காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய அடுப்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் தொழிலாளி.
சென்னை, மார்ச் 17- வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் விறகு அடுப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக சமையல் எரிவாயு
வணிக எரிவாயு உருளைகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வீட்டு உபயோக எரிவாயு உருளை பதிவு, ஏற்கெனவே பதிவு செய்த தேதியிலிருந்து, அடுத்த எரிவாயு உருளை பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களாக இருந்தது, நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், ஊரக பகுதிகளில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக எரிவாயு உருளையை அய்விஆர்எஸ், செயலி, மிஸ்டு கால் என பல்வேறு முறைகளில் முயன்றும் பதிவு செய்ய முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். வணிக சமையல் எரிவாயு கிடைக்காததால், பல உணவகங்கள் மூடப்பட்டன.
சில உணவகங்களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்பது என சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சில உண வகங்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வருகின்றன.
விறகு அடுப்புப் பயன்பாடு
மேலும் மாணவர் தங்கும் விடுதிகள், பயணியர் தங்கும் விடுதிகள், தரை தளம் மட்டும் கொண்ட தனி வீடுகள் போன்ற வற்றில் சுடுதண்ணீர் காய வைக்கவும், தேனீர்க்கடைகள் பலவற்றிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் விறகு அடுப்புகளின் பயன் பாடு அதிகரித்திருப் பதால், அவற்றின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
சென்னை பேசின் பாலம் அருகில் 24 மணி நேரமும் விறகு அடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசின் பாலம் அருகில், கூட்ஸ் ஷெட் சாலையில் இயங்கி வரும் எரிவாயு மற்றும் விறகு அடுப்பு உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்களிடம் கேட்ட போது, “இதற்கு முன்பு எரிவாயு அடுப்புகளை தான் அதிகமாக செய்வோம்.
நாளொன்றுக்கு 3 விறகு அடுப்புகள்வரை செய்வோம். இப்போது விறகு அடுப்பு ஆர்டர் அதிகரித் திருப்பதால், எரிவாயு அடுப்புகள் செய்வதை நிறுத்திவிட்டோம். நாளொன்றுக்கு 15 விறகு அடுப்புகளை செய்கிறோம்.
இதற்கான மூலப்பொருட்களான இரும்பு பிளேட் மற்றும் எல் வடிவ கம்பிகள் தேவை அதிகரித்துள்ள நிலையில், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் எங்கள் செய்கூலி உயரவில்லை” என்றனர்.
