பத்தில் எல்.அய்.சி. ஊழியராக இருந்த இவர், தன்னை விஷ்ணுவின் 10ஆவது அவதாரமான கல்கி அவதாரம் என அறிவித்து கல்கி பகவான் என்று கூறிக்கொண்டார்.

கல்கி பகவானின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் கிராமம் ஆகும். இவரது தந்தை வரதராஜுலு நாயுடு, தாய் வைதரபாய் அம்மாள், 7.3.1949இல் பிறந்தார்.

இவரது தந்தை தெற்கு ரயில்வேயில் அக்கவுண்டன்ட்டாக பணியாற்றி வந்தார். கல்கி பகவானுக்கு 6 வயது இருந்தபோது அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டது. இங்குதான் ஆரம்பக் கல்வியைப் படித்தார்.

சென்னையில் புகழ் பெற்ற டான் போஸ்கோ பள்ளியில் படித்த அவர், பின்னர் வைஷ்ணவா கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பு முடித்தார். 1971இல் அவருக்கு எல்.அய்.சி.யில், வேலை கிடைத்தது.

சிறப்புக் கட்டுரை

அதில், குமாஸ்தாவாகப் பணியாற்றி வந்தார். 1977 ஜூன் மாதம் 6ஆம் தேதி பத்மாவதியை திருமணம் செய்து கொண்டார். 1980ஆவது ஆண்டு வாக்கில் திடீரென எல்.அய்.சி. அலுவலகத்தில் நீண்ட விடுமுறை எடுத்த அவர் மதனபள்ளியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்திய பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார்.

அவர், சில தவறுகளில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளி நிருவாகம் அவரை பணியை விட்டு நீக்கியது. அதன் பிறகு ஆந்திராவில் இப்போது ஆசிரமம் அமைந்துள்ள சித்தூர் மாவட்டம் வரதய் பாளையத்தில் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாக அப்போது அறிவித்தார்.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹரிகோதாய் அவருக்கு தாராளமாக உதவினார். இதன் மூலம் விடுதியுடன் கூடிய பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்தார். விடுதியில் 180 மாணவர்கள் தங்கி இருந்தனர். உள்ளூர் மாணவர்கள் 200 பேர் தினமும் வந்து சென்றனர். அங்கு ஆன்மிக போதனைகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்குள்ள பள்ளி மாணவர் ஒருவர், “நான் கடவுளைக் கண்டேன்’’ என்று திடீரென அறிவித்தார். இதன் பின்னர் பல மாணவர்களும் இவ்வாறு சொல்ல ஆரம்பித்தனர்.

அப்போது கல்கி பகவான், கடவுள் இங்கு தோன்றி இருப்பதாக மாணவர்களிடம் கூறினார்.

இந்த நிலையில் திடீரென தன்னை விஷ்ணுவின் 10ஆம் அவதாரம் கல்கி என கூறினார். அங்கு கல்கி ஆசிரமத்தையும் உருவாக்கினார். அவருடைய ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம், ஆட்டம், பாட்டம் என வித்தியாசமான முறையில் ஆன்மிக நிகழ்ச்சிகள் அரங்கேற்றமாகின. இதில் ஏராளமான இளம்பெண்கள், ஆண்கள் என பலரும் பங்கேற்று கல்கியின் பக்தர்களானார்கள். வெளிநாட்டுப் பக்தர்களும் ஏராளமானோர் ஆசிரம உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து சென்னை, பெங்களூர், அய்தராபாத் என இந்தியா முழுவதும் ஆசிரம கிளைகள் தொடங்கப்பட்டன. கல்கி பகவானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உருவானார்கள். கோடி, கோடியாக பணத்தை காணிக்கையாகச் செலுத்தினார்கள்.

சென்னை பூவிருந்தவல்லி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை ஆரம்பித்து, தமிழ்நாடு-ஆந்திரா மக்களைக் கவர ஆரம்பித்தார். தன்னையே கடவுள் என சொல்லிக்கொண்டு வலம்வந்த இவரின் ஆன்மிகச் சேவையில் மயங்கிய அப்பாவி மக்களைவிட பாலிவுட், கோலிவுட் திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அதிகாரவர்க்கப் பட்டாளமே வீழ்ந்து கிடந்தது.

ஆன்மிகப் பாதை அடாவடிப் பாதையாக மாறியது. கல்கியைச் சந்திக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் தட்சணை என கட்டாய வசூலில் இறங்கியதால் கல்கி கட்டிய மாயக்கோட்டையில் மக்கள் கற்களை வீசி எறிய ஆரம்பித்தனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப் போல அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட், அய்.டி. துறையில் உள்நாடு, வெளிநாடுகளில் பல்வேறு முதலீடுகளைச் செய்தார். நாயுடுவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு இந்த விவகாரம் தெரியவரவே, டெல்லிக்கு தகவல் கொடுத்து கல்கி ஆசிரமத்தில் ரெய்டு தீயைப் பற்றவைத்து விட்டார் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.

கல்கி குடும்பத்திற்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள், ஆசிரமங்களில் மூன்று நாள்களாக நடத்திய ரெய்டின் முடிவில், கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. 43.9 கோடி ரூபாய் இந்திய பணமும், 21 கோடி அமெரிக்க டாலர் கரன்சிகள், 9 கோடி வைரங்கள்,  மேலும் 26 கோடி ரூபாய் மதிப்பிலான 95 கிலோ தங்க நகைகளும், 31 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் என கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கும் மேலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கல்கி, அவரது மனைவி பத்மா, அவரது மகன் கிருஷ்ணா, இவர்களது ஆடிட்டர் மற்றும் பினாமி பெயர்களில் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் ஹோட்டல்கள், மால்கள், பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், உல்லாச கப்பல்கள், சிறிய சொகுசு ரக ஃபிளைட் என ஏகத்துக்கும் வாங்கிக் குவித்துள்ளனர்.

இதுதவிர, இந்தியாவில் கிருஷ்ணாவின் பெயர்களிலும் கோல்டன் லோட்டஸ், ட்ரீம், வியூ, ப்ளூ வாட்டர் என கட்டுமான நிறுவனங்களின் பெயர்களில் தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வாங்கியுள்ளார். இவ்வளவு சொத்துகள், நிறுவனங்கள் வாங்குவதற்கான மூலதனம் எங்கிருந்து வந்தது?

சென்னை, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சிறப்புக் கட்டுரை

இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில்  பெரிய  அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சாமியார் கல்கி விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது அவர் அங்கு இல்லை. ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆசிரம நிருவாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது . ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் கல்கி பகவான் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால், கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்குத் தெரிய வில்லை. அவரைப் பார்த்து 2 ஆண்டுகள் ஆனதாக ஆசிரம நிருவாகிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்குத் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கடவுச் சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாகத் தேடினர். ஆனால், அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள்  கருதுகிறார்கள்.

ஆக, நாடு முழுவதும் நடக்கும் சாமியார்கள், மதவெறி அமைப்புகள், கொள்ளையடிப்போர், கொலையாளிகள், மோசடிப் பேர்வழிகள் என்று எல்லா குற்றவாளிகளுக்கும் ஆன்மிகம் என்பதே பாதுகாப்பான முகமூடியாகப் பயன்படுகிறது.

ஆன்மிகம் என்பது ஆன்மா என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல். உண்மையில் ஆன்மா என்று எதுவும் இல்லை. இதில் ஜீவாத்மா, பரமாத்மா என்று பிரித்து கருத்துகள் கூறுவது எல்லாம் மூடநம்பிக்கையின் அடிப்படையிலேதான்.

எனவே, ஆன்மிகம் சார்ந்த அனைத்தும், கடவுள் என்ற கற்பனையின் அடிப்படையில் புனையப்பட்ட கட்டுக்கதைகள்தான். இவை அறிவுக்கும், அறிவியலுக்கும், உண்மைக்கும் சற்றும் பொருந்தாத சொற்கள்.

ஆதிக்கவாதிகள், மோசடிப் பேர்வழிகள், சுரண்டல், கொள்ளை லாபம், ஏமாற்று செய்வோர் மக்களை ஏமாற்றவும், மக்கள் ஏமாறவும் இது பயன்படுகிறது. இவை ஒழிக்கப்பட கடவுள், பக்தி, ஆன்மா, பிறவி, விதி போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

பக்தி போதையிலிருந்து மக்கள் விடுபட்டுத் தெளிந்து விடுதலை பெறுவதுதான் ஒரே தீர்வு!  அந்தப் போதை தெளிய பெரியாரே ஒரே மருந்து!

– நிறைவு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *