கடந்து வந்த காட்டாற்றுப் பாதை, எதிர்ப்பு மலைகள் கொஞ்சநஞ்சமல்ல! தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் குறிப்பிட்ட எல்லையை எட்டியுள்ளோம்!

14 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு இன்று (18.3.2026) தொடங்குகிறது!
‘திராவிடத்தை வெல்ல எவராலும் முடியாது’ என்னும் நிலையை உருவாக்குவோம்!

‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழகத் தலைமைப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு தொடங்குகிறது! ‘திராவிடத்தை வெல்ல எவராலும் முடியாது’ என்ற நிலையை உருவாக்குவோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

பேரன்பிற்குரிய எனது அருமை கொள்கைக் குருதி உறவுகளே,,

பாசத்திற்குரிய பகுத்தறிவு, இன, மொழி, பண்பாட்டுப் பாதுகாவல் நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு பொங்கும் வணக்கமும், வாழ்த்துகளும்!

நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை ­பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்தும், அதன் பின் தனது நலிவடைந்த உடல்நலத்தையும் பொருட்படுத்தாது, தொடர் தூய தொண்டறத்தால், நம் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைமையேற்று, 4 ஆண்டுகாலம் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை – அவர்கள் போட்டுத் தந்த பாதையில், இம்மியளவும் நகராமல், அய்யாவைப் போலவே தனது சொத்துகளையும், முன்பே ‘சுகங்களை’யும் விட்ட அய்யாவின் அணுக்கத் தொண்டராகவும், பாதுகாத்த காவல் செவிலியராகவும், கடமையாற்றும் பெரியார் தொண்டராகவும் தொடர்ந்து – எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், நெருக்கடி காலம் என்ற ஓர் இருண்ட காலத்தினையும் எதிர்கொண்டு, நின்று, வென்று காட்டிய நம் தலைவர் அன்னை, தன் தோள்கள்மீது சுமந்த இயக்கப் பொறுப்புகள், நிறுவனங்களின் பொறுப்புகள் போன்ற பல பொறுப்பு களை பெரியாரின் வாழ்நாள் மாணவனான இந்த எளியவனைச் சுமக்கச் சொல்லி, நம்பிக்கையுடன் விட்டுச் சென்றார்!

ஆம்! இந்தக் ‘‘குருவி’’த் தலையில், அந்தப் பனங்காய்களைச் சுமக்கச் செய்துவிட்டார்; என்றாலும், இந்தக் குருவி, தந்தை பெரியார் என்ற பலம் பொருந்திய போர்ப் படைத் தலைவனின் தோள்மீது அல்லவா அமர்ந்துள்ளது. எனவே, அதற்கு எப்படி ‘‘பாரம்’’ ஆகும்? என்ற தன்னம்பிக்கையோடு, தளர் நடையின்றி, வீறுநடை போட வைத்தீர்கள் – இயக்கக் கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நீங்கள் அனைவரும்!

சிக்கல்களும், சவால்களும் படமெடுத்தாடி, பய முறுத்தி, பயணப் பாதையைக் கடினமாக்கின.

என்றாலும், ‘பெரியார் தந்த புத்தி’யுடன் எதிர்கொண்டு நின்று, வென்று வருகிறோம் மக்கள் தம் பேராதரவுடன்!

தந்தை பெரியார் அவர்களது அரிய அனுபவ அறி வுரைகளில் ஒன்று, ‘‘எவனொருவன் சுயநலமின்றி, ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், இலட்சியங்க ளுக்காகப் போராடுகிறானோ, அவன் இறுதியில் வெற்றி பெற்றே தீருவான்’’ என்ற மூதுரையாகும்!

அதன்வழி நிற்கிறேன்! நிற்கின்றோம், அனைவரும்!

அய்யா – அன்னையாரின் காலத்தில், கழகத்தினாலும் அய்யாவினாலும் விளம்பரமும், பதவிப் பொறுப்புகளும் பெற்றவர்கள் சிலரால், வருமான வரித்துறை ஆயுதம் திட்டமிட்டே ஏவப்பட்து. ‘தந்தை பெரியார் இருக்கும்வரை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும், அவரது முடிவுக்குப் பின்னால் எல்லாம் முடிந்துவிடும்’ என்ற திட்டத்துடன் இயங்கி, அய்யா காலத்தில், அய்யா தொடங்கிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அறக்கட்டளையாக அங்கீகரிக்க மறுத்ததோடு, 15 லட்சம் ரூபாய் அபராதம் என்றெல்லாம் போட்டு, அன்னையார் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின், ரூ.60 லட்சத்திற்கு வரி மேல் வரி போட்டு, அன்னையாருக்குப் பிறகு நான் பொறுப்பேற்ற (1978) காலகட்டத்தில், ரூ.80 லட்சம்வரை வரி என்று சொல்லி, நிறுவனத்தையே அழிக்கப் பெரு முயற்சிகள் – வழக்குக்குமேல் வழக்குகள் எல்லாம் வந்தபோதும், தக்க வகையில், தக்க சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகள், மூத்த வழக்குரைஞர் வாதுரைகள் மூலம் வென்று, 80 லட்சம் ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்ய வைத்தோம். இது சட்டப்படி ஓர் அறக்கட்டளையே என்ற அங்கீகாரம் பெற்று, முக்கியமான முதல் களத்தில் வென்று, நமது இயக்கம் வெறும் மணல் குவியல் அல்ல; கற்பாறை என்பதை, கொள்கை எதிரிகளும் விளங்கும்படிச் செய்தோம்.

இது ஒரு தனி மனிதச் சாதனை அல்ல; பல்வேறு சட்ட அறிஞர்களின் ஆலோசனை, அறிவுரைகள்மூலம் கிடைத்த ‘‘மெகா பரிசு!’’

ஜஸ்டிஸ் வேணுகோபால், உத்தம் ரெட்டி என்ற வருமான வரித் துறை வழக்கு வல்லுநர் போன்றோர், ஓய்வு பெற்ற பிறகு, இறுதிவரை நமக்குக் கிடைத்த மதியுரைஞர் அய்யா எஸ்.இராஜரத்தினம் போன்ற மூதறிஞர்களின் பேருதவி, பெரும் அறிவுரைமூலம், முறைப்படி, குற்றங்குறையின்றி, ஆளுமையுடன் சீரிய பாதையில் பழுதின்றி அப் பணி தொடர ஆவன செய்து காப்பாற்றி வருகிறோம்.

கல்வி நிறுவனங்கள் பலவும் நாகம்மையார் குழந்தை கள் இல்லம் ‘ஆல்போல தழைத்து, அருகுபோல்’ வேரோடி, சிறப்பான அர்ப்பணிப்பான ஊழியத் தோழர்க ளின் ஒருங்கிணைப்போடு, ஒத்துழைப்போடு மிகச் சிறப்புடன் நடைபெறுகிறது.

அய்யாவின் சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா வினைத் (50 ஆம் ஆண்டு) தஞ்சையில், அன்னையாரின் தலைமையில் நடத்தினோம். சில ஆண்டுகளுக்கு முன் – சுயமரியாதை முதல் மாகாண மாநாடு நடந்த செங்கற்பட்டு மண்ணிலே, 80 ஆம் ஆண்டு விழாவை அன்றைய முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் நடத்தினோம். சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆம் ஆண்டு நிறைவு மாநாட்டிற்குத் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பேருரை மிகச் சிறப்பான வரலாறு படைத்தது!

1978 முதல் 2026 ஆம் ஆண்டுவரை – கடந்த 48 ஆண்டுகால இயக்க, இலட்சியப் பயணம் – பல தளங்களில், களங்களில் எப்படியெல்லாம் நடந்தது என்பதற்கான ஒரு பருந்துப் பார்வை இதோ:

1978 முதல் 2026 வரை –
48 ஆண்டுகாலப் பயணம்:

இயக்கம்

அய்யாவையும், அன்னையாரையும் இழந்து நின்ற திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைத் தோழர்களைக் கட்டுக்கோப்புடன் வழிநடத்தி, அய்யாவும், அம்மாவும் விட்டுச் சென்ற பணிகளை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் செய்து முடிக்க உறுதியேற்றுச் செயலாற்றத் தொடங்கினோம் – தொடர்கிறோம்.

