திருவாங்கூர் சமஸ்தானம் (25) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

ஜாதியக் கொடுமைகள் என்ற நச்சுப் பாம்பால் கடிபட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவு கொடுத்தால்தான், கொடுமைகள் விடிவுக்கு வரும் என்று அய்யன்காளி முடிவெடுத்தார். ‘தீண்டல்’, ‘தொடீல்’ என்று ஜாதியக் கட்டுப்பாட்டிற்கு ஆளான புலையர், ஈழவர், பறையர் இனக் குழந்தைகள் படிக்க முடியாதவாறு கல்விக் கூடங்களின் கதவுகள் இறுக்க அடைக்கப்பட்டிருந்தன. உயர் ஜாதிப் பார்ப்பனர்களும், அவர்களின் ஏவலாட்களான நாயர்களும், தாழ்த்தப்பட்ட பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகளைப் படிக்க விடுவார்களா? பார்க்கக் கூடாத, தொடக் கூடாத ஜாதியினர் சமூகத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் எதிரில் தப்பித் தவறி வந்து விட்டாலே பார்ப்பனர்கள் தீட்டாகி விட்டதாக, தீட்டுக் கழிக்கும் சமூகத்தில் மேல் ஜாதிப் பிள்ளைகளோடு, தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் ஒன்றாக இருக்க விடுவார்களா? அந்தக் கீழ்ஜாதிப் பிள்ளைகள் படிப்பதென்பது நடக்கவே முடியாத செயலாக அந்த நாட்டில் இருந்தது.

“மெட்ராஸ் பிரசிடென்சியில்” ஆங்கிலேயர் ஆட்சி நடந்த நிலையில் திருவாங்கூர் நாட்டில் கிறிஸ்துவ மிஷனரிகள் தோன்றி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டன. அடிமை வாழ்க்கைக்கு ஆட்பட்ட மக்கள் மதம் மாறினால் உரிமைப் பெறலாம் என்ற நிலையில் கிறிஸ்துவர்களாக மதம் மாறினர். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலாடை அணியும் உரிமையையும், அவர்களின் கல்வி கற்கும் உரிமையையும் கொடுக்கத் துவங்கியது. கிறிஸ்தவ கோயில்கள் பள்ளிகளைத் துவக்கின. அப்பள்ளிகளில் ஜாதிய வேறுபாடுகள் இன்றி குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடங்கள் மேற்கத்தியக் கல்வியையும், சுதந்திரச் சிந்தனையையும் வளர்த்தன. தீண்டத்தகாதவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டால் ஜாதியப் பெயரால் அவன் அனுபவித்தக் கொடுமைகள் எல்லாம் நீங்கி விடும். இதைக் கண்ணுற்ற பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் இதைப் பெரிதாக நினைக்காத மேல்ஜாதி இந்துக்கள் நாளடைவில் விழித்துக் கொண்டனர். அரசு இயந்திரத்தின் மூலம் மத மாற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

கி.பி.1905இல் சதானந்த சுவாமிகள் என்னும் துறவி திருவாங்கூர் வந்தார். அவர் ஒரு புகழ்பெற்றத் துறவி. இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றிவிட்டு, திருவாங்கூர் நாட்டிற்கு வந்தார். அவர் ஒரு பார்ப்பனர். திருவாங்கூர் நாட்டில் இருக்கும் ஜாதியக் கொடுமைகளைக் கண்ட அவர் மிகவும் மனம் வருந்தினார். மேல்ஜாதி நம்பூதிரிப் பார்ப்பனர்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்பை நல்கினர். தீண்டல், தொடீல் போன்ற பழக்கங்களைத் தவிர்த்து, ஒடுக்கப்பட்டோரை மனிதர்களாக நடத்துங்கள் என்று உயர் ஜாதியினருக்கு அறிவுரை கூறினார்.

ஜாதியக் கொடுமைகளால் இந்து மதக் கீழ்ஜாதியினர் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதைச் சுட்டிக் காட்டிய அவர், நாளடைவில் இந்து மதம் பெருமளவில் சிதைவுக்குள்ளாகி விடும் என்று அவர் ஜாதிய இந்துக்களிடம் அறிவுறுத்தினார். கிறிஸ்தவ மத போதகர்கள் போல் தெருமுனையில் (கிழக்குக் கோட்டை அரண்மனை வாசலில்) நின்று உரத்தக் குரலில் ஜாதியக் கொடுமைகளை நீக்கச் சொல்லி உயர்ஜாதி நம்பூதிரிப் பார்ப்பனர்களிடம் வேண்டினார். (அந்தப் பகுதியில் அரசரும், அவர் பரிவாரங்களும் (நாயர்கள்), நம்பூதிரிப் பார்ப்பனர்கள் மட்டுமே செல்ல முடியும்.

தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட வர்களைக் கோயில் தெருக்களிலும், கோயில்களிலும் நடக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர் பரப்புரை நிகழ்த்தினார். இந்தப் பரப்புரை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்குக் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் அவர் பார்ப்பனத் துறவி என்று பெரும் வரவேற்பைக் கொடுத்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள், அவர் பரப்புரையினால் எரிச்சலடைந்து அவர் மேல் பொய்க் குற்றங்களைச் சுமத்தி, அவர் முகத்தில் ‘கரி’ பூசித் துரத்தினர்.

(சான்று: “நினைவுக் குறிப்புகள் – சிறி மன்னத்து பத்மநாபன், ‘சுதேசபிமானி’ ராமகிருஷ்ண பிள்ளை)

சதானந்த சுவாமிகளின் பேச்சை சில அடிமை மக்கள் ஒளிந்திருந்து கேட்டனர். அவர்கள் மூலம் அய்யன்காளியின் காதில் அவரைப் பற்றிய செய்திகள் எட்டின. திருவாங்கூர் கிழக்குக் கோட்டை எதிர்ப்புரம் அப்போது வயல்வெளியாக இருந்தது. அதன் நடுவில் சென்ற ஒரு வரப்பில் இருந்து, இரகசியமாக அய்யன்காளி தன் நண்பர்களுடன் நின்று சதானந்த சுவாமிகள் பேச்சினைக் கேட்டார். அய்யன் காளியின் சிற்றன்னை குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து விட்டனர். அவர்கள் சுவாமிகளை சந்திக்க அய்யன்காளி ஆர்வமுடையவராக இருப்பதைக் கூறினர். சுவாமிகள் மகிழ்ச்சியுடன் சந்திக்க இசைந்தார். அவர் ஆலோசனையின் பெயரில் கொஞ்சம் படிப்பறிவு பெற்ற “தை விளாகத்துக் காளி” என்பவரை ‘பெரிய காளி’ என்றும், அய்யன் காளியை ‘சின்னக் காளி’ என்றும் சுவாமிகள் நியமித்தார். அதை அனைத்து புலைய மக்களும் ஏற்றுக் கொண்டனர். சுவாமிகள் ஆலோசனைப்படி மதமாற்றம் ஆகாமல் சொந்த மதமான இந்து மதத்தில் இருந்தவாறே உரிமைகளுக்ககாகப் போராடுவது என்று அய்யன்காளி முடிவெடுத்தார்.

1907இல் தீண்டத் தகாதவர்களை சமுதாயம், பொருளாதாரம், கல்வி நிலைகளில் உயர்த்த வேண்டி “சாது ஜன பரிபாலன சங்கம்” என்று வெங்கனூரில் அமைக்கப்பட்டது. அந்த சங்கத்தின் தலைவராக அய்யன்காளி நியமிக்கப் பட்டார். அய்யன்காளியின் ஆலோசனைப்படி விவசாய அடிமைகள், வாரத்தில் ஆறு நாட்கள் மடடுமே வேலை செய்ய வேண்டும், ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சங்கம் நிறைவேற்றியது.

தீண்டாமை, மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்ற சமூகச் சட்டங்கள் இருந்த நிலையில் புலையர்கள், பறையர்கள் குடும்பப் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஜாதியினருக்கும் தனித்தனி பள்ளிக் கூடங்கள் கட்டி, வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் எனறு சாது ஜன பரிபாலன சங்கம் கோரிக்கை எழுப்பியது.

இந்த நிலையில் வி.பி.மாதவராயர் திவானாக திருவாங்கூர் நாட்டில் பொறுப்பேற்றார். அவர் 1905இல்  ஈழவ மக்களுக்காகப் பள்ளிகளைத் திறந்தார். ஆனால், நாயர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். வன்முறைகள் தலைவிரித்து ஆடின. பல இடங்களில் நாயர்களுக்கும், ஈழவர்களுக்கும் இடையே பெரும் கலகம் மூண்டது. ஆனால், திவான் மாதவராயர் கவலையே படவில்லை. இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்யும் முயற்சிகளை திவான் மேற்கொண்டார். ஆனால், பள்ளிகளைத் திறக்கும் நிலையை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. பள்ளிகளைத் திறக்கும் அரசாங்க உத்தரவுக்குத் தடையாக யார் இருந்தாலும், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டார்.

ஜாதியின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்கு மறுப்பு சொல்லக் கூடாது என்றும் அரசு ஆணை பிறப்பித்தார் திவான். 1907ஆம் ஆண்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க அதிகாரம் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். அதனால் பள்ளியில் இடம் முடிந்துவிட்டது என்று கூறி கீழ் ஜாதி மாணவர்களைச் சேர்க்க மறுத்தனர்.

அரசு ஆணையில் கோயில்கள், அரண்மனை போன்ற இடங்களின் அருகில் இருக்கும் பள்ளிகளில் கீழ்ஜாதி மாணவர்களுக்கு இடம் இல்லை என்று தெளிவாகக் கூறியது.

அந்த இடங்களில் இதனால் ஜாதிக் கலவரங்கள் வந்து விடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. மேலும், அந்த இடங்களில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்த சத்திரியர்கள் இருந்ததால் காணாமை, தீண்டாமை போன்ற ஜாதிக் கட்டுப்பாடுகளால் மேல் ஜாதியினர் தீட்டுப்பட்டு விடக் கூடாது என்பதாலும் அரசு ஆணையில் இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.

ஈழவர்களைச் சேர்க்க மறுத்தால் தலைமை ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மீண்டும் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகே ஈழவ மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

(தொடருவேன்…)

(சான்று: பி.கே.பாலகிருஷ்ணன் – “நாராயணகுரு”, “அய்யன்காளி” – நிர்மால்யா)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *