அவமானம் பெற்றுத் தரும் வெகுமானம் (1)

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆற்றல், ஆளுமைத் திறன், அறிவுச் செறிவு ஏராளம் புதைந்திருந்தும்கூட, அதை அவர்கள் வெளிக் கொணர முதலில் தேவை தன்னம்பிக்கை.

அறிவும், திறனும் எவருக்கும் ஏகபோக உடைமை அல்ல.

மனித மூளையில் புதிய சிந்தனைகளுக்கான ஏராளமான இடம் இன்னமும் பயன்படுத்தாத பகுதியாகத் தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் – குறிப்பாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அங்கே – இடநெருக்கடி ஏதும் இல்லை என்ற நிலையில் புத்தாக்கச் சிந்தனைகளின் ‘படையெடுப்பை’த் தாராளமாக நிகழ்த்தலாமே?

‘அன்பிற்குமுண்டோ தாழ்?’ என்ற கேள்வி போல, அறிவுக்கும் உண்டோ திறனுக்கான இடநெருக்கடி – மனிதனின் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுப் பண்ணையத்தில்?

தஞ்சையிலும், ஏனைய முக்கியப் பெரு நகரங்களிலும் பிரபலமான பெயருடன் உள்ள நிறுவனம் ‘மஹாராஜா’ பட்டு, சில்க்ஸ், ஜவுளி,ரெடிமேட் வகை நிறுவனம்.

அதன் உரிமையாளர் நண்பர் திரு. எம்.எஸ். ஆசிப் அலி அவர்களை  ஒரு துணிக்கடை வியாபாரியாக மட்டும் அறிந்தவர்களுக்கு, இன்ப அதிர்ச்சிக் காத்திருக்கிறது!

அவர் ஒரு நல்ல நூல்களைப் படிப்பவர் மட்டுமல்ல; இலக்கியத் தடாகத்தில் குளித்து மகிழ்பவர் மட்டுமல்ல; நல்ல வாழ்க்கை அனுபவங்களை எழுதி, தனது இன்னல்கள், சோதனைகள் அவமான அனுபவங்களை மற்ற வாசகர்களுடன் பகிர்ந்து ‘அவர்களும் மிகுந்த துணிவுடனும்,தெளிவுடனும் சோதனைகளைச் சாதனைகளாக்கி, வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியுமே’ என்பதற்காக தங்களது வியர்வைத் துளிகள் எப்படி வினைத் திட்பம் மூலம் கிட்டிய வெற்றிக்கனிகளாக பழுத்துப் பயன் தருவதாக அமையும் – அமைய வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு, எழுதி வெளியிட்டுள்ள ‘வளர்ந்த கதை சொல்லவா’  என்ற தலைப்பில் கருத்துக்கும் காட்சிக்கும் நல்ல தீனியாக’ அவர்தன் வாழ்க்கைபற்றிய  நூலை சிறப்பாக எழுதியுள்ளார்.

பல்வேறு அனுபவங்களை – அவரது தந்தை, வாழ்விணையர், குழந்தைகள் கல்வி, வணிக வளர்ச்சி எல்லாம் பற்றி ஒளிவு மறைவின்றி, விறுவிறுப்பாக புதினம் போல் எழுதியுள்ளார்!

அவர்  அனுப்பிய நூலைப் படித்து – பல்வேறு தொடர் பணிகளுக்கிடையில் இளைப்பாற்றிக் கொண்டேன்.

அந்நூலில் 90ஆவது பக்கத்தில் ‘வணிக அனுபவம் முதலில் அவமானமாகத் தொடங்கினாலும் – அதையும் தாங்கி, தாண்டி, தொடர்ந்து சென்றதால் – அதுவே வெகுமானத்திற்குரியதாகி மகிழ்ச்சி மழையைப் பெய்யச் செய்தது என்பதை விவரிக்கிறார். அப்பகுதியை நமது வாசக அன்பர்களின் விருந்துக்கு படைக்கிறோம்.  படித்து – சுவையுள்ள பாடமும் கற்றுக் கொள்ளுங்கள்.

நாம் ஒவ்வொரு பகுதியிலும் ஓர் அறிஞரின் மேற்கோளினை காட்டுவோம். இதில் சற்று வித்தியாசம்!

‘‘ஒருவருடைய வெற்றிக்கு முன்னால்

வேண்டுமானால்

பரிசும் பாராட்டும் இருக்கலாம்.

அந்த வெற்றிக்குப் பின்னால்

நான்தான் இருக்கிறேன்

– இப்படிக்கு அவமானம்!

இதுவே ஒரு புதுமை! மிக அருமை!!

மேலும் படிப்போமா?

‘மூத்தோர் சொல் அமிர்தம்…’ என்ற ஒரு தலைப்பில்…

1989-இன் இளைஞர்கள் வாழ்க்கையை இப்போது இருக்கும் இளைஞர்களுடன் ஒப்பிடவே முடியாது.

பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் கட்டுப்பட்ட நிலையில்தான் எங்கள் காலத்து இளைஞர்கள் இருந்தோம். அதுவும் தொழில் சார்ந்து இயங்குகிற குடும்பங்களில் ‘மூத்தோர் சொல் அமிர்தம்’ என்னும் முதுமொழி எப்போதும் நடைமுறையிலேயே இருக்கும்.

எங்களை விட சிறிது மூத்தவராக இருந்தாலும் வீட்டுப் பெரியவர்களில் ஒருவராகவே எங்கள் மைத்துனர் திரு. ஜியாவுதீன் திகழ்ந்தார். அன்பும் உரிமையும் மரியாதையும் ஒருங்கே கலந்த அணுகுமுறையில் தான் அவருடன் பழகுவேன்.

‘மஹாராஜா’ ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு ஜவுளிப் பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக மும்பைக்கு- (அப்போதைய பம்பாய்க்கு) – அவர் தலைமையில் தான் முதல்முறையாக சென்றேன்.

அவரும் நானும் மட்டும் செல்லாமல் ஏறக்குறைய என்னுடைய வயதில் இருந்த ஆறு ஏழு பேர்கள் ஓர் அணியாக இணைந்து புறப்பட்டோம். அப்போதெல்லாம் இப்போது இருக்கும் அளவு ஒன்றரை மணி நேரத்தில் பறந்து போய் சேர விமான வசதிகள் அவ்வளவாக இல்லை. விமானங்கள் இருந்தாலும் எங்களுக்கு அவ்வளவு வசதி இல்லை.

எனவே ஒரு குழுவாக கிளம்பி இரண்டரை நாட்கள் பயணம் செய்து மும்பை சென்று சேர்வோம். இங்கிருந்து வேண்டிய உணவுகளை தயார் செய்து கொண்டு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு உற்சாகம் நிரம்பிய உல்லாசப் பயணமாக தான் அத்தகைய பயணங்களை மேற்கொண்டோம்.

இயல்பான உரையாடல், இணையான வயது நண்பர்கள், இதில் சில மாணவர்களும் இருந்தார்கள். அவர்கள் அவ்வப்போது பாடம் படித்துக் கொண்டே வருவார்கள். இங்கிருந்து தயார் செய்து கொண்டு சென்ற உணவு பயணத்தில் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக ராட் ஊறுகாய் என்று ஒன்று.

சுவையை மறக்கவே இன்றும் அதன் தனித்தன்மை வாய்ந்த முடியவில்லை. வீட்டில் இப்போது சாப்பிட்டாலும் கூட அந்த ரயில் குலுக்கம் தானாகவே உடம்பில் வந்து விடுகிறது.

எங்கள் அணியின் தலைமை பொறுப்பை முழுமையாக ஏற்றவர் மைத்துனர் திரு. ஜியாவுதீன்.

ஒரு ரயிலுக்கு இருக்கும் இன்ஜின் போல் அவர். இணைக்கப்பட்ட பெட்டிகளாய் நாங்கள். ரயிலுக்குள் ஒரு ரயில் மாதிரி தான் எங்கள் குழு இருக்கும்.

மும்பை போய் இறங்கியதும் கல்பாதேவி என்கிற பகுதியில் சாரதா லாட்ஜ் என்னும் தங்கும் விடுதிக்கு மைத்துனர் அழைத்துப் போவார். அங்கு தான் தங்கியிருப்போம். காலை உணவு சாப்பிட்டு விட்டு மெரின் லைன் என்னும் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிக் கிளம்புவோம்.

அன்றும் சரி, என்றும் சரி, மும்பை உள்ளூர் ரயிலில் பயணம் செய்வது வீர தீர சாகசங்கள் நிரம்பிய அனுபவம். குளித்து முடித்து அழகாக உடை உடுத்தி ரயிலில் ஏறினால் நெரிசலில் ஆலையில் அகப்பட்ட கரும்பாக மாறி கசங்கி பிதுங்கி இறங்க வேண்டிய இடத்தில் துப்பப்படுவோம் – சக்கையாக.

கடையில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்தும் கல்லாவில் உட்கார்ந்தும் பழகிய எனக்கு ஜவுளித்துறை என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்ததே கொள்முதலுக்கான இந்தப் பயணங்கள் தான்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *