மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை!
2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன்பு பல தேர்தல் காலங்களில் நடந்ததுபோல, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கவேண்டியதில்லை என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் திருமிகு.அர்ச்சனா பட்நாயக் அவர்கள் அறிவித்து, அத் தகவலை மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார் என்ற செய்தி, மிகவும் வரவேற்கத்தக்க, சிறந்த முடிவாகும்!
இப்படி ஒரு சூழல் முதல்முறையாக எழுந்தபோதே, 2011 ஆம் ஆண்டு, திராவிடர் கழகம் அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தந்தை பெரியார் சிலையை மறைக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையைப் பெற்றது.
2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தந்த இறுதி ஆணையில், தந்தை பெரியார் உள்ளிட்ட, மறைந்த தேசத் தலைவர்களின் சிலைகளை, மறைக்கக் கூடாது என்று தெளிவாக்கப்பட்டு இருந்தது. எனினும், ஒவ்வொரு தேர்தலிலும் (நேற்றுவரை) அதிகாரிகளுக்கு, நாம் இத்தீர்ப்பை எடுத்துக்காட்டி, சிலைகளை மறைப்பதைத் தடுத்து வந்தோம்.
இந்நிலையில், தேர்தல் ஆணையமே இத்தெளிவைத் தந்திருப்பது வரவேற்கத் தக்கதாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.3.2026
