கங்கையில் நேரடியாகக் கலக்கப்படும் மனிதக் கழிவுகள்
கடந்த மார்ச் 16, 2026 அன்று (ரமலான் மாதம்), வாரணாசியில் உள்ள கங்கை நதியில் ஒரு படகில் குழுவாகச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இப்தார் விருந்து நடத்தினர். அப்போது அவர்கள் கோழி பிரியாணி சாப்பிட்டதாகவும், அதன் எஞ்சிய கழிவுகளை ‘புனித’மான கங்கை நதியில் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
புகாரில் குறிப்பிட்டது என்ன?
இந்த காட்சிப் பதிவை ஆதாரமாகக் கொண்டு, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) வாரணாசி மாவட்டத் தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
கங்கை நதி இந்துக்களின் ‘புனித’மான இடமாகக் கருதப்படுவதால், அங்கு அசைவ உணவுகளை உட்கொண்டதும், கழிவுகளை ஆற்றில் கொட்டியதும் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து, வாரணாசி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, காட்சிப் பதிவில் இருந்த இளைஞர்களை அடையாளம் கண்டனர். மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மொத்தம் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் (BNS)
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) கீழ் பின்வரும் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:
பிரிவு 298: மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்.
பிரிவு 299: மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தீய நோக்கம் கொண்ட செயல்கள்.
பிரிவு 196(1)(B): வெவ்வேறு பிரிவினரிடையே பகைமையை வளர்த்தல்.
பிரிவு 270: பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்.
பிரிவு 279: பொது நீர்நிலைகளை மாசுபடுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை அவர்களை சிறைக்கு அனுப்பியது.
அரித்துவார் என்னும் இடத்திற்கு சிறிது மேலே கங்கை சமவெளியைத் தொடுகிறது. கங்கைக்கரையில் இந்தியாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்கள் உள்ளன. கோரக்பூர் முதல் கொல்கத்தா வரை சுமார் 40 கோடி மக்கள் கங்கை கரையில் வசிக்கின்றனர்.
இந்த 40 கோடி மக்களில் 3 கோடி பேரைத் தவிர மற்ற அனைவருமே இறைச்சி உண்பவர்கள். இவர்கள் கங்கையில் குளிக்கிறார்கள். கால் கழுவுகிறார்கள். இவர்களின் கழிவுகளும் கங்கையில் தான் கலக்கின்றன.
கங்கையில் மனித உடல்கள் வீசப்படுவது குறித்து 1818 முதல் காணொலிப் படங்களாகவே உலகெங்கும் பரவி வருகிறது.
மனித உடல்கள் வீசப்படுதல்
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலும் உடல்களை எரியூட்டல் செய்யாமல் நதியில் விடுவது ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெருந்தொற்று போன்ற காலங்களில், அதிகப்படியான உயிரிழப்புகள் மற்றும் சுடுகாடுகளில் நிலவும் கூட்ட நெரிசல் காரணமாக உடல்கள் கங்கையில் நூற்றுக்கணக்காக மிதந்ததும் அனைவரும் அறிந்தத்தே.
மனித உடல்கள் மட்டுமல்லாது, கங்கை நதி பலவிதமான மாசுகளால் பாதிக்கப்பட்டுள்ளது:
கான்பூர் போன்ற நகரங்களில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்கள் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் நதிக்கரையோர மக்கள் வீசும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் நதி ஓட்டத்தைத் தடுப்பதோடு நீர்வாழ் உயிரினங்களையும் பாதிக்கின்றன.
காலரா, தொற்று நோய்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக வீசப்படும் பிளாஸ்டிக் உறையிடப்பட்ட படங்கள், இரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகள் மற்றும் மாலைகள் நீரின் தரத்தைக் குறைக்கின்றன.
இந்தச் செயல்களால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை:
அழுகும் உடல்கள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் நீரின் ‘ஆக்சிஜன்’ அளவு குறைந்து, மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
நதி நீரை அருந்தும் அல்லது குளிக்கப் பயன்படுத்தும் மக்களுக்கு காலரா, தோல் நோய்கள் மற்றும் இதர தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