இயக்கத்தின் செயல்பாட்டை நிறுத்தவும், இடையூறு செய்யவும் எத்தனையோ முயற்சிகள் நடந்தபோதும், அவற்றைப் புறங்காண வைத்து, வெற்றி வாகை சூடி, எப்போதும் களத்தில் நிற்கும் போராட்ட இயக்கமாகவே கழகத்தைப் பெரியார் தொண்டர்களின் பேராதரவுடன் நிலைநிறுத்தியிருக்கிறோம்.

காலத்தின் தேவைக்கேற்ப திராவிடர் கழகத்தில் மகளிரணி, இளைஞரணி, திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை, பெரியார் சமூகக் காப்பு அணி, திராவிட மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தகவல் தொழில்நுட்பக் குழு போன்ற புதிய அணிகளைத் தோற்றுவித்து, அவ ரவர்க்கான செயல்திட்டங்களை வழங்கி, துறைதோறும் இயக்கப் பணிகளை வலுப்படுத்தியிருக்கிறோம்.

கழகத்தின் மூத்த பொறுப்பாளர்கள் வழிகாட்ட, இளைய தலைமுறை செயல்படும் வகையில் 1982 முதலே ஒவ்வொரு கட்டத்திலும் இளைஞர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவந்து பயிற்றுவித்து, இயக்கத்தை இளமைப் பொலிவுடன் இயங்கும் தன்மையில் வைத்திருத்துள்ளோம். பெரியார் பிஞ்சுகள் முதல் நூற்றாண்டு கடந்த ‘இளைஞர்கள்’ வரை மாநாட்டில் சந்திக்கும் உறவு இயக்கம் வேறு எது?

சமூகநீதி

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் 9000 ரூபாய் வருமான உச்சவரம்பு என்னும் ஆணையைக் கடுமையாக எதிர்த்து முறியடித்ததுடன், 31% ஆக இருந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தக் காரணமானது திராவிடர் கழகம்தான். (இதன் மூலம் 49% என்னும் மாயக் கோட்டை உடைத்து நொறுக்கிப் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி, மேலும் 19% இடஒதுக்கீடு அதிகமாகியது. பின்னர் பழங்குடியினருக்கான 1% சேர்த்து 69% சதவீதமாக நிலைத்தது.)

ஒன்றிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்னும் நிலையை மாற்றும் வகையில் கிடைத்த அரிய வாய்ப்பாம் ‘மண்டல் கமிஷன்’ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, தமிழ்நாட்டிலும், வடபுலங்களிலும் அனைத்துத் தலைவர்களையும், இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, தொடர்ந்து 16 போராட்டங்களையும், 42 மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி 1990 இல் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசின் மூலம் ஒன்றிய அரசை ஏற்கச் செய்தது. பல்வேறு வழக்குகளைக் கடந்து 1993 இல் வேலைவாய்ப்பிலும், 2006 இல் கல்வித் துறையிலும் (93 ஆம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்) பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீடு வருவதற்குக் கழகம் காரணமாக அமைந்தது.  அரசியலமைப்புச் சட்டத்தில் 15(5) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் பயன் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வைப் போராடி ஒழித்தோம் – முத்தமிழறிஞர் கலைஞர் துணையுடன்!

“தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு என்பது தனித்தன்மையானது!”

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஆபத்து நேர்ந்தபோது, அதனைத் தடுக்கத் திராவிடர் கழகம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பலனாகத் தமிழ்நாடு அரசின் மூலம் (இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 31– சி பிரிவைப் பயன்படுத்தி) தனிச்சட்டம் இயற்றப்பட்டு, அச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் 9 ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டு, இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. இன்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில், “தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீடு என்பது தனித்தன்மையானது” என்று குறிப்பிடக் கூடிய வரலாறு உருவானது. (76 ஆவது சட்டத் திருத்தம்).

