அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னைக்கும் – டில்லிக்குமாக விமானத்தில் பறந்தோடிக் கொண்டு இருக்கிறார்!
இதனை ஒரு பயணமாக டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் சொன்னது – அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாகப் பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி டில்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமிஷ்தாவை சந்திப்பது – அரசியல் (அரசியல் நெருக்கடி) பிரச்சினைதான் என்பது சிறுபிள்ளைக்கும் அப்பட்டமாகத் தெரியக்கூடிய ஒன்றுதான்.
2024 ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.அய். கட்சியின் “வெல்லட்டும் மதச்சார்பின்மை” மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆக்ரோசமான பி.ஜே.பி. எதிர்ப்பு உரையைக் கேட்டவர்களுக்கு – அல்லது படித்தவர்களுக்கு, ‘அந்த எடப்பாடி பழனிசாமியா பிஜேபியுடன் தலையாட்டிப் பொம்மையாக மாறிவிட்டார்?’ என்று நினைப்பதற்கே ஆச்சரியமாக இருக்கத்தான் செய்யும்.
அப்படி என்ன எஸ்.டி.பி.அய். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசினார்?
“எதிர்வரும் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பிஜேபியுடன் கூட்டணியில்லை – வேறு எப்பொழுதும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று முழங்கிய அவர், அடுத்துச் சொன்ன உறுதிமொழி “சிறுபான்மையினருக்கு அஇஅதிமுக எப்பொழுதும் அரணாக இருக்கும்” என்று உத்தரவாதமாகும்.
அந்த மாநாட்டின் அழைப்பிதழில் நாடாளுமன்ற கட்டடத்தின் படத்துடன், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.டி.பி.அய்.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் படங்களும் அழகுற அச்சிடப்பட்டிருந்தன.
அந்த மாநாட்டைத் தொடர்ந்து, பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாத நிலையில் எடப்பாடி, ‘சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினார்’ என்று கருதப்பட்டது. எஸ்.டி.பி.அய். என்ற இஸ்லாமிய அமைப்புடன் கூட்டணியும் தொடர்ந்தது.
2025 மார்ச் 26 வரை இந்த நிலையில் உறுதியாகவே இருந்தார். தம் கட்சி நிர்வாகிகளிடத்திலும் இதனை உறுதியாகக் கூறிக்கொணடே இருந்தார்.
திடீர் திருப்பமாக 2025 ஏப்ரல் 11ஆம் தேதி அஇஅதிமுக தலை குப்புறக் கவிழ்ந்துவிட்டது! பிஜேபியுடன் அ.தி.மு.க. கூட்டணி என்று சென்னையில் உறுதி செய்யப்பட்டது – உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்!
அப்படி முடிவு எடுக்கப்பட்ட அந்த வேளையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமித்ஷா பேசினாரே தவிர, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை – அல்லது அவரைப் பேச அனுமதிக்கவில்லை.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ‘என்.டி.ஏ.’ கூட்டணி தலைமையில் ஆட்சி என்று அறிவிக்கப்பட்டது. ‘முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான்’ என்றும் கூறப்பட்டது.
ஆனால், எடப்பாடிக்கோ அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி, அதில் பிஜேபியும் இடம் பெறும் என்று சொல்ல முடியாத பரிதாப நிலை.
தி.மு.க. ‘இண்டியா’ கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ‘தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி’ என்று உறுதியாக – திட்டவட்டமாக வெளிப்படுத்தியது போல, ‘எடப்பாடி பழனிசாமி அவர்களால் அதிமுக தலைமையில்தான் கூட்டணி’ என்று அறிவிக்கும் திராணியில்லை என்று சொல்லுவதைவிட – உரிமை இல்லை என்று ஆக்கப்பட்டது என்பது தான் துல்லியமான உண்மையாகும்.
இதுதான் தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலோரிடம் பேசப்படும் கருத்தும், விமர்சனமுமாகும்.
இடையில் ‘த.வெ.க.வுடன் அதிமுக கூடடணி’ என்ற பேச்சு அடிப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் தொண்டர் சிலர் த.வெ.க. கொடியை அசைத்துக் காட்டியவுடன், புளகாங்கிதம் அடைந்து, ‘ஒரு பெரிய கட்சி அதிமுகவுடன் கூட்டணிக்கு வருகிறது’ என்று, அடிப்படை புரிதல் இல்லாத அளவுக்குப் பலகீனப்பட்டு ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்.
கொஞ்ச நாட்கள் இந்தப் பேச்சு காகித ஊடகங்கள், மின் ஊடகங்கள் மத்தியில் உலாவந்து கொண்டு இருந்தது. ‘த.வெ.க.வுடன் கூட்டணி ஏற்பட்டால் பிஜேபியுடனான கூட்டணி முறிக்கப்படும்’ என்று கூடப் பேசப்பட்டது.
அதுவும் சில நாள்களில் அரட்டைப் பேச்சோடு முடிந்து விட்டது! முடிவாக அ.தி.மு.க. பிஜேபி கூட்டணியுடன் புதியதாக இணைய எந்தக் கட்சியும் முன்வரவில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
இதுதான் திராவிட மண்ணான – தந்தை பெரியார் பூமியான தமிழ்நாட்டின் கள யதார்த்தம்! பிஜேபி (ஆர்.எஸ்.எஸ்.)யுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் முன்வராது என்பதைத் தெரிந்து கொள்ள எடப்பாடியால் முடியவில்லையா? முடியும் என்றாலும், அதிகார பீடமாக பிஜேபி இருப்பதால் – ஏதோ இடையில் அச்சம் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்ற கருத்து பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
‘மடியில் கனமோ?’ என்றும்கூட தேநீர்க் கடைகளிலும், மரத்தடிகளிலும் உரையாடல் நடந்து கொண்டுள்ளது.
தி.மு.க.வுக்கு அடுத்து பெரிய கட்சியான அஇஅதிமுக, கூட்டணி கட்சியான பிஜேபிக்கு எத்தனை இடம் என்று பேச முடியாத இடத்திற்குத் தள்ளப்பட்டது ஏன்?
ஆளும் திமுக தரப்பில் 26க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தும் நேர்காணல் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கையில், அதைவிட வெகு வேகமாக இப்பிரச்சினையில் ஈடுபட வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுகவின் செயல்பாடு சுணங்கி இருப்பது ஏன்?
பெரிய கட்சியான அதிமுக சுண்டைக்காய்க் கட்சியான பிஜேபியின் தலைமைப்பீடமான டில்லிக்குப் பறந்து பறந்து செல்வானேன்?
மக்கள் மத்தியில் எழுந்த கேள்வியே திமுக கூட்டணியின் வெற்றியை நூறு விழுக்காடு உறுதி செய்துவிட்டது.
மைனஸ் 50 ஆயிரம் வாக்குகளுடன் தேர்தல் களத்தில் இறங்கினேன் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் திரு.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதுதான் நினைவிற்கு வருகிறது!
பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கு உறுதி செய்யப்பட்ட வாக்குகளாகி விட்டன! ஆண்கள் மத்தியிலும் இதுதான் என்ற தாக்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அந்தோ பரிதாபம் – பிஜேபி என்ற பொறியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அ.இ.அ.தி.மு.க.(!).
