சென்னை, மார்ச் 18– சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்தியப் பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மத்திய தேர்தல் பார்வையாளர்கள்
தேர்தல் நடைபெறவுள்ள 832 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 557 பொதுப் பார்வையாளர்கள், 188 காவல் துறைப் பார்வையாளர்கள், 366 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கு 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் துறைப் பார்வையாளர்கள், 151 செலவினப் பார்வையாளர்கள் என மொத்தம் 327 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளுக்கு 17 பொதுப் பார்வையாளர்கள், 4 காவல் துறைப் பார்வையாளர்கள், 17 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 18-க்குள் (இன்று) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் தங்களுடைய தொடர்பு விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதோடு, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்துத் தேர்தல் தொடர்பான குறைகளைக் கேட்டறிய, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