இடஒதுக்கீட்டுக்கான பிரச்சினைகள் எவை எழுந்தாலும் அதனை விழிப்போடு கண்காணித்து முதல் குரல் எழுப்பும் கழகம், அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து அப் பிரச்சினை தீரும் வரை களத்தில் நின்று பணியாற்றுகிறது. ஒன்றிரண்டு அல்ல.. அதற்கு ஏராளமான நிகழ்வுகள் சான்றுகளாகும்.

பிற மாநிலங்களும், பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்ற நோக்கில் நம்மை அழைத்து கருத்துக் கேட்பது தொடர் நிகழ்வாகும்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகுதல், பிறவி இழிவு ஒழிப்புப் போரின் முக்கியக் கட்டமல்லவா? தந்தை பெரியார் ‘‘நெஞ்சில் தைத்த அந்த முள்ளை’’ அகற்றும் முயற்சியில் ஏறத்தாழ 48 ஆண்டுகள் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியோரின் உறுதியான முன்னெடுப்புகளால் வென்றோம் என்பதை நினைத்தாலே, அது நெகிழ்ச்சி தரும் ஒன்றாகும்.

தமிழர் இன, மொழி, பண்பாட்டுக் காப்பு

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாட்டுக் களமான தமிழ்நாட்டின் உரிமைக்கு எந்தக் குறைவு நேர்ந்தாலும் தந்தை பெரியார் காலம் தொட்டே அவ் வுரிமைகளை மீட்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. 1937 இல் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், 40 ஆண்டுகள் கடந்த பின்னும் 1980–களிலும் நிகழ்ந்தது – இன்றும் தொடர்கிறது! எல்லா கட்டங்களில் ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்புக்கு எதி ரான கருத்துக் களம், பிரச்சாரக் களம், போராட்டக் களம் ஆகியவற்றில் முன்னின்று, வழக்குகள், சிறைகளைக் காணும் இயக்கமாக நாம் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். பெரியார் கொடுத்த தார்ச் சட்டி இன்னும் நம் கைகளில் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

காவிரி நதிநீர் பிரச்சினைக்குச் சரியான தீர்வை முன்மொழிந்தது நாம் தான். நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரியது முதல், அது நிறைவேறுவதற்கான போராட்டங்கள் வரை, இன்று நிலைநாட்டப்பட்டிருக்கும் உரிமைக்குக் கருஞ்சட்டைகள் பாதை அமைத்தன.

தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் உரிமையும், உயிர்களும் பறிக்கப்பட்டு, இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தபோது, எதனைவிடவும் நம் இனம் காக்கும் பணி முக்கியம் என்ற நோக்கில், தொடர்ந்து எல்லா வகையான அறப் போராட்டங்களிலும், பிரச்சாரத்திலும் உறுதியாகவும், தளராமலும் நின்ற – நிற்கின்ற இயக்கமாகவும், இறுதிவரை களத்தில் நின்ற போராளிகளைத் தொடக்கத்திலேயே சரியாக அடையாளங்கண்டு ஆதரித்த இயக்கமாகவும் நம் கடமையை ஆற்றினோம். அதனால், இயக்கத்திற்கு எத்தனை இடர்கள் வந்தபோதும், சட்டரீதியாக அவற்றை எதிர்கொண்டு, அறப் பணியைத் தொடர்ந்தோம்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தமிழ் எழுத்துகளில் திணிப்பு -திரிப்பு முயற்சிகளைத் தடுத்தல், தை முதல்நாள் – தமிழ்ப் புத்தாண்டுக்கான போராட்டங்கள், தமிழுக்கும், தமிழருக்கும் தீங்கு நேரவிருந்த சமயங்களில் எல்லாம் தலைகொடுத்துத் தடுத்து நிறுத்துதல், தமிழர் பண்பாட்டு விழாக்களை மீட்டமைத்தல், ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கெதிரான தொடர் செயல்பாடுகள் போன்ற எண்களால் கணக்கிடமுடியாதவை; திறத்தால் இன்றும் நாளையும் அனுபவிக்கப்படுபவை.

பெரியார் உலகமயம்

அறிவாசான் பெரியாரின் சிந்தனைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவையல்ல; அவற்றை மொழி, மாநில, தேச எல்லை கடந்து உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பில், அய்ரோப்பா, அமெரிக்கா, ஆசியாவின் பிற நாடுகள், ஆப்பிரிக்கா என 5 கண்டங்களில் அடித்தளமிட்டிருக்கி றோம்.

மேற்கில் கனடா முதல் கிழக்கில் ஜப்பான் வரை, வடக்கில் ரஷ்யா தொடங்கி தெற்கில் ஆஸ்திரேலியா வரை பெரியாரின் குரல் ஒலிக்கிறது. பெரியாரின் தேவை உணரப்படுகிறது.

பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளை விவா திக்கும் நான்கு பன்னாட்டு மாநாடுகள் மூன்று கண்டங்களில் நடத்தப்பட்டுள்ளன.

உலக மனிதநேய அமைப்புகளின் கூட்டமைப்பில் (IHEU) திராவிடர் கழகம் ஓர் அமைப்பாக இணைக்கப் பட்டது (6.7.1994). ‘மக்கள்  இயக்கமாகச் செயல்படும் உலகின் மாபெரும் நாத்திக இயக்கம் – திராவிடர் கழகம்’ என அக் கூட்டமைப்பின் தலைவர்களே வந்து பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.

நமது முயற்சியினால் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானியம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்ன டம், ஒடியா, பஞ்சாபி, வங்காளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும், அண்மைக்காலத்தில் ‘திராவிட மாடல்’ அரசின் முன்னெடுப்பால் கூடுதலாகப் பல மொழிகளிலுமாக மொத்தம் 21 மொழிகளுக்கும் மேலாகப் பெரியாரின் சுயமரியாதை எழுத்துகள் ‘திராவிட மாடல்’ அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் உலகாளுவார் பெரியார்!

தமிழ்நாட்டில் உள்ள சமூகநீதிச் சிந்தனையாளர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த சமூகப் புரட்சியாளர்களின் இயக்கங்களுடன் இணைந்து, அத் தலைவர்களின் கொள்கைகளை, சிறப்புகளைத் தமிழ்நாட்டிலும், தந்தை பெரியாரின் சிறப்புகளை வடபுலத்திலும் உணர வைத்து, மதவாத எதிர்ப்பில் – சமூகநீதித் தளத்தில் இந்தியாவின் நம்பிக்கை அடை யாளமாகத் தந்தை பெரியாரை எல்லா இடங்களிலும் சேர்த்திருக்கிறோம்.

பெரியார் கொள்கை பரப்பும் ஊடகங்கள்

‘விடுதலை’ நாளேட்டை, வார ஏடாகத் திருச்சியி லிருந்தோ, ஈரோட்டிலிருந்தோ நடத்திடலாமா என்று யோசிக்கும் அளவுக்குப் போய்விட்டேன்’ என்று மனம் வருந்திய சூழலில், எம்மை அழைத்து ‘விடுதலை’யின் பொறுப்பை ஏற்கக் கட்டளையிட்டார் நம் தலைவர் தந்தை பெரியார். ‘பெரியார் பணியே எம் வாழ்நாள் பணி’ என்று அதனை ஏற்று, 64 ஆண்டுகளாக அதன் ஆசிரியர் பணியைத் தொடர்ந்து வரும் இடர்களையும் எதிர்கொண்டு, ஒரு நாளும் இடைவிடாமல் செய்து வருகிறோம்.

நான்கு பக்கங்கள் – இன்று எட்டு பக்கங்கள்; அதிலும் இரண்டு வண்ணப் பக்கங்கள்!

சென்னைப் பதிப்புடன் திருச்சியில் மற்றுமோர் அச்சுப் பதிப்பு; தவிரவும் உலகெங்கும் செல்லும் இணையப் பதிப்பு என மூன்று பதிப்புகள்.

தமிழ் நாளேடுகளில் முதல் இணைய ஏடு (Website), முதல் மின்னிதழ் (E-Paper), ஒருங்குறியை (Unicode) அமல்படுத்திய முதல் ஏடு, பல லட்சக்கணக்கில் படவடிவக் கோப்புகளை (PDF) இலவசமாகப் பரப்பும் ஒரே ஏடு, பி.டி.எப்.பிலிருந்தே இணையப் பக்கத்திற்குச் செல்லும் வசதி (Link PDF) என பிரச்சாரப் பணிக்கு முன்னுரிமை!

தந்தை பெரியார் தொடங்கிய ‘உண்மை’ ஏட்டை யும், ‘The Modern Rationalist’ ஆங்கில ஏட்டை யும், பொன்விழாக்களையும் கடந்து தொடர்ந்து நடத்தி வருவதுடன், ‘பெரியார் பிஞ்சு’ என்னும் குழந்தைகளுக்கான ஏட்டைத் தொடங்கி வெள்ளிவிழாவையும் கடந்து அதனையும் நடத்தி வருவதும் நமது இடைவிடாத தொடர் ஓட்டத்தின் மைல்கற்கள்!

புதிய ஊடகங்களின் வரவுக்கு ஈடுகொடுக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குத் தேவையான வகையில் தொலைக்காட்சிகளில் “பெரியார் நேரம்”, நெடுங்காலமாகச் செயல்படும் தமிழின் மூத்த யூடியூப் சேனலாக “பெரியார் வலைக்காட்சி”, இணையதளங்களின் வழியே “பெரியார் பண்பலை” ஆகியவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இணைய தளங்கள்.

கொள்கைப் பூர்வமாகச் சமூகநீதியை முன்னிறுத்தும் உலகின் முதல் ஓடிடி(OTT)யாக “பெரியார் விஷன்”.

ஆயிரத்தைத் தொடும் புத்தக வெளியீடுகள் – அவற்றைக் கொண்டு சேர்க்க நாடெங்கும் புத்தகக் கடைகள் – பெரியார் புத்தக ஊர்திகள் – புத்தகக் கண்காட்சிகள்!

அரசியல் தளத்தில்…

வாக்கு அரசியலில் நாம் நேரடியாக ஈடுபடா விட்டாலும், யார் தமிழ்நாட்டை ஆள வேண்டும், யார் ஆளக் கூடாது என்பதைச்  சரியாக முடிவெடுக்கவும், மக்களுக்குச் சரியாக அடையாளம் காட்டவும் கூடிய அமைப்பாகத் திராவிடர் கழகம் தொடர்ந்து கடமை யாற்றுகிறது – உரியோரை அரசேற்க வைக்கிறது.

சமூகநீதி, மதச்சார்பின்மை, பாசிச எதிர்ப்பு, ஜன நாயக உரிமைகள் காப்பு, மாநில உரிமை என பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, தேர்தல்களில் திராவிடர் கழகம் முடிவெடுக்கிறது. தமிழ்நாட்டில் இவை அனைத்துக்கும் எதிரான பாரதிய ஜனதா ஆதரவுக் கூட்டணி எதுவும் வந்துவிடக் கூடாது என்னும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவருவது திராவிடர் கழகத்தின் தனித்தன்மை!

‘வழிகாட்டும் இடமாகப்
பெரியார் திடல்’ திகழ்கிறது!

இதற்காகத் திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள பல்வேறு இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி, உரியோர் தலைமையில் அரசியல் களத்தில் நிற்கச் செய்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொல்வதுபோல், ‘வழிகாட்டும் இடமாகப் பெரியார் திடல்’ திகழ்கிறது.

தமிழ்நாட்டுக்கும், சமூகநீதிக்கும் எந்தப் பிரச்சினை என்றாலும் பனிப் பாறையின் முனையைக் கண்டு, அதன் ஆழம் வரை ஆய்ந்து, ஆபத்தை முன்கணித்துக் கப்பலைச் செலுத்தும் மீகானைப் போல், (கப்பல் தலைவர்) நொடிப் பொழுதும் அயராது, அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் மூலம் செயல்பாடுகளை முடுக்கிவிடும் பணியைக் கழகம் தவறாது ஆற்றுகிறது. அதன் முக்கியத்துவம் கருதி அனைத்து இயக்கங்களும் நம்மோடு இணைந்து செயலாற்ற முன்வருகிறார்கள் என்பது தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி தானே!

திராவிடர் கழகம் உருவாக்கும் இந்த ஒருங்கிணைப்பு இந்திய அளவில் முன்மாதிரியாகத் திகழ்கிறது அல்லவா?

இப்படி நாம் கடந்த பாதைகளும், பெற்ற வெற்றிகளும் ஏராளம்! இன்னும் நாம் முழுமை அடையவில்லை – இது ஒரு சிறு அளவே!

‘‘தேர்தல் பணிகள் முடிந்த பிறகுதான் நமது தீவிரக் கொள்கைப் பிரச்சாரம் பிரவாகமாக நாடெங்கும், உலகெங்கும் பாய்ந்திட, ‘‘தீவிரப் பிரச்சாரத் திட்டம்’’ (பகுத்தறிவு, ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை தகர்த்தல், மகளிர் உரிமை காத்தல், நமது மக்களின் அன்றாட வாழ்வுரிமைப் பிரச்சினைகள் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை முன்னிலைப்படுத்தி, தொய்வின்றி தொடர் பிரச்சாரத் திட்டங்கள்) நாமும், கழகப் பரப்புரை களத் தோழர்களோடு நடத்தியும், தேவைப்படும் அறப்போர்களை அவ்வப்போது தொடரவும்,

இளைஞர் எழுச்சிக் களம்,

மகளிர் உரிமைக் காப்புப் பணி,

வேளாண் மக்களின் உரிமைகளைமுன்னிறுத்தி, பண்பாட்டுப் படையெடுப்புகளிலிருந்து நாட்டைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை, தொடர் பணிகளாய், அடைமழையாய் நடத்திடும் திட்டம் தொடரச் செய்வோம்!

இயங்கிக் கொண்டே இருப்பதால்தான், அது இயக்கம்!

மறவாதீர், கடமைகளைத் துறவாதீர்!

இராணுவப் பணியல்லவா, நம் பணி!

சமூகம், பொருளியல், அரசியல் என நம் மக்களின் உரிமைப் போரில், நின்று வென்று காட்டவேண்டிய தளங்களும், களங்களும் ஏராளம் பாக்கி இருக்கின்றன!

எப்போதும் நாம், இன எதிரிகள் – கொள்கை எதிரி களின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு ஏமாந்து போகி றவர்கள் அல்லர்; மாறாக, எதிரிகளே ஏமாந்து போகும் வண்ணம், சுயநலமற்ற உழைப்பாலும், பிடிப்புள்ள களப் பணியாலும், தியாகம் வழியும் தொண்டறத்தாலும் வருகின்ற 2026 தேர்தலில், 110 ஆண்டுகளுக்குமுன் பிறந்த நீதிக்கட்சி என்ற இயக்கம், பரிணாம வளர்ச்சி பெற்று, சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்துக் கொண்டு, ‘திராவிடர் கழக’மாகி, அதன் இன்றைய கொள்கை அரசியல் செயலூக்கியான தி.மு.க. – ‘திராவிட மாடல்’ ஆட்சி, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய ஒப்பிலா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய நீட்சியைத் தொடர, நம் மூச்சினையும் அர்ப்பணிக்கத் தயார் என்றும் உறுதியேற்று, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாது’ – பெரியார் நாடான, திராவிட, சமூகநீதி மண்ணைக் காக்கும் ஆட்சியை மீண்டும் நிறுவி, சுயமரியாதை பொங்க பெருவெற்றியை ஈட்டிடச் சூளுரைப்போம்!

‘திராவிடத்தை வெல்ல எவராலும் முடியாது’ – இதுவே நம் சூளுரை!

அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றிகள்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை   

18.3.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *