தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கருத்து வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கியமானதோர் தீர்மானம் முதலமைச்சர் முன் மொழிந்து ஒருமனதாக இன்று (10.4.2023) நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், காலவரையின்றி, தக்க காரணம் இன்றி நிறுத்தி வைப்பதும், திருப்பி அனுப்பாமல் நிறுத்தி வைப்பது என்பது ரத்து செய்வதாகத்தான் பொருள் என்றும் தமிழ்நாடு ஆளுநர் புது விளக்கம் அளித்திருப்பது அரசமைப்புச் சட்ட விதிகளை திரித்துக் கூறும் திரிபுவாதம் மட்டுமல்ல; அது அரசமைப்புச் சட்ட 200 ஆவது பிரிவுக்கு முரண் ஆகும்.
அதுமட்டுமல்ல, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடுப்பு மசோதாவை நிறுத்தி வைத்து, தற்கொலைகள் பெருகும் நிலையில் அவரது ‘ஒத்துழையாமை’ என்பது அவர் எடுத்த பதவிப் பிரமாண வாசகத்தில் கூறிய உறுதிமொழிக்கு நேர் முரணாக உள்ளது!
அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவுபடி,
Oath or affirmation by the Governor.-Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say –
swear in the name of God
“I, A. B., do solemnly affirm that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of………………. (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of ………….. (name of the State)”
இதில் Well being of the people என்பது- ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்பட்டாகவேண்டும்! காரணம், மக்கள் நலனுக்கு விரோதமாக தற்கொலைகள் பெருக, ஆளுநரின் தாமதமோ அல்லது நிறுத்தி வைப்பதோ என்பது நிராகரித்ததாகத்தான் பொருள் என்ற விதண்டாவாதத்தினைக் கண்டித்து சட்டமன்றத்தின் மாண்பையும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவுமான ‘கடிதோச்சி மெல்ல எறியும்’ தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – பாராட்டுகிறோம்!
இனி மக்கள் மன்றத்தை எங்கும் சந்திக்கவேண்டியதே தவிர்க்க இயலாத அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.
ஆளுநர் திருந்தினால் ஜனநாயகம், மக்களாட்சி காப்பாற்றப்படக்கூடும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.4.2023