சிறீவில்லிபுத்தூர், மார்ச் 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடின உழைப்பினால், இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதன்மை மாநிலம்
சிறீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு போதிய நிதி வழங்காத நிலையிலும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை மட்டுமின்றி, ஒன்றிய அரசின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகத் திறம்படச் செயல்படுத்தி வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களையும் அவர் சிறப்பாக வழங்கி வருவதால், தமிழ்நாடு மக்கள் இன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். அவரது உழைப்புதான் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளது.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கத்தை, எடப்பாடி பழனிச்சாமி மண்வெட்டி கொண்டும், ஆர்.பி. உதயகுமார் கடப்பாரை கொண்டும் சிதைத்து அழித்துவிட்டனர். ஆனால், தி.மு.க கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. “ஜெயலலிதா மறைந்தபோது நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். ஆனால், தற்போது தி.மு.க-வில் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சட்டமன்றத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. ‘ஸ்டாலின் பணி தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்பதே மக்களின் குரலாக உள்ளது.” இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஈரான் போர் எதிரொலி
திருச்சி விமான நிலைய சரக்கு ஏற்றுமதி 37 சதவீதம் சரிவு!
திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- ஈரான் போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் சரக்கு ஏற்றுமதி 37 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.
பாதிப்பிற்கான முக்கிய காரணங்கள்:திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களிலிருந்து துபை, ஷார்ஜா, அபுதாபி மற்றும் மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் வாழைப்பழம், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் பொருட்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
திருச்சியின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்தே உள்ளது. பிப்ரவரி 28 முதல் பாதுகாப்பு காரணங்களுக்காக துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ். ராஜு வெளியிட்டுள்ள தகவலின்படி, மஸ்கட் நகருக்கு மட்டும் தற்போது விமானங்கள் இயக்கப்படுவதால் ஓரளவுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. இல்லையெனில் பாதிப்பு 50 சதவீதத்தைத் தாண்டியிருக்கும். போர்ப் பதற்றம் தணிந்து வான்வழிப் பாதைகள் திறக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுமதி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்” என்றார்.
இந்த திடீர் வீழ்ச்சியால் திருச்சி மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். போர்ச் சூழல் விரைவில் முடிவுக்கு வந்து விமானப் போக்குவரத்து சீராகும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணிக்கு
அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு
அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு
சென்னை, மார்ச் 21- வரும் தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு அம்பேத்கர் முன்னணி கழகம் ஆதரவு. அதன் மாநில நிறுவன பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு ஆதரவு தேர்தல் அறிக்கை பின்வருமாறு:
2021ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் மூலம் பெரும் ஆதரவையும் பாரட்டையும் பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வேட்பாளர்களையும் மற்றும் தோழமை கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட ஆதரவு தருகிறோம் என்பதை அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக ஆதி திராவிடர் மலை ஜாதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில நிறுவன பொதுச் செயலாளர் திண்டிவனம் சிறீராமுலு ஆதரவு தெரிவித்துள்ளார்.
