சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விரிவான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என்றும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கான 7 நாட்களில் 2 நாட்கள் விடுமுறை என்பதால், மீதமுள்ள 5 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் விதிமுறைகளை உறுதிப்படுத்த 2,106 பறக்கும் படை வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், உரிய ஆவணங்கள் இன்றி அதிகப்படியான பணமோ அல்லது நகைகளோ கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆதாரங்களை வைத்திருந்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5.67 கோடி வாக்காளர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தகுந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
