சென்னை – தாம்பரம் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 திராவிடர் கழகம் என்பது தேர்தல் அரசியலில் நிற்கும் கட்சியல்ல; 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நீதிக்கட்சியும், 100 ஆண்டுகாலச் சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் திராவிடர் கழகம்!
 அதிலிருந்து அதன் அரசியல் பிரிவாக உருவான திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கொள்கைக் கூட்டணியுடன் நிற்கிறது!
‘திராவிட மாடல்’ என்பது எத்தனை பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒற்றை இன்ஜினாக நின்று இழுத்துச் செல்லும் பேராற்றல் கொண்டது!

சென்னை, மார்ச் 21  திராவிடர் கழகம் என்பது தேர்தல் அரசியலில் நிற்கும் கட்சியல்ல. 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நீதிக்கட்சியும், 100 ஆண்டுகாலச் சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் திராவிடர் கழகம். அதிலிருந்து அதன் அரசியல் பிரிவாக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். வடக்கிலிருந்து வரும் ஆர்.எஸ்.எஸ். ஆகட்டும் அல்லது பா.ஜ.க. ஆகட்டும் — அவர்களுக்குத் தனித்து நிற்கும் துணிச்சல் இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கொள்கைக் கூட்டணியுடன் நிற்கிறது. பிரதமர் மோடி ‘டபுள் இன்ஜின்’ (இரட்டை இன்ஜின்) அரசு என்று அடிக்கடி சொல்வார். அதன் மறைமுகப் பொருள் என்ன? ஒரு இன்ஜினால் வண்டியை இழுக்க முடியவில்லை என்பதுதானே? ஆனால், ‘திராவிட மாடல்’ என்பது எத்தனை பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒற்றை இன்ஜினாக நின்று இழுத்துச் செல்லும் பேராற்றல் கொண்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘‘சட்டப்பேரவை தேர்தலும் –
வாக்காளர் கடமையும்!’’

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் – 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் – பாரதி திடல் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

‘தமிழ்நாட்டை ஒருபோதும் தலை குனிய விட மாட்டேன்; தலைநிமிர்ந்து நிற்பேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி எடுத்தார்.

வருகிற மே 5 ஆம் தேதி,
மீண்டும் கோட்டையை நோக்கி…

நீங்கள் என்ன செய்தாலும், எவ்வளவு செய்தாலும், வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. மே 5 ஆம் தேதி,  மீண்டும் கோட்டையை நோக்கி, மீண்டும் ராஜ்பவனை நோக்கி, புதிதாக வந்திருக்கின்ற ஆளுநர் அழைக்கக்கூடிய அளவிற்கு, நோக்கிச் செல்லக்கூடியவர் ஒரே ஒருவர், அவருக்குப் பெயர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லக்கூடிய நம்முடைய முதலமைச்சர்.

மக்கள் ஆதரவை வைத்துத்தான் இதனை நாங்கள் சொல்லுகிறோம்.  ‘‘நாங்கள் ஆலமரத்தடி ஜோசியர்க ளும் இல்லை; கைரேகை பார்ப்பவர்களும் இல்லை. இப்போது நிறைய பேர் ‘சீட்டு’ கொடுப்பதாகக் கூடக் கேள்விப்படுகிறேன். தமிழ்நாட்டில் புதிதாக முளைத்துள்ள கட்சிகள் எல்லாம் என்ன செய்கின்றன தெரியுமா? ‘முதலில் உங்கள் ஜாதகத்தைக் கொடுங்கள்; ஜாதகத்தைப் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்போம்’ என்கிறார்கள். ஜாதகத்தைப் பார்த்துத்தான் வேட்பாளர்களையே அறிவிக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை ராகு காலம், எமகண்டம் எல்லாம் கிடையாது!

நேற்று (15.3.2026) ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அறிவிப்பு வந்தபோது, மாலை 4.30 மணி ‘ராகு காலம்’ என்பதால், 4 மணிக்கே அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை ராகு காலம், எமகண்டம் எல்லாம் கிடையாது; 24 மணி நேரமும் நல்ல காலமே! ராகுவும், கேதுவும் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்களுக்கு இங்கு வேலையில்லை.

