‘‘திருவனந்தபுரம் கேரளாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் ஹிந்து ஒற்றுமை கருத்தரங்கில்’ கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத், ஹிந்துக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நமது முன்னோர்கள் நமது சூழலுக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு ஆடைகளை வடிவமைத்துள்ளனர். அந்த ஆடைகளே நமக்கு ஒரு மேன்மையான தோற்றத்தைத் தரும். மாறாக, மேற்கத்திய உடைகள் குளிர்பிரதேசங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டவை. அவற்றை நமது சூழலில் தவிர்ப்பது நல்லது. அனைத்து இந்துக்களும் நமது பாரம்பரிய உடைகளை அணிய முன்வர வேண்டும்.
நமது ஆன்மிக உணர்வை மேம்படுத்தக்கூடிய மற்றும் ஆரோக்கியம் அளிக்கக்கூடிய உணவுகளையே நாம் உட்கொள்ள வேண்டும்.
ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்து. நமது பாரம்பரிய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்திலிருந்து விடுபட்டு நமது பாரதப் பாட்டைப் பின்பற்றுவதே உண்மையான ஒற்றுமைக்கு வழிவகுக்கும்’’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இப்படி எல்லாம் நீட்டி முழங்குகிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் எந்த மொழியில் பேசினார் என்பது தான் முக்கியம்! இந்தியில்பேசினாலும் ஆங்கிலத்தில் ஏன் மொழி பெயர்த்தனர்?
எந்த உடை அணிந்து கொண்டு பேசினார் என்பது அதைவிட மிகவும் முக்கியமாகும்!!
பாரம்பரிய உடை என்பது வேஷ்டியே! – பார்ப்பனர்களோ ‘பஞ்ச கச்சம்’ என்ற முறையில் வேஷ்டி கட்டுவார்கள். பாதித் தொடை வெளியில் தெரியும்!
பார்ப்பனப் பெண்கள் புடவை கட்டும் முறைக்கு ‘மடிசார்’ என்று கூறப்படும் ஒன்பது கஜம் கொண்டதாகும்.
முதலில் இந்து மதத்தில் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்தப் பார்ப்பன வகையறாக்கள் இந்த முறையில் உடைகளை அணிய முன் வரட்டுமே பார்க்கலாம்!
ஆங்கிலேயர்களின் ‘கிராப்’ முறையைத் தூக்கி எறிந்து விட்டு, குடுமி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே!
இந்தியாவில் ‘இந்துப் பண்பாடு’ என்ற ஒன்று இருக்கிறதா? ஒவ்வோர் மாநிலத்துக்குள்ளும் வெவ்வேறு வாழ்க்கை முறைதானே!
மாநிலத்துக்கு மாநிலம் எத்தனையோ முரண்பாடுகள் உண்டே!
மேற்கு வங்காளத்தில் வாழும் பார்ப்பனர்களுக்கு அன்றாடஉணவே பெரும்பாலும் மீன் தானே! மகாராட்டிரத்தில் குறிப்பிட்ட பார்ப்பனர்கள் (கொங்கனி) மீன் சாப்பிடுவது சர்வ சாதாரணம். அசாமில் மீன், இறைச்சியும் அவர்களின் உணவு முறையே! அதனால்தான் அவர்கள் மச்சாபிராமின் என்று அழைக்கப்படுகிறார்கள் (மச்சம் மீன்)
இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவரே நாடாளுமன்றத்தில் தம்மைப் பற்றிச் சொல்லும் பொழுது ‘பூண்டு, வெங்காயம் சாப்பிடாத பரம்பரை’ என்று சொல்லவில்லையா? (4.12.2019).
இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பேசினாரா?
‘ஆங்கிலத்தில் பேசக் கூடாது’ என்று கூறும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘ஆங்கிலம் படிக்கக் கூடாது’ என்று சொல்வாரா?
வாழ்க்கை நடைமுறை – ஆட்சிமுறை நிர்வாகம் எல்லாம் மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவிலும் மேற்கத்திய நாடுகளின் நாகரிகத்தோடு சங்கமம் ஆனபிறகு – இப்படி எல்லாம் பேசுவது யதார்த்தத்திற்கு முரணானது என்பது மட்டுமல்ல – காலத்திற்கும் ஒவ்வாததே! இதன் மூலம் ‘ஆர்.எஸ்.எஸ். என்பது காலத்துக்கு உதவாத புறந்தள்ளப்பட வேண்டிய ஓர் அமைப்பு’ என்பது வெளிப்படை!
