சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (19.3.2026) நடைபெற்றது.
பாதுகாப்பு நடிவடிக்கை
மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் கலந்துகொண்டு பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு மய்யங்களின் வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.நிலையான கண்காணிப்புக் குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
‘சி-விஜில்’ (c-VIGIL) மற்றும் ‘சுவிதா’ (Suvidha) செயலிகள் மூலம் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Units) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களின் இருப்பு மற்றும் அவற்றின் தொழில்நுட்ப தயார் நிலை சரிபார்க்கப்பட்டது.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் கூடுதல் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு
அயர்லாந்தில் தவித்த இந்தியப் பயணிகள் டில்லி திரும்பினர்
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு
தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி!
தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி!
புதுடில்லி, மார்ச் 20- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அயர்லாந்தின் ஷானன் நகரில் சிக்கித் தவித்த ஏர் இந்தியா பயணிகள், சிறப்பு விமானம் மூலம் 19.3.2026 அன்று அதிகாலை தலைநகர் டில்லியை வந்தடைந்தனர்.
ரூ.20 ஆயிரம் நிதி உதவி
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தலா ரூ.20,000 நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 16.3.2026 அன்று, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டில்லி நோக்கி 220-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியாவின் ‘ஏ350’ (AI102) ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமானம் உடனடியாக அயர்லாந்தின் ஷானன் நகருக்குத் திருப்பி விடப்பட்டு, அங்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் இரண்டு நாட்களாக அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டது. அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர, சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரிலிருந்து ‘போயிங் 787’ ரக சிறப்பு விமானத்தை ஏர் இந்தியா நிர்வாகம் ஷானன் நகருக்கு அனுப்பியது. புதன்கிழமை மதியம் ஷானன் நகரிலிருந்து இந்தியப் பயணிகளுடன் புறப்பட்ட அந்தச் சிறப்பு விமானம், 19.3.2026 அன்று அதிகாலை டில்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது.
திட்டமிடப்படாத இந்தத் தாமதத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பயணிக்கும் தலா ரூ.20 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்குவதற்கும், மாற்று ஏற்பாடுகளுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