மீண்டும் இந்த ஆட்சி அமையும் என்பதற்கு இரண்டே உதாரணங்களைச் சொல்கிறேன். இது ஒரு கட்டுப்பாடான இயக்கம். கட்டுப்பாட்டை நாங்கள் மீற மாட்டோம். எங்களுக்கு ஆடம்பரம் தேவையில்லை; மக்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் செல்வோம். அன்றைய காலத்தில் சாக்ரடீஸ் மக்களைத் தேடி, மக்கள் இருக்கின்ற இடத்திற்கே சென்றார்; மக்களைத் தன்னிடம் அழைக்கவில்லை. நாங்களும் மக்கள் இருக்கும் இடத்திற்கே செல்வோம்.

திராவிடர் கழகம் என்பது தேர்தல் அரசியலில் நிற்கும் கட்சியல்ல. 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நீதிக்கட்சியும், 100 ஆண்டுகாலச் சுயமரியாதை இயக்கமும் இணைந்ததுதான் திராவிடர் கழகம். அதிலிருந்து அதன் அரசியல் பிரிவாக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

வடக்கிலிருந்து வரும் ஆர்.எஸ்.எஸ். ஆகட்டும் அல்லது பா.ஜ.க. ஆகட்டும் — அவர்களுக்குத் தனித்து நிற்கும் துணிச்சல் இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கொள்கைக் கூட்டணியுடன் நிற்கிறது. கம்யூனிஸ்ட்கள், மூன்றாவது குழல் என்று சொல்லப்படுகின்ற விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இதர தோழமைச் சக்திகளுடன் இந்தச் சித்தாந்தக் கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

ஒற்றை இன்ஜினாக நின்று இழுத்துச் செல்லும் பேராற்றல் கொண்டது

பிரதமர் மோடி ‘டபுள் இன்ஜின்’ (இரட்டை இன்ஜின்) அரசு என்று அடிக்கடி சொல்வார். அதன் மறைமுகப் பொருள் என்ன? ஒரு இன்ஜினால் வண்டியை இழுக்க முடியவில்லை என்பதுதானே? ஆனால், ‘திராவிட மாடல்’ என்பது எத்தனை பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஒற்றை இன்ஜினாக நின்று இழுத்துச் செல்லும் பேராற்றல் கொண்டது.

ஒற்றை இன்ஜினை நோக்கி கட்சிகள் வருகின்றன, வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு அணியில், ‘‘இதோ வர்றாங்க, அதோ வர்றாங்க’’ என்று சொல்கிறார்களே தவிர, வந்தபாடில்லை.

அண்ணாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டது!

அதற்காக இன்று எதிர்க்கட்சிகள் ‘திரிசூலத்தை’க் காட்டுகிறார்கள். அது கோயிலில் இருக்கும் திரி சூலம் அல்ல; அவை வருமான வரித்துறை (IT), சிபிஅய் (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகிய மூன்று துறைகள். இப்போது அவற்றுடன் தேர்தல் ஆணையமும் சேர்ந்துவிட்டதோ என்ற அய்யம் எழுகிறது. நீதித்துறையே மதவாதத்திற்கு ஆளாகிவிடுமோ என்ற அபாயமும் தெரிகிறது. இருப்பினும், தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம், எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டது.

அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் ‘சென்னை மாகாணத்திற்கு’ ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினார். சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்ற புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டு வந்தார். ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்ற கொள்கையை இந்த இயக்கம் (திராவிட இயக்கம்) தொடர்ந்து வலியுறுத்துகிறது. ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தந்தை பெரியாரின் கனவை கலைஞர் சட்டமாக்கினார்; அதன் தொடர்ச்சியாக, இன்று பெண்கள் கூட ஓதுவார்களாகப் பணியாற்றும் சமூகப் புரட்சி தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

தமிழ்நாடு பெரியார் நாடு என்கிறீர்களே? இது பெரியாழ்வார் வாழும் நாடு என்று ஓர் அம்மையார் சொன்னார். அவருக்குச் சொல்கிறோம், பெரியாழ்வார் நாடாக இந்த நாடு இருந்திருந்தால், நிச்சயமாக இந்த நாட்டில் குலக்கல்வித் திட்டம்தான் இருந்திருக்கும். ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் படிக்கக் கூடிய வாய்ப்பு இருந்திருக்காது.

சமூக நீதிக்கு எதிரான சக்திகள்…

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்போடு (9th Schedule Protection) நடைமுறையில் உள்ளது. சமூக நீதிக்கு எதிரான சக்திகள் இதையெல்லாம் தடுக்கப் பார்க்கிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியை நடத்தவிடாமல், திரிசூலத்தைக் காட்டி மிரட்டலாம் என்று நினைத்தார்கள்.  ஆனால், அவர்களுடைய பாச்சா பலிக்கவில்லை.  எதிரணியில் இன்னும் சில கட்சிகள் வரும் என்று சொல்கிறார்களே, எப்பொழுது வரும்? மே 4 ஆம் தேதிக்குப் பிறகு. எப்படி வருவார்கள்? தலைகுனிந்து வருவார்கள்.

நீங்கள் எத்தனை பேர் வந்தாலும், இதைவிட அத்தனைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும், மக்கள் பேராதரவு என்ற கற்கோட்டையின்மீது நிற்கின்ற ஓர் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவேதான், நீங்கள் என்ன செய்தாலும், எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும், அந்த வியூகங்களைப் புரிந்துகொண்டு, அதனை முறியடித்துக் காட்டக்கூடிய ஆற்றல் வாய்ந்து ஒரு முதலமைச்சர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை!’

‘திராவிட மாடல்’ ஆட்சியில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுவது வெறும் ‘உதவித் தொகை’ அல்ல; அது ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’. பெண்கள் அதனைத் தங்கள் உரிமையாகவே பெறுகிறார்கள்.

அதனை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள் என்பதைத் தெரிந்தவுடன், மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000–த்தையும், கோடையின் கொடுமையிலிருந்து தற்காத்துக்கொள்ள ரூ.2000–த்தையும் சேர்த்து ஆக மொத்தம் ரூ.5000  சூரியன் உதயத்திற்கு முன்பே மகளிர் வங்கிக் கணக்கில் போடப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் கொடியேற்றுவார்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கிறது. உதாரணமாக, 2020 இல் ரயில்வே துறைக்கு 70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் 9 முக்கியத் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. நம்முடைய முதலமைச்சர் இத்தகைய வஞ்சகங்களை முறியடித்து, மீண்டும் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ என்று உறுதிமொழி ஏற்று, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது உறுதி. ஆகஸ்ட் 15, 2026 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் கொடியேற்றுவார்.

அதை மாற்றிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள்; நீங்கள் கட்டுவது மனக்கோட்டை – உள்ளே நுழையப் போவது கற்கோட்டை போன்று இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி யின் தலைவரான நம்முடைய மு.க.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் வரும்! மீண்டும் வருவார்!

‘‘இது ஸ்டாலின் எனும் தனி மனிதருக்காக அல்ல; உங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவும், பெண்களின் சம உரிமைக்காகவும், உயரிய கொள்கைகளுக்காகவும் இந்த ஆட்சி தொடர வேண்டும்’’ ஏமாந்துவிடாதீர்கள்.

அவருடையது என்ட்ரி – எங்களுடையது சென்ட்ரி!

சொல்லவேண்டியது எங்கள் கடமை – நாங்கள் கருப்புச்சட்டைக்காரர்கள் – நாங்கள் கோட்டைக்குப் போகமாட்டோம், பதவிக்குப் போகமாட்டோம். அவரு டையது என்ட்ரி – எங்களுடையது சென்ட்ரி!

விழிப்புணர்வோடு இருங்கள், நன்றி, வணக்கம்!’’

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *